தமிழகத்தில் ‘அக்னி’ நட்சத்திரம் இன்று (சனிக்கிழமை) விடைபெறுகிறது. இருந்தபோதிலும் மேலும் 3 நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகம் இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.தமிழகத்தில் ‘அக்னி நட்சத்திரம்’ எனப்படும் ‘கத்திரி’ வெயில் காலம் கடந்த 4-ந் தேதி தொடங்கியது. சென்னை, வேலூர், கடலூர் உள்பட தமிழகத்தின் பெரும்பாலான நகரங்களில் முதல் 13 நாட்களும், கடைசி 9 நாட்களும் 100 டிகிரிக்கு மேல் சுட்டெரித்த கத்திரி வெயில் காலம் இன்றுடன் விடைபெறுகிறது.இடையில் 17, 18, 19 ஆகிய 3 நாட்கள் கனமழை பெய்து, கத்திரி வெயிலுக்கு ஓய்வு கொடுத்தது. சென்னையில் அதிகபட்சமாக கடந்த 26-ந் தேதி 106.16 டிகிரி வெயில் பதிவானது.கத்திரி வெயில் இன்று விடை பெற்றாலும், வெயிலின் தாக்கம் வரும் 3 நாட்கள் கூடுதலாக இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-தரைக்காற்று தொடர்ந்து மேற்கில் இருந்து கிழக்கு நோக்கி வீசி வருகிறது. கடல்காற்று கிழக்கில் இருந்து மேற்கு நோக்கி தாமதமாக வீசுகிறது. எனவே வரும் 3 நாட்களில் வெயிலின் அளவு வழக்கத்தை விட ஒரு டிகிரியோ அல்லது 2 டிகிரியோ கூடுதலாக இருக்கும். அதன்பின்னர் வெயிலின் தாக்கம் படிப்படியாக குறைய தொடங்கும்.தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் (இன்று) ஒரு சில இடங்களில் கோடைமழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளது. வெப்ப சலனம் காரணமாகவும் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு உண்டு. சென்னை நகரை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.
[wp_ad_camp_1]



