அரசியல்வாதிகள் தங்கள் வாகனங்களில் கட்சிக் கொடிகள் கட்டிக் கொள்ள சட்டத்தில் இடமில்லை!

சற்றுமுன் தமிழகம் பொது தகவல்கள் மதுரை லைஃப் ஸ்டைல்

madurai high court - 2026

அரசியல்வாதிகள் தங்களின் வாகனங்களில் கட்சிக்கொடி கட்டிக்கொள்ள சட்டத்தில் இடமில்லை என்று  போக்குவரத்து துறை கூறியுள்ளது.

மதுரையை சேர்ந்த வழக்குரைஞர் ஸ்டாலின், சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு மனு தாக்கல் செய்தார்.

அதில், அதிகரித்து வரும் சாலை விபத்துகளை தடுக்கும் வகையில், இருசக்கர நான்கு சக்கர வாகனங்களில் அனுமதியின்றி பொருத்தப்பட்டுள்ள எல்.இ.டி. விளக்குகளை அப்புறப்படுத்துவது, சாலைகள் இணைப்புப் பகுதியில் உயர்கோபுர மின்விளக்கு அமைப்பது, வளைவுப் பகுதியில் சிவப்பு எச்சரிக்கை விளக்கு பொருத்துவது, சாலைகள் நடுவே அரளி செடிகள் நடப்பட வேண்டியது உள்ளிட்ட பணிகள் முழுமையாக செய்யப்படவில்லை. இதனைச் சரி செய்யவும், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும் என கூறப்பட்டு இருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் இருவரும் சில கேள்விகளை முன்வைத்தனர். அரசியல் கட்சியினர் தங்களின் வாகனங்களில் கட்சிக் கொடி கட்டிக் கொள்வது, தலைவர்களின் படங்களை வைத்துக் கொள்வது, தங்களது பதவிகளை வாகனங்களில் பெரிதாக எழுதிக் கொள்வது போன்றவற்றை செய்யாமல் இருந்தாலே பெரும்பாலான விபத்துகள் தடுக்கப்படும். இதுபோன்ற செயல்களுக்கு மோட்டார் வாகன சட்டப்படி அனுமதி உள்ளதா? இந்த நடவடிக்கைகளுக்கு ஏன் தடை விதிக்கக்கூடாது? என கேள்வி எழுப்பினர்.

இந்தக் கேள்விகளுக்கான பதில்களை அளிக்கக் கூறி, தமிழக உள்துறை செயலாளர், போக்குவரத்துத்துறை முதன்மை செயலாளர் விளக்கம் அளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதைத் தொடர்ந்து வழக்கு இன்றைய தினத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த மனு மீதான விசாரணை இன்று தொடர்ந்து நடைபெற்றது. அப்போது, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் போக்குவரத்துத் துறை தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், அரசியல்வாதிகள் தங்களது வாகனங்களில் கட்சிக் கொடி கட்டுவதற்கு மோட்டார் வாகன சட்டத்தில் இடமில்லை. தலைவர்களின் படங்களை வைத்துக் கொள்ளவும், தங்களது பதவிகளை வாகனங்களில் பெரிதாக எழுதிக் கொள்ளவும் அனுமதி இல்லை என தெரிவிக்கப் பட்டுள்ளது. இதை அடுத்து, இந்த வழக்கில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.