மத்தியப் பிரதேசத்தில் மதத் தலைவர்கள் அரசியலில் நுழைவதற்கும், தொடர்ந்து விரைவில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தல்களில் போட்டியிடுவதற்கும் தயார் செய்து வருகின்றனர்.
ம.பி., மாநிலத்தில் விரைவில் சட்டசபைக்கான தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த மூன்று முறை ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் பாரதீய ஜனதா கட்சி மீண்டும் ஆட்சியை தக்கவைத்து கொள்ளவும், நீண்ட இடைவெளிக்கு பின்னர் ஆட்சியை கைப்பற்ற காங்கிரசும் தீவிர முனைப்பில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதத்தில் பாரதீய ஜனதா அரசு மத தலைவர்களான கம்ப்யூட்டர் பாபா, ஹரிஹரன் மகாராஜ், பண்டிட் யோகேந்திர மஹந்த், நர்மதானந்த் மகராஜ், பையூமகராஜ் உட்பட சிலருக்கு மாநில அமைச்சர்களுக்கு இணையான அந்தஸ்தை வழங்கி கவுரவித்தது.
இது குறித்து கருத்து தெரிவித்திருந்த கம்யூட்டர் பாபா சாது சமூகத்தின் சார்பாக அரசுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம் என கூறியிருந்தார். இந்நிலையில் மேற் குறிப்பிட்ட தலைவர்கள் உட்பட பலர் வரும் தேர்தலில் பாரதீய ஜனதா சார்பில் போட்டியிடவும், பாரதீய ஜனதா வேட்பாளர்களாக அறிவிக்கப்படாத பட்சத்தில் சுயேட்சையாக போட்டியிட திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.



