
மழையால் மட்டுமே சென்னை காப்பாற்றப்படும் என்று தெரிவித்துள்ளார், பிரபல ஹாலிவுட் நடிகரும் டைட்டானிக் படத்தின் கதாநாயகனுமான லியானார்டோ டி காப்ரியோ! சென்னை வறட்சி குறித்த செய்தியைப் படித்த பின் அவர் தனது இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள கருத்தில், அதற்காக தாம் வருந்துவதாகவும் கூறியுள்ளார்.
புகழ்பெற்ற “டைட்டானிக்”, “தி ரெவனன்ட்” உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தவர் லியானார்டோ டிகாப்ரியோ. சிறந்த நடிகருக்காக ஆஸ்கர் விருதைப் பெற்றவர். சென்னை குடிநீர் பஞ்சம் குறித்து படங்களுடன் வெளியாகியிருந்த செய்தியைப் படித்துவிட்டு, லியானர்டோ டி காப்ரியோ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது வருத்தத்தை பதிவு செய்துள்ளார்.
அவரது கருத்தில், “மழையால் மட்டுமே சென்னையைக் காப்பாற்ற முடியும். ஒரு கிணறு முற்றிலுமாக வறண்டு கிடக்கிறது. இந்தியாவின் தென்னகத்து நகரமான சென்னை கடுமையான குடிநீர் தட்டுப்பாட்டை சந்தித்துள்ளது. ஏரிகள் வறண்டுவிட்டன. குடிநீருக்காக மக்கள் காலி குடங்களுடன் அரசு தரும் தண்ணீருக்காக வரிசையில் மணிக் கணக்கில் காத்திருக்கின்றனர். தண்ணீர்த் தட்டுப்பாடு காரணமாக ஹோட்டல்கள் மூடப்பட்டுள்ளன. அரசு அதிகாரிகள் இந்தத் தட்டுப்பாட்டை போக்க மாற்று வழிகளை தொடர்ந்து யோசித்து வருகின்றனர். ஆனால் சென்னை மக்கள் மழைக்காக தொடர்ந்து பிரார்த்தித்து வருகின்றனர்” என தெரிவித்துள்ளார்.

