தங்க தமிழ்செல்வன் அமமுக.,வை விட்டு வெளியேற வேண்டும்; இல்லாவிட்டால் வெளியேற்றப்படுவார்!

Published:

thangathamilselvan - 2026

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இருந்து தங்க தமிழ்செல்வன் வெளியேற வேண்டும் அல்லது அவர் வெளியேற்றப்படுவார் என்று கூறுகின்றனர் அக்கட்சியினர்.. இதற்கு பின்னணியில் தற்போது நடைபெற்றுள்ள ஒரு சம்பவம் காரணமாக கூறப்படுகிறது!

டி.டி.வி. தினகரனுக்கும் தங்க தமிழ்ச்செல்வனுக்கும் தேர்தல் நடந்து முடிந்ததிலிருந்தே வாய்க்கால் வரப்பு தகராறு தொடங்கி விட்டது. குறிப்பாக கரூரைச் சேர்ந்த அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் வலது கரமாக செயல்பட்ட செந்தில்பாலாஜி திமுகவுக்கு தாவிய பிறகு அவர் புத்திசாலித்தனமாக செயல்பட்டதாக தினகரன் கூறியதிலிருந்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இருந்த வேறு சிலரும் புத்திசாலித்தனமாக செயல்பட யோசித்தனர். அதன் விளைவு தங்கதமிழ்செல்வன் சற்று அதிகமாகவே குரல் எழுப்ப தொடங்கிவிட்டார். அவரது புத்திசாலித்தனம்  இப்போது அவரை அதிமுக பக்கம் தாவுவதற்கு தயாராக்கி இருக்கிறது.

இந்நிலையில் தற்போது ஆடியோ பதிவு ஒன்று சமூக தளத்தில் வைரலாகி வருகிறது.

அந்த ஆடியோவில், டி.டி.வி. தினகரனின் உதவியாளரும் தங்க தமிழ்ச்செல்வனும் பேசிக் கொள்கிறார்கள். டி.டி.வி. தினகரன் எங்கே என தங்க தமிழ்ச்செல்வன் கேட்க… அதற்கு அந்த உதவியாளர், “அண்ணன் இல்லை. நான் ஊருக்கு வந்துவிட்டேன்” என்கிறார்.

ALSO READ:  திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

அந்த பதிலைக் கேட்டு கோபப்படும் தங்க தமிழ்ச்செல்வன், “இந்த மாதிரி பொட்டத்தனமான அரசியல் பண்றதை நிறுத்தச் சொல்லுப்பா.  நான் விஸ்வரூபம் எடுத்தா, நீங்க அழிஞ்சி போவீங்க. நான் நல்லவன். நேற்று நீங்க தேனியில கூட்டம் போட்டீங்க. நாளைக்கு நான் மதுரைல கூட்டம் போடவா? என்ன நடக்குதுனு பாரு. இந்த பேடித்தனமான அரசியல பண்ண வேணாம்னு உங்க அண்ணன்ட சொல்லிடு” என்று கடுமையாகப் பேசுகிறார்.

இந்த ஆடியோவின் அரசியல் பின்னணி குறித்து கூறப்படுவதாவது…

மதுரை எம்.பி தேர்தலில் அ.ம.மு.க வேட்பாளராக நிறுத்தப்பட்ட டேவிட் அண்ணாதுரை, உசிலம்பட்டி முன்னாள் எம்.எல்.ஏ-வும், திருப்பரங்குன்றம் அ.ம.மு.க வேட்பாளருமான மகேந்திரன் ஆகிய இருவரது தலைமையில் தேனியில் ஒரு கூட்டம் போட்டுள்ளனர். ,தங்க தமிழ்ச்செல்வன், அ.தி.மு.க’வில் இணையப்போகிறார் எனத் தகவல் வெளியான நிலையில், தங்க தமிழ்ச்செல்வனுக்குப் பதிலாக புதிய நபரை நியமிப்பது தொடர்பாக அக்கூட்டத்தில் பேசப்பட்டதாம்.

தங்க தமிழ்ச்செல்வனுக்கு பதிலாக , தேனிக்கு புதிய நிர்வாகியை டி.டி.வி. தினகரன் நியமிக்கச் சொன்னதாகவும், அதன் அடிப்படையில் கூட்டம் போடப் பட்டதாகவும் கூறப்படும் நிலையில், இதனை கேள்விப்பட்ட  தங்க தமிழ்ச்செல்வன் கடும் கோபம் அடைந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் டி.டி.வி. தினகரனின் உதவியாளரை அழைத்து கோபத்தைக் கொட்டியுள்ளார்.

ALSO READ:  ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

இந்த விவகாரம் வெளியே பூதாகாரமாக வெடித்த நிலையில், தங்க தமிழ்ச்செல்வனுடன் இருந்த பலர், சென்னை சென்று டி.டி.வி. தினகரனை சந்திக்க உள்ளதாகக்  கூறப்படுகிறது.

இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ வெற்றிவேல், தங்க தமிழ்ச்செல்வனுக்கு மனநிலை சரியில்லை. வீட்டிலிருப்பவர்கள், அவரை சரியான மருத்துவரிடம் காட்டினால் நல்லது என்று கூறியுள்ளார்.

மேலும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தோல்விக்கு காரணமே தங்க தமிழ்ச்செல்வன் கூறிய வார்த்தைகள் தான் என்று கூறும் அக்கட்சியினர், தேர்தலுக்கு சில நாள்கள் முன் திமுகவுடன் சேர்ந்து அதிமுக ஆட்சியை கவிழ்ப்போம் என அவர் பேசியது, மக்கள் மத்தியில் கட்சி குறித்த தவறான எண்ணத்தை ஏற்படுத்தி விட்டது என்று சுட்டிக் காட்டுகின்றனர்.

தங்கதமிழ்செல்வன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திலிருந்து  தானாக வெளியேறவில்லை என்றால் அவர் வெளியேற்றப்படுவார் என்றும் கூறுகின்றனர் அக்கட்சியினர்!

Related articles

Recent articles

spot_img