சென்னை:
ஒட்டகம் வெட்டுவதற்கு பிரத்யேக இறைச்சிக்கூடங்கள் எதுவும் இல்லாததால், தற்போதைய சூழ்நிலையில் தமிழகத்தில் ஒட்டகங்களை வெட்ட அனுமதிக்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் விலங்குகள் நல ஆர்வலர் பிரசன்னா, ராதா ராஜன் உள்பட பலர் தாக்கல் செய்த பொதுநலமனுவில், ‘இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டத்தின்படி இறைச்சிக்காக வெட்டப்படும் விலங்குகளின் பெயர் பட்டியலில் ஒட்டகம் இல்லை. ஆனால், தமிழகத்தில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஒட்டகங்கள் இறைச்சிக்காக வெளிமாநிலங்களில் இருந்து கொண்டு வரப்பட்டு, வெட்டப்படுகிறது. விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தின்படியும், மத்திய அரசு சட்டத்தின்படியும் இது குற்றமாகும். எனவே தமிழகத்தில் ஒட்டகம் வெட்ட தடை விதிக்க வேண்டும்’ என்று கூறியிருந்தனர்.
இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதிகள் சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த இடைக்கால உத்தரவில் கூறியிருப்பதாவது:-
ஆடுகள் வெட்டப்படுவதையும், ஓட்டகம் வெட்டப்படுவதையும் ஒன்றாக கருத முடியாது. தமிழகத்தில் ஒட்டகம் வெட்டுவதற்கு பிரத்யேகமாக இறைச்சி கூடங்கள் இல்லை. மேலும், இந்த ஓட்டகங்களை சென்னையில் வெட்டுவதற்கு சட்டப்படி அனுமதி வழங்க முடியுமா? என்று கடந்த முறை நாங்கள் கேள்வி எழுப்பியிருந்தோம்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பதில் மனுவில், ‘விலங்குகள் கொடுமை தடுப்புச் சட்டத்தின்படி, மனிதன் உண்ணும் விலங்குகள் மட்டுமே இறைச்சிக் கூடங்களில் வெட்ட அனுமதிக்க முடியும் என்றும் இந்த பட்டியலில் இல்லாத விலங்களை பலியிடுவதற்கு அனுமதியில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
ஆனால், இந்த வழக்கில் எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்பட்டவர்கள் தரப்பில் ஆஜரான வக்கீல்கள், ஒட்டகத்தை ஆண்டு முழுவதும் இறைச்சிக்காக வெட்டவில்லை. பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு மட்டும் பலியிடுவதாக கூறினார்கள்.
எனவே, பக்ரீத் பண்டியை முன்னிட்டு ஒட்டகம் வெட்டப்படுவது தொடர்பாக இருதரப்பின் வாதங்களையும் கேட்க வேண்டியதுள்ளது. எனவே, இந்த வழக்கில் மனுதாரர்கள், எதிர்மனுதாரர்கள் என்று அனைத்து தரப்பினரும் தங்களது வாதங்களை மனுவாக தாக்கல் செய்யவேண்டும்.
அதேநேரம், ஒட்டகங்களை வெட்டுவதற்கு தனியாக பிரத்யேகமான இறைச்சி கூடங்கள் தமிழகத்தில் இல்லை என்பதால், இந்த சூழ்நிலையில், ஒட்டகங்களை தமிழகத்தில் வெட்டுவதற்கு அனுமதிக்க முடியாது என்பதையும் தெளிவுபடுத்துகிறோம். இந்த வழக்கின் இறுதி விசாரணைக்காக அக்டோபர் 17-ந்தேதிக்கு தள்ளிவைக்கிறோம்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.



