லண்டன்:
இங்கிலாந்தில் குடியேறும் வெளிநாட்டினருக்கு ஆங்கிலம் தெரியாவிட்டால் நாட்டை விட்டு வெளியே அனுப்பப்பட வேண்டிருவரும் என இங்கிலாந்து பிரதமர் கேமரூன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இங்கிலாந்தில் தற்போது வெளிநாட்டினர் அதிக அளவில் குடியேறியுள்ளனர். அவர்கள் இங்கிலாந்து குடியேற்ற உரிமை பெற்றுள்ளனர். தங்களது வாழ்க்கைத் துணை அதாவது கணவன் அல்லது மனைவியின் மூலம் குடியுரிமை விசா பெற்றுள்ளனர். அவர்களில் பெரும்பாலான பெண்களுக்கு ஆங்கிலம் தெரிவதில்லை. அதனால் அவர்கள் வெளி மனிதர்களுடன் தொடர்பு அற்றுக் கிடக்கின்றனர்.
இத்தகைய சூழ்நிலையை சமாளிக்க, இங்கிலாந்தில் புதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி இங்கிலாந்தில் தங்கியிருக்கும் வெளிநாட்டினர் சரளமாக ஆங்கிலத்தில் பேசும் திறன் பெற்றிருக்க வேண்டும். இல்லாவிட்டால் நாட்டை விட்டு வெளியேற்றப்படுவார்கள் என்று, இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிவிப்பில், ‘‘வாழ்க்கைத்துணை விசா’’ மூலம் இங்கிலாந்தில் 5 ஆண்டுகள் தங்கியிருப்பவர்கள் ஆங்கில அறிவில் மிகவும் பின் தங்கியுள்ளனர். அவர்கள் ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், திறமையை வளர்த்துக் கொள்ளவும் அரசு ரூ.200 கோடி ஒதுக்கியுள்ளது. இதன் மூலம் அவர்களுக்கு வீடுகள், பள்ளிகள் மற்றும் சமுதாய மையங்களில் ஆங்கில வகுப்புகள் நடத்தப்படும். அதில் அவர்கள் கற்றுத் தேர்ச்சி பெறலாம். அவர்களின் ஆங்கிலத் திறமை அறிய 2½ ஆண்டுகளில் தேர்வு நடத்தப்படும். அதில் அவர்கள் தேர்ச்சி பெறாவிட்டால் நாட்டை விட்டு வெளியேற்றப்படுவார்கள்’’ என எச்சரித்துள்ளார்.


