தமிழக முதல்வருக்கு ரம்ஜான் நோன்பு கஞ்சிக்கு ஆணையிடுகிறார்!
ஆலய அன்னதானத்திற்கு ஆணை போடுகிறார்!
ஆடி கூழுக்கு என்ன கொடுத்தார்?
– இப்படி ஒரு கேள்வியை எழுப்பி இந்துமுன்னணி நிறுவனர் ராமகோபாலன் இன்று அறிக்கை ஒன்றினை வெளியிட்டார்
அவரது அறிக்கை:
தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் நேற்று ரம்ஜான் நோன்பு கஞ்சிக்கு தமிழக அரச இலவசமாக 4600 மெட்ரிக் டன் அரிசியை வழங்கிட தனது தலைமையிலான அரசு மாவட்ட கலெக்டர்களுக்கு தக்க அறிவுரை வழங்க உள்ளது என்று கூறிப்பிட்டுள்ளார். நல்லது. அதேசமயம் இந்து கோயில்களை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள தமிழக அரசு அன்னதான திட்டத்திற்கு என்ன கொடுத்துள்ளது? ஆனால் அன்னதான திட்டத்தை விரிவுப்படுத்த தமிழக முதல்வர் பல முறை உத்திரவிட்டுள்ளார். இவரது உத்திரவிற்கு என்ன பொருள்?
நடந்த சட்டமன்றத் தேர்தலில் கஸ்தூரி என்ற மூதாட்டியை வைத்து அதிமுக வெளியிட்ட விளம்பர விடியோவில் கோயில் அன்னதானத்தில் சாப்பிட்டு, வாயார புகழும் காட்சியில் நடித்தார். வாரிகொடுத்த வள்ளல் என ஜெயலலிதாவை புகழ்ந்த அந்த காட்சியை வெளியிட அதிமுகவிற்கோ, முதல்வருக்கோ என்ன தகுதி இருந்தது? பக்தர்கள் தரும் காணிக்கையில் நடைபெறும் அன்னதானத்தை தனது ஆட்சியில் செய்யப்பட்டதாக கூறிய அதிமுக முதல்வர், தனது முயற்சியால் மசூதி, தர்காக்களில் அரசு செலவில் ரம்ஜான் நோன்பிற்கு கஞ்சி ஊற்றுவதை ஏன் விளம்பரப்படுத்தவில்லை? இந்தாண்டு அறிக்கை வெளியிட்டுள்ள தமிழக முதல்வர், தனது தாயுள்ள கருணையை விளம்பரப்படுத்த தயாரா? செய்யமாட்டார்! ஏன்? அப்படி வெளியிட்டால் முஸ்லீம்களில் ஒருபிரிவினரின் எதிர்ப்பு கிளம்பிவிடும் என்பது தமிழக முதல்வருக்குத் தெரியும். ஆனால், இந்துக்கள் ஏமாளிகள். எப்படி வேண்டுமானாலும் ஏமாற்றலாம் என்பதை திராவிட கட்சிகள் நன்கு தெரிந்து வைத்திருக்கின்றன. ஆனால், இந்துக்கள் விழிப்படைந்து வருகிறார்கள். தங்களுக்கு இழைக்கப்படும் அநீதிக்கு எதிராக போராடவும் தயங்குவதில்லை. இது இந்து முன்னணி தொடங்கி, இந்து விழிப்புணர்வை 36 ஆண்டுகளாக பிரச்சாரம் செய்ததன் பயனாக முடிந்திருக்கிறது.
கோயில்களை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது அரசு, அந்தக் கோயில்களுக்கு வரவேண்டிய பல ஆயிரம் கோடி ரூபாய் வருவாயை வசூலிக்காத சாதனையைத்தான் செய்திருக்கிறது. அங்கு வரும் அப்பாவி பக்தர்களிடம் சுவாமி, அம்பாளை காட்சிப்பொருளாக்கி தரிசனம் செய்ய பல வகையிலும் கட்டணக் கொள்ளை நடக்கிறது! ஆலய சொத்துக்கள், திருக்குளங்கள் களவாடப்படுகின்றன, திட்டமிட்டு அழிக்கப்படுகின்றன. இந்துக்களுக்கு ஏதாவது செய்வது என்றால் அது கோயில் வருமானத்தில் இருந்துதான் செய்யப்படுகிறது! அறநிலையத்துறை அதிகாரிகள், தமிழக அரசு பிரதிநிதிகள், அவர்களுக்கான வாகனமோ, வாகனங்களுக்கு பெட்ரோலோ ஆலய வருவாயிலிருந்து செலவு செய்யப்படுகிறது. என்ன அநியாயம்! என்ன அக்கிரமம்!!
முன்னாள் தமிழக முதல்வர் அண்ணாதுரையின் நினைவு நாளுக்கு, கோயில் செலவில் கோயில்களில் சமபந்தி போஜனம் போடப்படுகிறது. அண்ணாதுரை நாத்திகவாதியாக இருந்தவர், அவரது நினைவு நாளுக்கு சாப்பாடு போட்டு புண்ணியத்தை தேடட்டும். அதற்கான செலவை அண்ணாதுரை நிறுவிய தி.மு.க.வோ, அதனால் இன்று வரை பதவி சுகத்தை அனுபவித்து கோடானுகோடி சம்பாதித்தவர்கள் தரட்டுமே! இல்லை, அண்ணாதுரை உருவத்தை, பெயரை தனது கட்சியின் வர்த்தக முத்திரையாக பயன்படுத்தும் அ.தி.மு.க. செலவு செய்யட்டும். ஒரு சல்லிகாசுகூட செலவில்லாமல், தனது ஆணையை வெளியிடும் வள்ளல்களை என்னவென்று கூறுவது. இதற்கு வெட்கப்படவேண்டாமா?
பாரபட்சமாக செயல்படமாட்டேன் என உறுதியேற்றது உண்மையானால் தமிழக முதல்வர் ஆடி கூழ்க்கு அம்மன் கோயில்களுக்கும் தேவையான உணவுப் பொருட்களை தரமுள்ளதாக தர வேண்டும். ஆலயங்களில் வழங்கப்படும் அன்னதானத்திற்கு தேவையான அரிசியையாவது அரசு தானிய கிடங்கிலிருந்து அளிக்க முன் வரவேண்டும் என்று இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது. தரிசனக் கட்டணத்தை முழுமையாக நீக்கிட அறநிலையத்துறைக்கு அறிவுரை வழங்க வேண்டும் என்று தமிழக முதல்வரிடம் கோரிக்கை வைக்கிறோம்.
தமிழக முதல்வர் நடுநிலையோடு செயல்பட வேண்டும் என்று இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது. ஓட்டு வங்கிக்காக நடந்துகொள்வது, அநாகரிகமான செயல் என்பதை நடுநிலையான மக்கள், ஊடகங்கள் அரசிற்கும், அரசியல்வாதிகளுக்கும் உணர்த்த வேண்டும்.



