திமுக., கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள்! 2 தொகுதிகள் ஒதுக்கீடு!

சற்றுமுன் தமிழகம்

thirumavalavan stalin - 2026

சென்னை அண்ணா அறிவாலயத்தில் தொகுதிப் பங்கீடு குறித்து திமுக உடன் விசிக கட்சியினர் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். அதில், மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் விசிகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாயின.

மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியின் நலன் கருதி, போட்டியிடும் சின்னம் குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்று திருமாவளவன் கூறினார். எனவே அவர் உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிடும் வாய்ப்பு உள்ளது. மோதிரம் சின்னத்தில் போட்டியிட வாய்ப்பு இல்லை என்று அவரது பேச்சில் இருந்து தெரிகிறது.

கூட்டணி கட்சிகளுடன் தி.மு.க. இன்று இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை  மேற்கொண்டு வருகிறது. இதில், விடுதலை சிறுத்தைகள் கட்சி, ம.தி.மு.க., கம்யூனிஸ்ட் கட்சிகள் கலந்து கொண்டிருக்கின்றன. இவர்களுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக தி.மு.க. இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகளும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சிக்கு தலா ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டு உள்ளது.

மீதமுள்ள தோழமைக் கட்சிகளான விடுதலை சிறுத்தைகள் கட்சி, ம.தி.மு.க., இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு செய்ய தி.மு.க. தீவிரம் காட்டி வருகிறது.

அந்த கட்சிகளுடன் இன்று 2ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. முன்னதாக, தி.மு.க. தலைவர் ஸ்டாலின், சென்னை அண்ணா அறிவாலயத்தில் தொகுதி பங்கீடு குழுவினருடன் நேற்று ஆலோசனை நடத்தினார்.

தேமுதிக., தங்கள் கூட்டணியில் இணையும் வாய்ப்பு இருப்பதாக திமுக.,வினர் கருதியதால், மற்ற கட்சியினருக்கு தொகுதிகளை ஒதுக்கீடு செய்வதில் தாமதம் ஏற்படுத்தி வந்தனர். இன்னமும் தேர்தல் தேதி அறிவிக்கப் படாத நிலையில், கூட்டணி குறித்தும் தொகுதிப் பங்கீடு குறித்தும் முன்னதாகவே ஒவ்வொரு கட்சியும் இடம் பிடிக்க போட்டி போட்டு வருகின்றன.

ஆனால் தேமுதிக., வழக்கம் போல், கடைசி நிமிடம் வரை இழுத்து, இங்கா அங்கா என்று ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் வைத்துக் கொண்டு அலைபாய்ந்து வருகிறது. இதனால் மற்ற கட்சியினருக்கு தொகுதி ஒதுக்குவதில் கூட்டணிக்கு தலைமை தாங்கும் கட்சிகள் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.