வேலையிழந்த 300 பேர்: மன அழுத்தத்தில் செல்போன் டவரில் ஏறி பொறியாளர் போராட்டம்!

Published:

சென்னை:

உடன் பணி செய்த 300 பேர் வேலை இழந்த துயரத்தில், மன அழுத்தத்தில் இருந்த பொறியாளர் ஒருவர் சென்னையில் செல்போன் டவரில் ஏறி போராட்டம் நடத்தினார். அவரைக் காப்பாற்றிய போலீஸார் பொதுமக்கள் மீது கல்வீசித் தாக்குதல் நடத்தினார். அவர் பின்னர் கைது செய்யப்பட்டார்.

சென்னை சைதாப்பேட்டை, ஐந்து விளக்கு பகுதியில் உள்ள உயரமான செல்போன் டவரில் நேற்று பகல் 12 மணி அளவில் இளைஞர் ஒருவர் ஏறி திடீர் போராட்டம் நடத்தினார். கீழே குதித்து தற்கொலை செய்து கொள்ளப் போவதாக அவர் கூச்சல் போட்டார்.

இதனைக் கண்ட அந்தப் பகுதி இளைஞர்கள் திரண்டு வந்து, அவரைக் கீழே இறங்கச் சொன்னார்கள். இதனிடையே இளைஞர்கள் சிலர், செல்போன் டவரில் ஏறி, போராட்டத்தில் ஈடுபட்ட நபரைக் கீழே இறக்க முற்பட்டனர். ஆனால் அவர் கீழே இறங்க மறுத்தார். காப்பாற்ற முயன்ற இளைஞர்களை காலால் எட்டி உதைத்தார். இதை அடுத்து, இந்தச் செய்தி போலீஸாருக்கும், தீயணைப்புத் துறையினருக்கும் தெரிவிக்கப்பட்டது.

செய்தி அறிந்து அந்த இடத்துக்கு சைதாப்பேட்டை உதவி காவல் ஆணையர் தங்கராஜ் தலைமையில் போலீஸாரும், தீயணைக்கும் வீரர்களும் விரைந்து வந்தனர். செல்போன் டவரில் ஏறி, போராட்டத்தில் ஈடுபட்ட நபரை கீழே இறக்கினர். வெகு நேரப் போராட்டத்துக்குப் பின் மாலை 4 மணி அளவில் இது முடிவுக்கு வந்தது.

ALSO READ:  FIFA 2026: 32 அணிகள் சுற்றில் தேறியவை!

கீழே இறக்கப்பட்ட அந்த இளைஞர், போலீசார் மீதும், பொதுமக்கள் மீதும் கல்வீசித் தாக்கினார். இதனால் பொதுமக்கள் அவரைத் திருப்பித் தாக்கினர். இதைக் கண்ட போலீசார் அந்த நபரை பத்திரமாக சைதாப்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் திருச்சியைச் சேர்ந்த ஜெயபாலன் (வயது 24) என்றும், எலக்ட்ரிக்கல் பாடப்பிரிவில் என்ஜினீயரிங் படித்துள்ள அவர், சென்னை தரமணி டைட்டல் பார்க்கில் உள்ள நிறுவனம் ஒன்றில் மாதம் ரூ.10,500 சம்பளத்தில் வேலை பார்த்ததாகவும், சென்னையின் ஏற்பட்ட வெள்ளத்தின் போது, வேலைக்கு போக முடியாததால் கம்பெனி நிர்வாகம் வேலை நீக்கம் செய்து விட்டதாகவும் தெரிவித்தார்.

மேலும் தனது தோழிக்கும் வேலை போய் விட்டதாகவும், அவருடன் வேலை செய்த 300 பேரின் வேலை பறிபோனதாகவும், தங்களுக்கு 1 மாத சம்பளமும் கொடுக்கப்படவில்லை என்றும் தெரிவித்த அவர், வேலை இழந்த தங்களுக்கு மீண்டும் வேலை கேட்டும், 1 மாத சம்பள பாக்கி தொகையை கேட்டும், செல்போன் டவரில் ஏறி போராட்டம் நடத்தியதாகக் கூறினார்.

ALSO READ:  விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் மத்திய பாஜக அரசு: நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன்!

இருப்பினும், பொதுமக்கள் மீதும், போலீசார் மீதும் தாக்குதல் நடத்தியதால், ஜெயபாலன் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, ஜெயபாலன் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்படுவார் என்று கூறிய போலீஸார், ஜெயபாலன், மிகுந்த மன அழுத்தத்துடன் காணப்படுவதாகவும், இதனால் நீதிமன்றம் அனுமதித்தால், அவரை சிகிச்சைக்கு உட்படுத்த ஏற்பாடு செய்யப்படும் என்றும் கூறினர்.

Related articles

Recent articles

spot_img