தமிழகத்திற்கு மோடி வருவதால் திருப்புமுனை ஏற்பட போகிறது என பாரதீய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை தியாகராய நகரில் உள்ள பாரதீய ஜனதா கட்சியின் தலைமை அலுவலகமான கமலாலயத்தில் குடியரசு தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. தேசியக் கொடியை தமிழிசை ஏற்றி வைத்தார்.
அதன் பின்னர் தமிழிசை செய்தியாளர்களிடம் கூறியதாவது :-
கோவை மாவட்டத்தில் வருகிற பிப்ரவரி 2ம்தேதி கோவையில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி வருகிறார். மேலும் அன்று அங்கு பாரதீய ஜனதா கட்சி பொதுக்கூட்டத்திலும் பங்கேற்கிறார்.
சட்டப்பேரவை தேர்தலை எதிர் கொள்ள பாரதீய ஜனதா கட்சி தயாராகி வருகிறது. கூட்டணி அமைப்பது குறித்து பல்வேறு கட்சிகளுடன் பேச்சு நடத்தி வருகிறோம். 234 பேரவைத் தொகுதி களுக்கும் முழுநேர ஊழியர்கள் நியமிக்கப்பட்டு, செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது.
கடந்த மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக திருச்சி, சென்னை வண்டலூர் ஆகிய இடங்களில் நடந்த பொதுக்கூட்டங்களில் நரேந்திர மோடி பேசினார். அது தமிழக அரசியலில் பெரும் திருப்பு முனையை ஏற்படுத்தியது. பாரதீய ஜனதா கட்சி தலைமையில் வலுவான கூட்டணி அமைந்தது. 19 சதவீத வாக்குகளும், 2 இடங்களில் வெற்றியும் கிடைத்தது.
இந்நிலையில், மோடியின் வருகை தமிழக அரசியலில் திருப்புமுனையை ஏற்படுத்தும். வலிமையான கூட்டணியை பாரதீய ஜனதா கட்சி ஏற்படுத்தும்.
தனியார் சித்த மருத்துவக் கல்லூரியில் 3 மாணவிகள் தற் கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. இந்த விவகாரத்தில் என்ன நடந்தது என்பது குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். நீதி விசாரணைக்கும் உத்தரவிட வேண்டும்.
இதற்கு காரணமானவர்கள், புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காத அரசு அதிகாரிகள் அனைவரின் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக கல்லூரிகளின் நிலவரம் குறித்து முதலமைச்சர் ஆய்வு செய்ய வேண் டும். சம்பவம் நடந்த பகுதிக்கு இதுவரை தமிழக அமைச்சர்கள் யாரும் நேரில் செல்லாதது வருத்தம் அளிக்கிறது என்று தமிழிசை செய்தியாளர்களிடம் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார் .
Related News Post: