காலையில் பிரசாரம் செய்தார்… மதியத்தில் மாரடைப்பு! ஜே.கே.ரித்திஷ் திடீர் மரணம்!

Published:

jkriththish - 2026

நடிகரும் முன்னாள் எம்.பி.,யுமான ஜே.கே.ரித்திஷ் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 46.

1973ஆம் ஆண்டு மார்ச் 5ஆம் தேதி இலங்கையில் பிறந்தவர். இவரது இயற்பெயர் முகவை குமார். இலங்கையில் இருந்து வந்த பின்னர், ராமநாதபுரம் மாவட்டத்தில் வளர்ந்தார். பின்னாளில் சினிமா துறையில் கால் பதித்தார். கானல் நீர், நாயகன், பெண் சிங்கம் மேலும், அண்மையில் வெளியான எல்கேஜி உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

சினிமாத் துறையை அடுத்து அரசியலிலும் ஈடுபட்டார். கடந்த 2009 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக., சார்பில் போட்டியிட்டு, ராமநாதபுரம் தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்வானார். பின்னாளில் திமுக.,வை விட்டு விலகி அதிமுக.,வில் சேர்ந்தார்.

நடிகர் சங்கம் சார்பில் விஷால் அணி போட்டியிட்ட போது, அவரது வெற்றிக்கு பாடுபட்டார். பின்னர் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் விஷால் போட்டியிட்ட போது ஏற்பட்ட மன வேறுபாட்டால், விஷாலுக்கு எதிராக திரும்பினார்.

கடந்த சில மாதங்களாக இதயக் கோளாறால் பாதிக்கப்பட்டு, ஆஞ்சியோ சிகிச்சை மேற்கொண்டார். பின் உடல்நலம் தேறிய நிலையில் அதிமுக.,வுக்கு ஆதரவாக பிரசாரம் செய்து வந்தார். இன்றும் (ஏப்.13) அவர் ராமநாதபுரத்தில் சில இடங்களில் பிரசாரம் செய்தார்.

ALSO READ:  தாமிரபரணிக் கரை ஆலயத்தில்... வழிபாட்டில் திருவள்ளுவர்!

பிரசாரத்துக்குப் பின்னர் ராமநாதபுரத்தில் உள்ள வீட்டில் உணவருந்தி ஓய்வெடுத்த போது, அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதை அடுத்து அவர் உடனே அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப் பட்டார். ஆனால், வழியிலே அவர் உயிர் பிரிந்து விட்டதாக மருத்துவர்கள் கூறினர்.

இதை அடுத்து, அவரது உடல் வீட்டுக்குக் கொண்டு வரப் பட்டது. ஆனால் திடீரென அவருக்கு இதயத் துடிப்பு உள்ளதாக உறவினர்கள் தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதன் பின்னர் மீண்டும் தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் மரணத்தை உறுதி செய்தனர்.

மறைந்த ஜே.கே.ரித்தீஷுக்கு ஜோதிஸ்வரி என்ற மனைவியும், ஆரிக் ரோஷன் என்ற 11 வயது மகனும் உள்ளனர். ரித்திஷின் மறைவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுக., தலைவர்கள், நிர்வாகிகள், கூட்டணிக் கட்சியினர், நடிகர் சங்க நிர்வாகிகள் என பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ஜே.கே.ரித்திஷின் உடல் ராமநாதபுரத்தில் உள்ள அவரது இல்லத்திலேயே அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இறுதிச் சடங்குகள் நாளை நடைபெறுகின்றன.

ALSO READ:  ஸ்ரீ வைணவப் பேரறிஞர் ஏ.வி. ரங்காச்சாரி பரமபதித்தார்!

Related articles

Recent articles

spot_img