
தேர்தல் என்று வந்துவிட்டால் ஒவ்வொரு கட்சியும் செய்யும் முதல் வேலை ஒரு நல்ல மார்கெட்டிங் – விளம்பர நிறுவனத்தைப் பிடித்து தமது கட்சிக்கான விளம்பர – பிரசார யுக்தியை வடிவமைக்கச் சொல்வதுதான். பெருச்சாளி என்ற மலையாளப்படத்தில் அமெரிக்கத் தேர்தலுக்கு நம்ம ஊர் லாலேட்டனை கேம்பெய்ன் மேனேஜராக அழைப்பதாகக் காட்டியிருப்பார்கள். உண்மையில் இதற்கு நேர்மானதுதான் நடந்துவருகிறது. அதாவது இந்தியக் கட்சிகள் அமெரிக்க நிறுவனங்களைத் தமது பிரசார வியூகங்களை வடிவமைக்கப் பயன்படுத்திவருகின்றன.
சென்ற நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் எல்லாம் நரேந்திர மோதியை ஹிட்லரைவிட மோசம் என்று ஒரே கீறல் விழுந்த அபஸ்வரத்தையே தொடர்ந்து பாடிக் கொண்டிருந்தார்கள். பாஜகவோ குஜராத்தில் நரேந்திர மோதி தனது ஆட்சிக்காலத்தில் செய்து காட்டிய வளர்ச்சி மாடலை முன்வைத்துத் தேர்தலைச் சந்தித்தது. ஊடகங்கள் முழுவதும் தமது கைகளில் இருந்த பிறகும் காங்கிரஸால் சென்ற முறை வெல்ல முடியாமல் போனதற்கு அவர்களுடைய எதிர்மறை பிரசாரமும் பாஜகவின் நேர்மறைப் பிரசாரமும்தான் காரணம். இந்த அணுகுமுறையை பாஜகவுக்கு வடிவமைத்துக் கொடுத்ததில் அமெரிக்க நிறுவனத்துக்குக் கணிசமான பங்கு உண்டு.
காங்கிரஸுக்கு ஆலோசனை வழங்கிய அமெரிக்க நிறுவனம் உண்மையில் எதிர்மறை பிரசாரத்தின் எதிர்மறை விளைவைப் பார்த்துத் தன் வழிமுறையை மாற்றிக்கொண்டிருக்கவேண்டும். ஆனால், அவர்களோ நாம் முன்னெடுத்த எதிர்மறை போதுமானதாக இருந்திருக்கவில்லை; எனவே அதன் வீரியத்தைக் கூட்டவேண்டும் என்று முடிவெடுத்தார்கள். நாலு பேர் கல்லால் அடித்தால், நாம் செய்வது தவறு என்று உணர்ந்து பாம்பால் அமுதத்தையா சுரக்கமுடியும். அது கூடுதல் விஷத்தைத்தானே உற்பத்தி செய்து தன்னைப் பாதுகாக்க முற்படும். அதே கதையைத்தான் காங்கிரஸும் அதன் அமெரிக்க வழிகாட்டி நிறுவனமும் பின்பற்றின.
அதாவது, தேர்தல் நேரத்தில் மட்டுமல்ல; நரேந்திரமோதியின் அரசு ஆட்சியில் இருக்கும் ஐந்து வருட காலமும் அந்த எதிர்மறைப் பிரசாரத்தை முன்னெடுக்கவேண்டும் என்று சபதம் செய்துகொண்டார்கள். அதற்குத் தோதாக ஐந்தாண்டுகளில் பல சட்டமன்றத் தேர்தல்கள் வந்த வண்ணம் இருந்தன. எனவே தேர்தல் வியூக நிறுவனத்துக்கு தொடர்ந்து கேம்பெய்ன் மேனேஜ்மெண்ட் வேலைகள் இருந்தவண்ணம் இருந்தன.
பராக் ஒபாமா இந்தியாவுக்கு வந்து அதற்கான பிள்ளையார் சுழியைப் போட்டுவிட்டுச் சென்றார். இந்தியாவில் சகிப்புத் தன்மை குறைகிறதே; இந்தியர்கள் இந்துக்கள் இந்துக்கள் அல்லாதவர்கள் என்று இரு அணியாகப் பிரிகிறார்களே என்று ஓநாய்க்கண்ணீர் வடித்துவிட்டுச் சென்றார்.
மன்மோகன் சிங் மூலம் முன்னெடுக்கவைக்கப்பட்ட தாராளமயமாக்கல்- உலகமயமாக்கலால் நம் நாட்டுக்குள் நுழைந்த அந்நிய முதலீடுகளால் முதலில் கைப்பற்றப்பட்ட ஊடகத்துறை, அது வளர்த்துவிடும் அறிவுஜீவிகள், காங்கிரஸ் ஆட்சியில் நியமனம் பெற்ற அதிகாரவர்க்கத்தினர் அந்தக் குறிப்பைப் புரிந்துகொண்டு செயல்படத் தொடங்கினார்கள்.
முஸ்லிம்களும் பட்டியல் ஜாதியினருக்கும் இந்தியாவில் வாழவே முடியாத நிலை இருக்கிறது… எங்களுக்குக் கொடுத்த விருதுகளைத் திரும்பத் தருகிறோம் என்று தொடங்கி ரோஹித் வெமுலா மரணம், பசுவதை, கன்னையா குமார், ஹ்ரித்திக் படேல்,ஜே.என்.யு செயல்பாடுகள், ஆசிஃபா மரணம், உத்தரபிரதேசத்தில் குழந்தைகள் மரணம் என குறிப்பிட்ட இடைவெளிகளில் பாஜக அரசுக்கு எதிரான மிகைப் போலிப் பிரசாரங்கள் முழுக்கவும் எதிர்மறைத் தொனியில் முன்னெடுக்கப்பட்டன.
இந்துத்துவக் கருத்தியலுக்கு எதிரானவர்கள் மீது நடந்த வன்முறைகளைவிட இந்துத்துவர்கள் மீது நடந்த வன்முறைகள் மிக மிக அதிகம். இத்தனைக்கும் இந்துத்துவர்கள் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும்போதே இந்த நிலை. ஆனால், இந்த இந்துத்துவ அரசாங்கமே ஃபாசிஸ அரசு என்ற திரிபுச் சித்திரம் ஒன்றை வெறுப்பின் தூரிகையை பொய்களின் பல வண்ணக் கலவையில் தோய்த்து மிகையுணர்ச்சியின் பரந்து விரிந்த கான்வாஸில் விடாது வரைந்துவந்திருக்கிறார்கள்.
தமிழகத்தில் சல்லிகட்டு எழுச்சி, நீட் எதிர்ப்பு, ஹைட்ரோகார்பன், நியூட்ரினோ எதிர்ப்பு, விவசாய பாதுகாப்பு என 24 மணிநேரமும் தமிழகம் கொதிநிலையிலேயே வைக்கப்பட்டது.
நரேந்திர மோதியின் கேம்பெய்ன் ஆலோசகர்களோ சென்ற நாடாளுமன்றத் தேர்தலில் கொடுத்த அதே ஆலோசனையையே அவருக்குக் கொடுத்துவருகிறார்கள். வளர்ச்சி… வளர்ச்சி… வளர்ச்சி..!
அவரும் வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டு உலக நாடுகளில் இந்தியாவின் பொருளாதார பலத்தை எடுத்துச் சொல்லி நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டுசெல்வதிலேயே மிக அதிக கவனத்தையும் செலுத்தினார். பாகிஸ்தான் தொடர்பான பிரச்னையில் உலக நாடுகளை இந்தியாவின் பக்கம் நிற்கச் செய்திருக்கிறார்.
கங்கையைச் சுத்தப்படுத்துதல், யோகாவை உலக அரங்குக்குக் கொண்டு செல்லுதல், சிவராத்திரி கொண்டாட்டம், கோவில் யாத்திரைகள் என இந்து தேசியவாதியாகச் செயல்பட்டதைவிடப் பல மடங்கு அதிகமாக இந்தியா ஃபர்ஸ்ட் என்றும் அனைவரையும் அரவணைத்து… அனைவரின் பொருளாதார வளர்ச்சி என்ற இலக்குடனுமே செயல்பட்டிருக்கிறார்.
டிமானிடைசேஷன், டிஜிட்டலைசேஷன், ஜி.எஸ்.டி, வருமான வரி சீர்திருத்தங்கள், முத்ரா கடனுதவி, ஸ்வச் பாரத், மேக் இன் இந்தியா என அவர் முன்னெடுத்தவற்றில் பெரும்பாலானவை எந்த மதச் சார்பும் இல்லாத நலத்திட்டங்களே.
ஆனால், காங்கிரஸோ மாநில உரிமையை மதிக்கிறேன் என்ற வேஷத்தில் தொடங்கி சிறுபான்மையினருக்கு ஆதரவாக நடக்கிறேன் என்று சொல்வதுவரை அனைத்துவகைகளிலும் இந்திய தேசியத்தையும் இந்துப் பாரம்பரியத்தையும் அழிக்கும் செயல்களை முடுக்கிவருகிறது. உலக இஸ்லாமிய நாடுகளின் நன் மதிப்பை நரேந்திரமோதி வென்றுவருகிறார். உள்நாட்டிலோ காங்கிரஸ் பிரதம வேட்பாளர் இஸ்லாமியர் பெரும்பான்மையாக இருக்கும் வயநாட்டில் சென்று போட்டியிடுகிறார். ஏனென்றால் அவர்கள் உள்நாட்டு இஸ்லாமியர்களை நரேந்திர மோதிக்கு எதிராகத் திரும்பச் செய்வதில் வெற்றிகண்டிருக்கிறார்கள்.
நரேந்திர மோதி அனைவரையும் அரவணைத்துச் செல்லும் இந்திய நல்லிணக்க ஆலமரத்தின் சிறு கன்றை உலகம் முழுவதும் சென்று நட்டுவிட்டுவருகிறார். அவருடைய ஊரின் மையத்தில் அனைவருக்கும் நிழல் தரும் அந்தப் பழம் பெரும் மரத்தின் தாய் மடியில் பாதரசத்தை ஊற்றும் பணியை காங்கிரஸ் செய்துவருகிறது.
காங்கிரஸின் அதே எதிர்மறைப் பிரசாரமும் பாஜகவின் அதே வளர்ச்சிப் பிரசாரமும் இந்தத் தேர்தலில் என்ன விளைவை ஏற்படுத்தும்?
(தொடரும்)
*



