இலங்கைத் தமிழர் மறுவாழ்வு தொடர்பில் இந்திய செயல்பாடு திருப்தி அளிக்கிறது : ஆஸ்திரேலிய வெளியுறவுத் துறை அமைச்சர்

சென்னை: இலங்கைத் தமிழர்கள் மறுவாழ்வு தொடர்பில் இந்தியாவின் செயல்பாடுகள் திருப்தி தருகின்றன. படகு மூலம் சட்டவிரோதமாக ஆஸ்திரேலியாவுக்கு வருபவர்களை அனுமதிக்க மாட்டோம் என்று ஆஸ்திரேலிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜூலி பிஷப் தெரிவித்தார். சென்னையில் இந்தியா-ஆஸ்திரேலியா வர்த்தக சபையின் வெள்ளி விழா நிகழ்ச்சி புதன்கிழமை நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஆஸ்திரேலிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜூலி பிஷப் பங்கேற்றுப் பேசினார். இந்த நிகழ்ச்சி நடப்பதற்கு முன்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியபோது, தமிழக முதல்வரிடம், இலங்கைத் தமிழர்களின் மறுவாழ்வு தொடர்பாக விவாதித்தேன். இந்த விவகாரத்தில், இந்தியா மேற்கொண்டு வரும் செயல்பாடுகள் திருப்திகரமாக இருக்கிறது. ஆஸ்திரேலியாவில் இருந்து இந்தியாவுக்கும், இந்தியாவில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கும் மாணவர்கள் கல்வி பயில்வது தொடர்பாக பல்வேறு புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. தமிழகத்தில் ஆட்டோ மொபைல், தகவல் தொழில்நுட்பம், நிலக்கரி, மின் உற்பத்தி, விளையாட்டு, கல்வி, மருத்துவம் ஆகியத் துறைகளில் அதிகளவில் முதலீடு செய்வதற்கு தயாராக உள்ளோம். குறிப்பாக, இந்தியாவில் மின் உற்பத்தித் திட்டங்களை தொடங்குவதற்கு தயாராக உள்ளோம். சீனா, ஜப்பான் போன்ற தென் கொரியா நாடுகளில். தொழில் தொடங்குவது தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திட ஆறு முதல் ஏழு ஆண்டுகள் வரை பேச்சு வார்த்தை நடத்தினோம். மாறாக, இந்தியாவில் ஒரே ஆண்டில் பேச்சுவார்த்தை நடத்தி, இந்தத் திட்டங்களை செயல்படுத்துவோம். தமிழகத்தில் அடுத்த ஆண்டில் நடைபெறும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிலும் ஆஸ்திரேலியா பங்கேற்கும். இலங்கைத் தமிழர்கள் ஏராளமானோர் ஆஸ்திரேலியாவில் குடியேறுவதற்காக தங்கள் உயிரையும் பணயம் வைத்து, படகு மூலம் சட்டவிரோதமாக ஆஸ்திரேலியாவுக்கு வருகை புரிகின்றனர். இதுபோன்று, படகு வாயிலாக சட்ட விரோதமாக ஆஸ்திரேலியாவுக்கு வரும் இலங்கை தமிழர்களுக்கு குடியேற இடம் கிடையாது. அவர்களுக்கு அங்கு அனுமதி கிடையாது. அனுமதிக்கவும் மாட்டோம். இதுபோன்று வருவதைத் தமிழர்கள் தவிர்க்க வேண்டும். இந்தியா-ஆஸ்திரேலியா ஆகிய இரு நாடுகளுக்கும், இரு நாட்டுப் பிரதமர்களும் பரஸ்பரம் வருகை புரிந்துள்ளனர். இதன் மூலம், இரு நாடுகளிடையே நட்புறவு வளர்ச்சி கண்டுள்ளது. இந்தப் பயணத்தின்போது, தமிழக முதல்வரையும் சந்தித்து உரையாடினேன். அப்போது, முதல்வரிடம் தமிழகத்தில் எந்த மாதிரியான தொழில் தொடங்குவது சிறந்தது என்பது குறித்து விவாதித்தேன். இந்த உரையாடலில், நல்ல பலனும், முன்னேற்றம் கிடைத்துள்ளது. இந்தியாவுக்கு, ஆஸ்திரேலியா ‘யுரேனியம்’ வழங்குவது குறித்து அணுசக்தி(civil Nuclear agreement ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதில் இரு நாட்டு பிரதமர்களும் கையெழுத்திட்டுள்ளனர். நடப்பாண்டிலேயே இந்த ஒப்பந்தம் செயல்பாட்டுக்குக் கொண்டு வரப்படும். இந்தியாவின் ராணுவத்துடன் இணைந்து, ஆஸ்திரேலியா கடல் பகுதியில் கூட்டு பயிற்சியில் ஈடுபடுவதற்கு ஆர்வத்துடன் உள்ளது. ‘மலபார், பிட்ச் பிளாக்’ போன்ற ஆபரேஷனில் பங்கேற்பதற்கு தயாராக உள்ளோம். ஏற்கெனவே இதுபோன்ற ஆபரேஷனில் பங்கேற்றும் இருக்கிறோம். இந்தியா அணு ஆயுத ஒப்பத்தத்தில் கையெழுத்திடவில்லை. இந்த விவகாரத்தில், இந்தியாவின் நிலையைக் கருத்தில் கொண்டு ஆதரவு அளிப்போம். தற்போது, இந்தியாவில் ரூ.1,500 கோடி அளவுக்கு (15 பில்லியன் அமெரிக்கா டாலர்) வர்த்தகம் செய்து வருகிறோம். இவற்றை ரூ. 4 ஆயிரம் கோடியாக(40 பில்லியன்) உயர்த்துவதற்கான நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம். சீனாவுடன் ரூ.16 ஆயிரம் கோடி (160 பில்லியன்) அளவுக்கு வர்த்தகம் மேற்கொண்டு வருகிறோம். தொடர்ந்து, இந்தியாவில் வர்த்தகத்தில் ஈடுபடுவோம் என்றார் அவர்.