32 வயதுப் பெண் கால் டாக்ஸியினுள் பலாத்காரம் : டிரைவர் கைது

call-taxiபுது தில்லி: உபேர் கால் டாக்ஸியில் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு 4 மாதங்கள் ஆன நிலையில், மீண்டும் ஒரு சம்பவம் அதே போல் தில்லியில் அரங்கேறியிருக்கிறது. வியாழக்கிழமை இரவு தில்லி மெட்ரோ நிலையத்துக்கு கட்டணத்தைப் பகிர்ந்து கொண்டு ஷேர் டாக்ஸியில் சென்ற பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். டாக்ஸி டிரைவர் பின்னர் கைது செய்யப்பட்டார். மேற்கு தில்லி பகுதியில் உள்ள ரஜௌரி கார்டனில் உள்ள ஒரு மாலில் வேலை செய்யும் தில்லி துவாரஹா – மதுவிஹார் பகுதியைச் சேர்ந்த 32 வயது பெண் இரவு 9.30 மணியளவில் அருகில் உள்ள மெட்ரோ ரயில் நிலையத்துக்கு வாடகைக் காரில் ஏறியுள்ளார். DL 1 T 7516 என்ற எண்ணுள்ள அந்த மாருதி ஈக்கோ காரில் வேறு சில பயணிகளும் இருந்துள்ளனர். திடீரென்று ஓட்டுநர் காரை மெதுவாக ஓட்டியுள்ளார். அப்போது பயணிகள் ஏன் என்று கேட்டதற்கு காரின் சிஎன்ஜி கேஸ் எரிபொருள் தீர்ந்துவிட்டது என்று கூறியுள்ளார். உடனே மற்ற பயணிகள் இறங்கிச் சென்றுள்ளனர். அதன் பிறகு காரில் பக்கத்து இருக்கைக்கு மெதுவாகத் தாவி, கதவைத் திறப்பது போல் முயன்று, சிஎன்ஜி செக் செய்வதாகச் சொல்லி, அந்தப் பெண்ணின் மீது தாவி ஏறியுள்ளார். ஏதோ விபரீதமாக நடக்கப் போவதை அறிந்து அந்தப் பெண் கூச்சலிட்டுள்ளார். ஆனால், தொடர்ந்து அந்தப் பெண்ணை கார் ஓட்டுநர் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். அந்தப் பெண் மறுத்ததால் பெண்ணின் முகத்தில் கத்தியால் குத்தி ஆடைகளைக் கிழித்து, கைபேசியையும் பறித்து கீழே வீசியுள்ளார். தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்தால் கொலை செய்துவிடுவதாக மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். காரில் பெண்ணின் கூச்சல் சத்தம் கேட்டு அந்த வழியாக வாகனங்களில் சென்றவர்கள் போலீஸூக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து குறிப்பிட்ட காரை ரோந்துப் படை போலீஸார் துரத்திச் சென்று பிடித்தனர். உடனே காரை நிறுத்தி விட்டு தப்பி ஓடிய அந்த ஓட்டுநரை போலீஸார் துரத்திச் சென்று பிடித்து கைது செய்தனர். பின்னர் அவர் குறித்து விசாரித்ததில் அவரது பெயர் ரமேஷ் குமார் (40) என்றும் இவர் நாங்கல்லி சகரவதி பகுதியில் மனைவி 3 குழந்தைகளுடன் வசித்து வருவதாகவும் கூறியுள்ளார். இவர் 8 ஆண்டுகளாக கார் ஓட்டி வருகிறார் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரது கார் பறிமுதல் செய்யப்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பாக தெற்கு துவாரகா போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பாதிக்கப்பட்ட பெண்ணை போலீசார் மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். இந்தப் பெண்ணுக்கு ஒரு குழந்தை உள்ளது. முன்பு உபேர் மூலம் நடந்த தவறு, இப்போது காலி-பீலி கறுப்பு – மஞ்சள் டாக்ஸி டிரைவர் மூலம் நடந்துள்ளது. இவர் கால் டாக்ஸி விதிகளை மீறி, வெவ்வேறு நபர்களை ஒரே காரில் ஏற்றிச் சென்றுள்ளது தெரியவந்தது.

Donate to Dhinasari News! Independent journalism that speaks truth to power and is free of corporate and political control is possible only when people start contributing towards the same. Please consider donating towards this endeavour to fight fake news and misinformation.