
மும்பை தாராவியைச் சேர்ந்த 18 வயது பெண் பல் துலக்கும் பேஸ்ட் என எண்ணி எலி விஷத்தால் பல் துலக்கி பரிதாபமாக உயிர் இழந்தார்.
இந்த சம்பவம் செப்டம்பர் 3 ஆம் தேதி காலை 10 மணியளவில் நடந்தது. அப்சானா கான் என்ற பெண், அன்று காலை எழுந்தவுடன் வழக்கம் போல் பல் துலக்கினார். தூக்க கலக்கத்தில் இருந்த அவர், பல் துலக்கும் பேஸ்ட்டின் அருகே இருந்த எலி விஷம் (Poison) இருந்த டியூபை பிரெஷ்ஷில் தடவிக்கொண்டு பல் துலக்கியதால் இந்த பரிதாபம் ஏற்பட்டது.
இருப்பினும், சுவை மற்றும் வாசனையின் வேறுபாட்டை உணர்ந்த பிறகு, அவர் உடனடியாக அந்த பேஸ்ட்டை துப்பி வாயை கொப்பளித்தார். அவருக்கு எந்தவித வேறுபாடும் தோன்றாததால், தன் தினசரி பணிகளை செய்யத் தொடங்கினார்.
ஆனால் சிறிது நேரம் கழித்து, அவருக்கு தலை சுற்றியது. வீட்டில் இருப்பவர்கள் திட்டுவார்கள் என்ற அச்சத்தால், தானே சில மருந்துகளை எடுத்துக்கொண்டார். ஆனால், அவருக்கு கடுமையான வயிற்று வலியும் அசவுகரியமும் ஏற்பட்டது. அவரது நிலை தொடர்ந்து மோசமானதால், அவர் மூன்று தனியார் மற்றும் பொது மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அவரது நிலைமை இன்னும் மோசமானது. அவர் தாய் தொடர்ந்து அவரை கேட்கவே, இறுதியாக, தான் தெரியாமல் செய்த தவறைப் பற்றி தன் குடும்பத்திடம் அவர் கூறினார்.
பின்னர், அவரது குடும்ப உறுப்பினர்கள் செப்டம்பர் 12 அன்று சர் ஜெஜே மருத்துவமனைக்கு அவரை சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.
இருப்பினும், பலவித முயற்சிகள் எடுத்தும் அவரைக் காப்பாற்ற முடியவில்லை. அன்று மாலை அப்சானா இறந்தார். அவரது தாய், தந்தை, தமக்கை, இரு தம்பிகள், உற்றார் உறவினர்கள் என அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை அளித்து அவர் உலகை விட்டுச் சென்றார்.
அப்சானா விஷம் குடித்ததால் இறந்ததாக மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும், தாராவி காவல் நிலையம், தடயவியல் பகுப்பாய்வுக்காக மாதிரிகளையும் சேகரித்துள்ளது. விரைவில், இந்த சம்பவம் குறித்து அவரது குடும்பத்தினரின் வாக்குமூலங்களை போலீசார் (Police) பதிவு செய்வார்கள் என கூறப்பட்டுள்ளது.
தற்போது இந்த வழக்கை தற்செயலான விபத்தால் ஏற்பட்ட மரணமாக பதிவு செய்துள்ளதாகவும், மேலும் விசாரணை நடந்து வருவதாகவும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.