கமல்ஹாசனை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும்: வலுக்கும் கோரிக்கை

சென்னை: கமல்ஹாசன் நடித்து வெளிவரவிருக்கும் படம் உத்தமவில்லன். இந்தப் படத்தில், இந்துக்களின் உணர்வுகளைக் கொச்சைப் படுத்தி பாடல் காட்சிகள் வரிகள் உள்ளதாகவும், அவற்றை நீக்காமல் படத்தை வெளியிடக் கூடாது என்றும், தேச ஒற்றுமைக்குக் குந்தகம் ஏற்படுத்தும் கமல் ஹாசனை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்றும் இந்து அமைப்பினர் குரல் கொடுத்து வருகின்றனர். விஸ்வரூபம் படத்தை அடுத்து கமல்ஹாசன் நடித்து வெளிவர உள்ள உத்தம வில்லன் படத்தை லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் தயாரித்துள்ளது. இந்தப் படத்தை நடிகர் ரமேஷ் அரவிந்த் இயக்கியுள்ளார். மே 1 ஆம் தேதி வெளியாக உள்ள இப்படம் குறித்து பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன. உத்தம வில்லனில் இடம்பெறும் வில்லுப்பாட்டு பாடல் காட்சியில் பாடல் வரிகளில் இந்து கடவுளை விமர்சித்து இருப்பதாகவும், அந்த சர்ச்சைக்க்குரிய காட்சியை நீக்காமல் படத்தை வெளியிடக் கூடாது என்றும் கூறி ஹிந்து அமைப்பினர் காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்துள்ளனர். இந்த நிலையில் இந்திய தேசிய லீக் கட்சியும் இப்போது களத்தில் குதித்துள்ளது. இன்று சென்னை பெரு நகர காவல் ஆணையரைச் சந்தித்த அக்கட்சியின் பொறுப்பாளர் நாசர் ஒரு புகார் மனுவைத் தந்துள்ளார். அதில், நடிகர் கமல்ஹாசன் தொடர்ந்து மதங்களை இழிவுபடுத்தி வருகிறார். முன்பு விஸ்வரூபம் படத்தில் முஸ்லிம்களின் உணர்வுகளைப் புண்படுத்தினார். இப்போது உத்தம வில்லன் படத்தில் இந்துக்களின் உணர்வுகளைக் காயப் படுத்தியுள்ளார். ஒரு நடிகராக அவர் தன் வேலையைப் பார்க்காமல், தொடர்ந்து மதங்களையும் அவற்றை மதிக்கும் மக்களையும் காயப்படுத்தி வருகிறார். எனவே சமூக அமைதி, நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் கமல் ஹாசனை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.