spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஆன்மிகம்ஆன்மிகக் கட்டுரைகள்ஆருத்திரா தரிசனம் எனும் திருவாதிரை கண்ணுறல்!

ஆருத்திரா தரிசனம் எனும் திருவாதிரை கண்ணுறல்!

- Advertisement -

ஆருத்திர தரிசனம் என இந்துக்கள் இந்நாளை அனுசரிக்கின்றார்கள், சைவர்களுக்கு திருவெம்பாவை நோன்பு இத்தோடு முடியும் என்பார்கள்

ஆருத்திரா என்பது வேறு ஒன்றுமல்ல , அந்த வடமொழி வார்த்தை தமிழில் திருவாதிரை என அழைக்கபடும், மார்கழி மாத திருவாதிரை நட்சத்திர நாள்

அக்காலத்தில் வரம்பெற்ற முனிவர்கள் கூடி நாம் யாகம் நடத்தி சிவனாகிவிடுவோம் என தருகாவனத்தில் யாகம் நடத்தினார்களாம், கர்மம் என்பதே கடவுள். கடவுள் என ஒருவர் இல்லவே இல்லை, ஒழுங்காக கர்மம் ஆற்றும் ஒவ்வொருவனும் கடவுள் எனும் ஆன்மீக பகுத்தறிவில் அகங்காரத்தின் உச்சியில் யாகம் செய்திருக்கின்றார்கள்

இன்னும் தெளிவாக சொன்னால் வேதங்களின் யாகத்தை சரியாக செய்தால் தாங்களும் பெரும் சக்தி பெற்று கடவுளாகிவிடலாம் என அகங்காரத்தில் வேள்வியினை தொடங்கினார்கள்

யாக வேள்வியின் அவிர்பாகத்திலே இறைவன் வாழ்வதாகவும், அந்நிலையினை தாங்களும் எட்டலாம் என அவர்களாக அறியாமையில் கருதி பெர்ம் வேள்வி செய்தார்கள்

இந்த யாகத்தை அறிந்த பரம்பொருள் வழக்கமான பிச்சைகார கோலத்துடன் வந்து நிற்க, யாகத்தில் பிச்சைகாரர்களுக்கு இடமில்லை என அவர்கள் வந்த பரமசிவனை விரட்டியும் விட்டார்கள்

அந்த ஆண்டிகோலத்து சிவன் தன் திருவிளையாடலை தொடங்கினார்

அவரோ செல்லாமல் அங்கே சுற்றி சுற்றி வந்தார், ஒரு கட்டத்தில் அவரை வலுகட்டாயமாக விரட்ட ரிஷிகள் முயன்றபொழுதும் முடியவில்லை

ஆத்திரமடைந்த முனிகள் மதயானை, உடுக்கை, மான் , தீ என எல்லாவற்றையும் ஏவி ஒரு அரக்கனையும் ஏவிவிட்டனர்

சிவனோ யானையினை கொன்றார், உடுக்கையினை கையில் வாங்கினார், மான் தோலை ஏற்றார் அந்த நெருப்பையும் ஏற்றார், அந்த அரக்கனையும் கொன்று அவன் மேல் நின்று ஆடினார்

அதன்பின் உண்மை உணர்ந்த முனிகள் முக்கண்ணணே சரணம் என தங்கள் தோல்வியினை ஒப்புகொண்டு அகங்கார மனதோடு தெய்வ நிலை அடைய முடியாது என்பதை உணர்ந்து திருந்தினர்

இதுதான் ஆருத்திர தரிசனம் என்பது, அச்சம்பவம் மார்கழி மாதம் திருவாதிரை நாளில் நடந்தது என்கின்றது புராணம் அதை நினைவு கூறி வழிபடுகின்றார்கள்

இச்சம்பவம் கூறும் தத்துவம் என்ன?

ஆம் அன்றல்ல இன்றுவரை எல்லா மனிதனுக்கும் கடவுளாக உள்ளூர ஆசை இருக்கின்றது, தான் சார்ந்து நிற்கும் தொழிலிலும் இன்னும் பல இடங்களிலும் தானே கடவுளாக இருக்க வேண்டும் எனும் மமதையும் ஆணவமும் வருகின்றது

சில வெற்றிகள் அந்த ஆசை நெருப்பினை, ஆசை யாக நெருப்பில் நெய்யாக பெய்து ஆசை நெருப்பை பெரிதாக வளர்க்கின்றன‌

வெற்றிகள் கூட கூட ஆசை கொழுந்துவிட்டு எரிந்து தானே கடவுள் எனும் நிலைக்கு செல்கின்றது, அகங்காரம் அப்படி ஆசையினை பெரும் நெருப்பாக‌ எரிய வைக்கின்றது

சிவனின் ஆருத்திரா தரிசனத்தில் அவர் மேல் ஏவபடும் விஷயங்களை பாருங்கள் மத யானை, இது பெரும் ஆசைவெறி கொண்டதும் மூர்க்கமானதுமான மனதை குறிக்கின்றது

மான் என்பது பார்வைக்கு அழகானது கண்களால் கோரபடும் ஆசைகளை குறிக்கின்றது

நெருப்பு உணர்ச்சிக்கும், உடுக்கை என்பது செவிகளால் பெறும் இன்பத்தினையும் குறிக்கின்றது

அரக்கன் என்பவன் மனதின் அகங்காரத்தை குறிக்கின்றது

ஆம் இந்த மானிடன் மனதுக்கும் உணர்ச்சிக்கும் அடிமையாக கூடியவன். அதனால் மாயை அதிகரிக்கும் அந்த ஆசையே சகல பாவங்களுக்கும் உலக துன்பங்களுக்கும் அடிப்படை

புலன்களை அடக்கு மனதினை ஒடுக்கு இறைவன் தெரிவான்

எல்லா புலன்களையும் அடக்கி, ஆசையினையும் அடக்கி இறைவனிடம் சரண்டைதலே இறைவனை அடையும் வழி, மாறாக ஆசையினை யாகம் போல் வளர்த்தால் அது வளருமே தவிர ஞானம் கிடைக்காது

சிவன் எல்லாவற்றையும் அடக்கி வைத்து அகங்கார அரக்கனை ஒடுக்கி அதன் மேல் ஆடியது போல, சகல புலன்களையும் அடக்கினால் மனிதனும் தெய்வ நிலைக்கு உயர்த்தபடுவான் என்பதே இந்நாளின் தத்துவம்

மனிதன் இறைநிலைக்கு செல்ல ஆசை ஒழித்து புலன்களை அடக்கி இறைவனை உணர்ந்து, தன் ஆத்மாவினை இறைவனோடு முழுக்க கலந்து அந்நிலையினை எட்டலாம் என்பதே இந்நாளின் தத்துவம்

சிவனை சரணடைந்தால் எல்லா அகங்கார ஆசை மாயைகளும் நீங்கி அவரோடு கலந்து இறைநிலை எய்தலாம் என்பதுதான் இந்நாளின் போதனை

சிவனின் இந்த கோலம் சிதம்பரம் நடராஜர் கோவிலில் மகா விஷேஷம். இன்று அங்கு சிறப்பான நாள், தேரோட்டமும் விழாவுமாக கொண்டாடுவார்கள்

இந்துக்கள் இன்று திருவாதிரை களி என ஒன்றை சிவனுக்க்கு படைப்பார்கள், அது சேத்தன் எனும் சிவபக்தனின் உன்னத பக்தியினை நினைவு கூறும் அடையாளம்

சேத்தனார் அல்லது சேர்ந்தனார் என்றொரு பக்தன் முன்பு இருந்தான், நாயன்மாரின் சாயலின் அவனின் பக்தி இருந்தது

அவரின் இயற்பெயர் அறிவாரில்லை, சிவனை முழுக்க சேர்ந்தவர் எனும் வகையிலும், அடியார்களோடு சேர்ந்து இருப்பவர் என்பதாலும் அவர் சேர்ந்தனார் என்றானார்

அவர் பூம்புகார் பக்கம் ஒரு வியாபாரியின் தலமை கணக்காளராக இருந்தார், அந்த பணபெட்டி செல்வத்தையெல்லாம் அடியார்களுக்கு இறைக்கின்றார் எனும் குற்றசாட்டில் விரட்டபட்டார்

குடும்பத்தோடு சிதம்பரம் பக்கம் வந்து விறகுவெட்டும் தொழில் செய்தார், அந்த நிலையிலும் அடியார்களுக்கு அமுது ஊட்டிவிட்டுத்தான் தான் உண்ணும் பெரும் கடமை கொண்டிருந்தார்

இவரின் பக்தியினை சோதித்து உலகறிய செய்ய சித்தம் கொண்ட சிவன், ஒரு இரவில் ஏழை அடியாராக பனிகொடும் இரவில் இவர் வீட்டின் கதவை தட்டினார்

அடியார் வந்ததும் என்ன செய்வது என அறியாத சேர்ந்தனாரும் மனைவியும் இரவில் உணவு பெரிதாக சமைக்க வழியில்லாது இருப்பதை கொண்டு அவர் பசிபோக்க துடித்தார்கள்

வாசலில் கோலமிட வைத்திருந்த பச்சரிசி மாவில் வெல்லத்தை கலந்து களி செய்து , வீட்டின் பின்பக்கம் இருந்த செடிகளின் காய்கறிகள் ஏழு வகை கலந்து கூட்டாக செய்தும் படைத்தார்கள்

பின் அடியாரை வீட்டில் தங்க வைத்துவிட்டு குடிசை வாசலில் குடும்பத்தார் கொட்டும் குளிரில் படுத்து கொண்டார்கள், அவர்கள் வசதி அவ்வளவுதான் இருந்தது

அதே நேரம் சோழமன்னனுக்கு ஒரு கனவு வந்தது, கனவில் அவன் நைவேத்தியம் படைக்க “மன்னா நான் என் அடியான் வீட்டில் உண்ட களியால் வயிறு நிரம்பிற்று” என்ற குரல் கேட்டு கனவும் கலைந்தது

மன்னன் சிந்தித்தபடியே எழுந்து யோசிக்க , சிதம்பரம் கோவிலில் அந்த அதிசயம் நடந்தது

காலை ஆலய நடை திறந்த அர்ச்சகர்கள் சிவன் மேனியெங்கும் களியும் காய்கறியும் சிதறிகிடக்க பரபரத்தார்கள், மன்னனுக்கும் செய்தி சென்றது

மன்னன் கனவின் பொருள் அறிந்தான், சபை அறிந்தது , அர்ச்சகர் அறிந்தார்கள் ஆனால் எந்த பக்தன் சிவனுக்கு களிபடைத்தான் என்பது யாருக்கும் தெரியாது

விஷயம் பரப்பானது அதே நேரம் காலை குடிசைக்குள் நுழைந்தால் அடியார் தூக்கம் கெட்டுவிடும் அவராக திறக்கட்டும் என வெளியே காத்திருந்த சேர்ந்தனாருக்கு நேரம் செல்ல செல்ல அச்சம் அதிகரித்தது, சிவனிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு கதவை தட்டினால் சத்தமில்லை பின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தால் அடியாரை காணவில்லை

அவன் அவரை அங்குமிங்கும் தேடியபொழுதுதான் ஊரே பரபரப்பாகி சிதம்பரம் கோவில் கருவறையில் களிசிந்தி கிடந்த செய்தி வந்தது

சேர்ந்தனுக்கு அச்சம் கூடிற்று, தன் வீட்டில் உண்ட அடியார் ஏதோ கோவிலில் படைத்திருப்பாரோ என சிந்தித்தபடியே தன் வீட்டுக்கு அடியார் வந்த கதையினை சொல்லாமல் மறைத்துவிட்டான்

ஏதும் சொன்னால் தன் மேல் பழி வரலாம் என அஞ்சினான், ஏழை சொல்லை யார் நம்புவர்கள் எனும் தயக்கமும் அவனிடம் இருந்தது

மறுநாள் மார்கழி திருவாதிரையாதலால் தேரோட்டம் நடந்தது, கூட்டத்தில் ஒரு எளியவனாக தள்ளி வந்து கொண்டிருந்தார் சேத்தனார்

அக்கால தேரோட்டத்தில் மன்னன் வடம் தொட்டு கொடுப்பதோடு முன்னால் கம்பீரமாக நடந்துவருவார், பின் மக்களும் அடியாரும் தேரை தள்ளிவருவார்கள் இது மரபு

சேந்தனார் குடிசை இருந்த பக்கம் வந்தபொழுது தேர் நின்றுவிட்டது, மக்கள் எல்லோரும் இழுத்தும் பின் காளை குதிரை இழுத்தும் தேர் அசையவில்லை

பின் யானைகளை கட்டி இழுத்தும் ஒரு அங்குலமும் அது அசையவில்லை

ஏதோ குற்றம் நடந்துவிட்டது என மன்னனும் அர்ச்சகர்களும் தவித்த நேரம் ஒரு குரல் அசரீரியாக கேட்டது “சேர்ந்தா தேர் நகர பல்லாண்டு பாடு”

சேர்ந்தா எனும் பெயரை கேட்டதும் எல்லோரும் யார் சேர்ந்தன் என தேடினார்கள், மூலையில் அஞ்சி ஒடுங்கி வேட்டி மட்டும் அணிந்து கைகளால் மேல் துண்டை பிடித்து குனிந்தபடி “நானே சேந்தன்” என ஒடுங்கி நின்றிருந்தார் சேர்ந்தன்

அவனை அழைத்து தேர்முன் நிறுத்தினார்கள், மன்னன் அவரை பாட சொன்னான்

விறகுவெட்டியான தான் பாடுவதா என அஞ்சி “சிவனே, எனக்கென்ன தெரியும்” என மருவி நின்றார் அந்த சேர்ந்தன், ஆனாலும் இறை உத்தரவு என்பதாலும் அரசனே அங்கு நின்றதாலும் கண்களை அவர் மூடி நிமிர்ந்தார்

திருபதிகம் பாட தொடங்கினார், பாடல் மழையாய் கொட்டிற்று

“மன்னுக தில்லை வளர்கநம்
பத்தர்கள் வஞ்சகர் போயகல
பொன்னின்செய் மண்டபத் துள்ளே புகுந்து
புவனி யெல்லாம் விளங்க
அன்னநடை மடவாள் உமைகோன்
அடியோ முக்கருள் புரிந்து
பின்னைப் பிறவி யறுக்க நெறிதந்த
பித்தற்குப் பல்லாண்டு கூறுதுமே” என தொடங்கி

“எந்தை எந்தாய் சுற்றம் முற்றும்
எமக்கு அமுதாம் எம்பிரான் என்றென்று
சிந்தை செய்யும் சிவன்சீர்
அடியார் அடிநாய் செப்புறை
அந்தமில் ஆனந்தச் சேந்தன்
எனைப்புகுந் தாண்டுகொண் டாருயிர்மேல்
பந்தம் பிரியப் பரிந்தவனே
என்று பல்லாண்டு கூறுதுமே” என பாடி முடித்தார் (இது இன்றும் சைவ திருமுறையில் 9ம் பாகமாக உண்டு)

அவர் பாடவும் தேர் யாரும் தொடாமல் தானாக நகர்ந்து நிலைக்கு வந்தது, கூட்டமே அவர் பாதம் பணிந்தது, அப்பொழுதுதான் அடியார்க்கு களி கொடுத்த கதையும் சொன்னார் சேர்ந்தனார்

விறகுவெட்டி அடியார்க்கு, மரம் வெட்டி தன் அடியார் பசிபோக்கிய அடியார்க்கு சிவன் மரத்தாலான தேரினால் அங்கீகாரம் கொடுத்த அந்நிகழ்வின் பெரும் நினைவு கூறலே இந்த திருவாதரை களி. அதிலிருந்து இந்நாளில் களி செய்யும் வழக்கம் வந்தது

இன்னொரு வகையில் கார்த்திகை பவுர்னமியில் விரதம் தொடங்கி திருவெம்பாவை படிக்கும் இந்துக்கள் இந்நாளில் விரதம் முடிப்பார்கள், அந்நாளில் விரதம் முடிக்கும் வகையாக இக்களி செய்யும் ஏற்பாடும் உண்டு

தாருகாவனத்து ரிஷிகள் செருக்கடக்கிய நாளும் இதுதான், சிவனை அடைய பெரும் வேதமோ யாகமோ வேண்டாம், பெரும் பொருளோ அறிவோ வேண்டாம், உளமார்ந்த பக்தனின் களிக்கு அவன் கட்டுபடுவான் என காட்டிய நாள் இது

அகங்காரம் கொண்டு யாகதீயில் இடபடும் உயர்ந்த அவிர்பாகத்துக்கு வருபவனல்ல சிவன், உளமார்ந்த பக்தியுடன் கொடுக்கும் அரைபிடி களிக்கு இறங்கிவந்து அணைத்து கொள்வான் சிவன், உளமார்ந்த உன்னத பக்திக்கு, முழு சரணாகதியான பக்திக்கு எதுவும் ஈடு இல்லை என்பதை சொல்லும் நாள் இது

இந்துக்களுக்கு இந்நாள் சிறப்பானது, நடராஜ பெருமான் இருக்குமிடமெல்லாம் வழிபாடு உண்டு, அந்த ஆடல் வல்லவன் எல்லோரையும் ஆசீர்வதிக்கட்டும்

இந்துக்களின் ஒவ்வொரு பண்டிகையும் ஞானமிக்கது, அது ஆன்மீகத்துடன் சமூக நல்லிணக்கத்தை, ஒருமைபாட்டையும் தேச பலத்தையும் வளர்ப்பது

அவ்வகையில் தனி தனியாக கொண்டாடுவதை விட இந்துக்கள் கூடி களிசெய்து சிவனுக்கு படைத்து பகிர்வது நன்று. அப்படியே கூடி அந்த பல்லாண்டு பதிகம் பாடி போற்றுவதும் நன்று.

திருவாதிரை களி இருக்குமிடமெல்லாம், அந்த தேர் நகருமிடமெல்லாம் சேர்ந்தனார் மூலம் அருளபட்ட அந்த திருபதிகம் பாடபடட்டும். அப்படி கோவிலும் தேரும் இல்லைஎன்றால் வீட்டிலே விளக்கேற்றி களி செய்து அந்த பரம்பொருளுக்கு படைத்து பல்லாண்டு பாடுங்கள்

எல்லா நலமும் உங்களுக்கும் தேசத்துக்கும் இந்த பவுர்ணமி போல பெருகும், பெருகி நிற்கும், நிலைக்கும் அது நிச்சயம்

  • பிரம்ம ரிஷியார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe