விபசாரத்தைக் கட்டுப்படுத்த விபசாரக் கும்பல் மற்றும் விபசாரம் நடைபெற ஆதரவாக செயல்படும் தங்கும் விடுதிகளின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய காவல் துறையினர் சிலர் குற்றச் செயலில் ஈடுபடுவோர்களிடம் கல்லா கட்டி பங்கு பிரித்துக் கொள்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்நிலையில் கோவையைச் சேர்ந்தவர்கள் பிரான்சிலிஸ் ஜான் மற்றும் இவரது மனைவி கிளாரா ஜாய்ஸ் இருவரும் சில தினங்களுக்கு முன்பு கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்தனர். அப்போது ரயில் நிலையம் அருகே உள்ள ஒரு தங்கும் விடுதியில் விபசாரம் நடப்பதை அறிந்த அந்த தம்பதி, விபசாரக் கும்பலை காவல் துறையினரிடம் சிக்க வைக்க முடிவு செய்து காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளனர்.
புகார் செய்த அவர்கள் காவல் நிலையத்தினரை அந்த தங்கும் விடுதிக்கு சோதனைக்காக கையோடு அழைத்துக் கொண்டு நேரில் சென்றனர். காவல் துறையினர் நடத்திய சோதனையில் அங்கு விபசாரம் நடப்பது உறுதியானது. விபசாரத்தில் ஈடுபட்ட 2 பெண்கள், லாட்ஜ் ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் என 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
சோதனை நடந்தபோது தப்பிச் செல்ல முயன்றவர்களை பிரான்சிலிஸ் ஜான், கிளாரா ஜாய்ஸ் தம்பதியினர் காவல் துறையினருடன் இணைந்து விரட்டி பிடித்தனர். இந்த விபசார வேட்டை முழுவதையும் அவர்கள் காணொளியாகவும் பதிவு செய்துள்ளனர். மேலும் இதேபோல கன்னியாகுமரி மாநகர காவல் கட்டுப்பாட்டிலுள்ள பல பகுதிகளில் முறைகேடுகள் நடப்பதாகக் கூறி நேற்று அவர்கள் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனுவும் கொடுத்துள்ளனர்.
அந்தப் புகார் மனுவில் கன்னியாகுமரி விவேகானந்தபுரம் டோல்கேட்டில் நின்று சிலர் வாகனங்களுக்கு நுழைவுக் கட்டணம் வசூலித்துக் கொண்டு இருந்தனர். அவர்கள் எங்கள் காரை வழிமறித்து தகராறு செய்து தகாத முறையில் பேசினர். அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி இருந்தனர். புகாரின் பேரில் டோல்கேட் ஊழியர்கள் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை மட்டும் நடத்தினராம். ஆனால் தங்கும் விடுதியில் நடத்திய விபசார வேட்டையின்போது சிக்கிய விபசாரக் கும்பல்மீதும் காவல் துறையினர் நடவடிக்கை எடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தாமல் அந்த கும்பலிடம் வழக்கத்தை காட்டிலும் வலுவான பெரும் தொகையைக் கறந்துவிட்டு அனைவரையும் வழக்கில் இருந்து விடுவித்துவிட்டனராம்.
விபசார வேட்டையின்போது சிக்கிய விபசார கும்பலுக்கும், அந்த மாவட்டத்தைச் சேர்ந்த முக்கியமான அரசியல் பிரமுகர்களுக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் மேற்படி தகவல் அறிந்த விபசார கும்பலை காவல் துறையில் சிக்க வைத்த கோவையைச் சேர்ந்த தம்பதியினர், தாங்கள் பதிவு செய்த காணொளியை வாட்ஸ் ஆப்பில் வெளியிட்டுள்ளனர்.
மேலும் அவர்களிடம் கைவசமுள்ள அனைத்து ஆவணங்களையும் வைத்து கன்னியாகுமரி மாநகர காவல் துறையினருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர இருப்பதாகவும் கூறப்படுகிறது.
வாட்ஸ் ஆப்பில் வைரலாகப் பரவி வரும் விபசார வேட்டையின் போது பதிவு செய்யப்பட்ட அந்தக் காணொளி இங்கே இணைக்கப்பட்டுள்ளது.


