பாரம்பரிய கட்டட ஆணைய வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய அறநிலையத் துறைக்கு உத்தரவு

சென்னை: பாரம்பரிய கட்டட ஆணையம் அமைப்பது தொடர்பான வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய இந்து சமய அறநிலையத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக பாரம்பரியம், கலாசாரத்தை பாதுகாக்கும் வகையில் தமிழ்நாடு பாரம்பரிய கட்டட ஆணையச் சட்டம் 2012 கொண்டு வரப்பட்டது. ஆனால், இந்தச் சட்டம் நடைமுறைப் படுத்துவதற்கான புதிய விதிகள், ஆணையம் ஆகியவற்றை இதுவரை அமைக்கவில்லை. மேலும், மாமல்லபுரத்தில் உலக பாரம்பரிய பகுதி மேலாண்மை ஆணையம் அமைப்பதற்கும் மத்திய மாநில அரசுகள் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இது குறித்த செய்தி, ஆங்கில நாளிதழ் ஒன்றில் வெளியானது. இதன் அடிப்படையில் சென்னை உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து பொதுநல வழக்காகப் பதிவு செய்தது. அந்த மனுவில், 17 உறுப்பினர்கள் அடங்கிய பாரம்பரிய கட்டடங்களுக்கான ஆணையத்தை அமைப்பதற்கு விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், மாமல்லபுரத்தின் தொல்லியல் நினைவுச் சின்னங்களைப் பாதுகாப்பதற்கு உலக பாரம்பரிய பகுதி மேலாண்மை ஆணையம் அமைக்கவும் விரைவில் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என கோரப்பட்டிருந்தது. இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.கே. கெளல், நீதிபதி டி.எஸ். சிவஞானம் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, பாரம்பரிய பாதுகாப்பு சமூகத்தின் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில்… தமிழகத்தில் ஆயிரம் ஆண்டு பழைமை வாய்ந்த, தொன்மைச் சிறப்புகள் கொண்ட கோயில்கள் 400-க்கும் மேல் உள்ளன. இந்த தொல்லியல் உலகத்தில் இந்தச் சிறப்பு தமிழகத்துக்கு மட்டும்தான் உள்ளது. ஆனால், இந்தக் கோயில்களை சீரமைக்கின்றோம் என்ற பெயரில் அதிகாரிகளும், கோயில் நிர்வாகிகளும் சீரழிவைச் செய்து வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து தமிழ்நாடு சுற்றுலா, அறநிலையத் துறை சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில்… எந்த ஒரு புராதானக் கட்டடங்களைச் சீரமைத்தாலும், அதற்கான நிபுணர்களின் கருத்தை தமிழக அரசு கோருகிறது என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, இந்த வழக்குக்கு உதவுவதற்காக மூத்த வழக்குரைஞர் பி.எஸ்.ராமனை நீதிபதிகள் நியமித்தனர். மேலும், இந்து சமய அறநிலையத் துறையை எதிர் மனுதாரராகச் சேர்த்து பதில் மனு தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த வழக்கு விசாரணை ஜூன் 9-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.