சென்னை:
விழுப்புரம் மருத்துவமனையில் 8 குழந்தைகள் உயிரிழந்தது பற்றி விசாரணை தேவை என்று பாமக நிறுவுனர் ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.
இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில்,
விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவத்திற்காக சேர்க்கப்பட்டிருந்த 8 குழந்தைகள் கடந்த இரு நாட்களில் அடுத்தடுத்து உயிரிழந்திருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் மிகுந்த அதிர்ச்சியும், வருத்தமும், வேதனையும் அளிக்கின்றன. உயிரிழந்த எட்டு குழந்தைகளின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட குழந்தைகள் அதிக எண்ணிக்கையில் உயிரிழப்பது கடந்த 6 மாதங்களில் இது மூன்றாவது முறையாகும். கடந்த நவம்பர் மாதத்தில் தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும், சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் இருபதுக்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்தன. அதன்பின் கடந்த திசம்பர் மாதத்தில் ஊட்டி மற்றும் கோவை மருத்துவமனைகளில் 4 கருவுற்றப் பெண்கள் இறந்தனர். இந்த நிகழ்வுகளால் ஏற்பட்ட அதிர்ச்சி விலகுவதற்கு முன்பாகவே விழுப்புரத்தில் 8 குழந்தைகள் உயிரிழந்து இருப்பதை தாங்கிக் கொள்ள முடியவில்லை.
இதற்கு முந்தைய நிகழ்வுகளைப் போலவே விழுப்புரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லாதது தான் இத்தகைய உயிரிழப்புகளுக்குக் காரணம் என்று குற்றச்சாற்றுகள் எழுந்துள்ளன. ஊழல் செய்வது ஒன்றையே முழு நேரத் தொழிலாகக் கொண்டுள்ள இந்த ஆட்சியில் அரசு மருத்துவமனைகளில் மருந்துகளோ, மருத்துவ வசதிகளோ இல்லை என்பதை மறுக்க முடியாது. அதேநேரத்தில் மருத்துவமனை மீது புகார் கூறுவதன் மூலம் ஏழைகளுக்கு இழைக்கப்படும் மிகப்பெரிய துரோகத்தை மறைத்துவிடக் கூடாது.
தருமபுரியில் தொடங்கி விழுப்புரம் வரை நடந்த குழந்தைகள் மற்றும் தாய்மார்களின் உயிரிழப்புக்கு மருத்துவமனையில் போதிய வசதிகள் இல்லாதது எந்தளவுக்கு உண்மையோ, அதைவிட இரு மடங்கு உண்மை தமிழகத்தில் உள்ள ஏழைக் குழந்தைகளும், தாய்மார்களும் கடுமையான ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது தான். இந்தியாவில் கருவுற்ற பெண்களில் 50 விழுக்காட்டினரும், 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 75 விழுக்காட்டினரும் சத்துக்குறைவால் பாதிக்கப் பட்டிருக்கிறார்கள் என நேற்று முன்நாள் வெளியிடப்பட்ட பன்னாட்டு ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் ஊட்டச்சத்து நிலைமை மிகவும் மோசமாகவே உள்ளது. தமிழகத்தில் 3 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 31 விழுக்காட்டினர் வளர்ச்சி குறைபாட்டாலும், 23 விழுக்காட்டினர் உடல் இளைப்பாலும் 26 விழுக்காட்டினர் எடை குறைவாலும், 73 விழுக்காட்டினர் சத்துக்குறைவாலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மராட்டிய மாநிலத்தின் 3 மாவட்டங்களில் மட்டும் நுண்ணூட்டச்சத்துக் குறைபாட்டால் 10 மாதங்களில் 1274 குழந்தைகள் உயிரிழந்ததைச் சுட்டிக்காட்டி கடந்த 3 ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் தமிழகத்தில் இதைவிட மோசமான நிலை காணப்படுவதாகவும், இதை மாற்ற அரசு அவசரகால நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தேன். ஆனால், அதற்கான நடவடிக்கைகள் குறித்து தமிழக அரசு இன்னும் சிந்திக்கக்கூட இல்லை.
இதேநிலை தொடர்ந்தால் தமிழகத்தில் இளம் தாய்மார்களையும், பச்சிளம் குழந்தைகளையும் காப்பாற்ற முடியாமல் போய்விடும். ஊட்டச்சத்துக் குறைபாட்டுக்கு முக்கியக் காரணம் வறுமையும், மதுவும் தான். ஏழைக் குடும்பங்களில் பெரும்பாலானவற்றின் தலைவர்கள் மதுவுக்கு அடிமையாகியிருப்பதால் அவர்களின் குடும்பத்தினருக்கு சத்தான உணவு கிடைப்பதில்லை. நுண்ணூட்டச்சத்து குறைபாட்டுக்கு இதுவே முதன்மைக் காரணம்.
ஓர் அரசின் முதன்மையான கடமை மக்களின் நுண்ணூட்டச் சத்து, வாழ்க்கைத் தரம் ஆகியவற்றை உயர்த்துவதும், பொது சுகாதாரத்தை மேம்படுத்துவதும் தான் என்று இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் வழிகாட்டு விதிமுறைகளின் 47 ஆவது பிரிவில் கூறப்பட்டிருக்கும் போதிலும், தமிழக அரசு அதைச் செய்யாமல், அதற்கு நேர் எதிராக மது விற்பனை செய்வதில் தான் தீவிரம் காட்டி வருகிறது. அரசின் இந்த அவமானகரமான அணுகுமுறை தொடரும் வரை நுண்ணூட்டச்சத்துக் குறைபாட்டால் ஏழைக் குழந்தைகள் உயிரிழப்பதும் தொடரும் என்பது தான் வேதனையான, மறுக்க முடியாத உண்மையாகும்.
தருமபுரி மற்றும் விழுப்புரத்தில் இறந்த குழந்தைகளின் எண்ணிக்கை நுண்ணூட்டச் சத்துக் குறைபாட்டால் உயிரிழக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையில் ஒரு துளி தான். மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் ஏதேனும் உயிரிழப்பு ஏற்பட்டால் அது உடனடியாக ஊடகங்கள் மூலம் வெளியாகி விடுகிறது. ஆனால், கிராமப்புற மருத்துவமனைகளில் ஏற்படும் இதுபோன்ற உயிரிழப்புகள் வெளியில் தெரிவதில்லை.
இது தொடர்பான அனைத்து உண்மைகளையும் வெளிக்கொண்டு வருவதற்காக விழுப்புரம் உயிரிழப்புகள் குறித்து விரிவான விசாரணைக்கு ஆணையிட வேண்டும். நுண்ணூட்டச் சத்துக் குறைபாட்டைப் போக்க கருவுற்ற தாய்மார்களுக்கும், 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கும் நுண்ணூட்டச்சத்து மிகுந்த உணவு வகைகளை அரசே வழங்க வேண்டும். அதுமட்டுமின்றி, நுண்ணூட்டச்சத்துக் குறைபாட்டுக்கு முக்கிய காரணம் மது தான் என்பதால் தமிழகத்தில் முழு மதுவிலக்கை தமிழக அரசு நடைமுறைப்படுத்த வேண்டும்.