
மேற்கு வங்கத்தில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்க, தான் நேரடியாக வர முடியாமல் போனதற்காக வருந்துகிறேன் என்று பிரதமர் நரேந்திர மோடி வருத்தம் தெரிவித்துள்ளார்.
காணொலி காட்சி வாயிலாக பேசிய பிரதமர் மோடி, இன்று மேற்கு வங்கத்தில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்க நான் நேரில் வர திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், சில சொந்த வேலைகள் காரணமாக என்னால் நேரடியாக வர முடியாமல் போனதற்கு மேற்கு வங்கத்திடமும் மாநில மக்களிடமும் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன் என்று மோடி கூறியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் இன்று அதிகாலை உயிரிழந்தார். அவருக்கு இறுதிச் சடங்குகளை செய்துவிட்டு, சில மணி நேரங்களில், மேற்கு வங்கத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சிகளில் காணொலி காட்சி வாயிலாக பங்கேற்று, நிறைவுற்ற பல திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி. அப்போது, மேற்கு வங்க மாநில மக்களிடம், நேரடியாக வந்து பங்கேற்க முடியாமல் போனதற்கு வருத்தம் தெரிவித்துக் கொண்டார் மோடி.
மேற்கு வங்கத்தில் வந்தே பாரத் ரயில் சேவை உள்பட ரூ.7,800 கோடி மதிப்பிலான திட்டங்கள் தொடக்கம் மற்றும் அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியில் பிரதமா் நரேந்திர மோடி இன்று நேரடியாகக் கலந்து கொள்ள திட்டமிடப்பட்டிருந்தது.வந்தே பாரத்
இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தின்கீழ் முழுவதும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட அதிநவீன ரயிலான வந்தே பாரத், மேற்கு வங்கத்தில் முதல்முறையாக இயக்கப்பட்டது.
ஹௌரா-நியூ ஜல்பைகுரி இடையே இயக்கப்பட்ட இந்த ரயிலை பிரதமா் மோடி காணொலி காட்சி வாயிலாக கொடியசைத்து தொடக்கி வைத்தார். இது தவிர கொல்கத்தா மெட்ரோவின் ஜோகா-தரதாலா இடையிலான வழித்தட சேவையைத் தொடக்கி வைத்தார். மேலும், நிறைவுபெற்ற பல்வேறு ரயில்வே திட்டங்களையும் நாட்டுக்கு அா்ப்பணித்தார்.மேலும், கொல்கத்தாவில் மேற்கு வங்கம், உத்தர பிரதேசம், பிகாா், ஜாா்க்கண்ட், உத்தரகண்ட் மாநில முதல்வா்கள் பங்கேற்கும் தேசிய கங்கை கவுன்சிலின் 2-ஆவது கூட்டம் பிரதமா் தலைமையில் நடைபெறவிருந்தது.





