ஒரு திருமணம் நடக்கிறது. ஒரு பிரபலர் அதில் கலந்து கொள்கிறார் என்று வைத்துக்கொள்வோம். என்னதான் பிரபலமாக இருந்தாலும், அந்த விழாவில் மாலையைப் போட்டுக் கொண்டு நடுநாயகமாய் ஃபோட்டோவுக்கு போஸ் கொடுப்பவர்கள் கல்யாணத் தம்பதியர்தானே. அப்படியொரு படத்தைப் பார்த்தால், நமக்கு “என்னடாயிது மரியாதை தெரியாமல், பிரபலத்தை ஓரத்தில் நிறுத்தியிருக்கிறார்களே?”, என்று தோன்றுமா?
டி.எம்.கிருஷ்ணா மிருதங்க வினைஞர் வரதன் கடைக்குப் போகிறார். அங்கு பல புகைப்படங்கள் மாட்டப் பட்டிருக்கின்றன. (நிறைய படங்களுடன் கூடிய வரதனின் கடையின் படமே கிருஷ்ணாவின் புத்தகத்தில் ஒரு பக்கத்தில் இருக்கிறது).
கடைக்குப் போனவரின் கண்ணில் ஒரு படம் மட்டும் படுகிறது. (மற்ற படங்கள் சொல்ல வேண்டிய செய்திக்கு இடைஞ்சல் என்பதால் அவர் கண்ணில் படவில்லை போலும்). அந்தப் படத்தில் மிருதங்க வித்வான்கள், ஒரு பாடகர், கச்சேரிகள் ஏற்பாடு செய்யும் ஒரு செல்வந்தர் ஆகியோர் அமர்ந்திருக்க மிருதங்கம் செய்யும் வினைஞர்கள் ஐந்து பேர் கையில் ஒரு பாராட்டுப் பட்டயத்துடன் பின்னால் நிற்கின்றனர்.
கிருஷ்ணாவுக்கு ஆத்திரம் பொங்கி வருகிறது. “அவ்வளவுதான் சார் இவங்க பவிஷு! அவார்ட் வாங்கறவன் நிக்கறான். அவார்ட் குடுக்கறவன் உட்கார்ந்து இருக்கான்! பார்ப்பனியம் வேற எப்படி நடத்தும்?…இத்யாதி, இத்யாதி…”
உண்மையில் நடந்தது என்ன?
அந்த விழா ஒரு மிருதங்க வித்வான் ஐம்பது வருடங்கள் துறையில் வாசித்ததைப் பாராட்டி ஒரு சபையில், அந்த வித்வானின் சிஷ்யர்களால் நடத்தப்பட்ட நிகழ்ச்சி. அந்த விழாவில் ஐந்து மிருதங்க வினைஞர்கள் கௌரவிக்கப்படுகிறார்கள்.
நிகழ்ச்சி நடத்தப்பட்டது மிருதங்க வித்வானைப் பாராட்டி. அவர் பணியைப் பாராட்ட அவர் துறை சார்ந்த மற்ற மிருதங்கக் கலைஞர்கள், பாடகர், கச்சேரி ஏற்பாடு செய்யும் பிரமுகர் ஆகியோர் மேடையில் பிரதானமாய் அமர்ந்திருக்கிறார்கள்.
நிகழ்ச்சியின் ஒரு அங்கமாய் மிருதங்கம் செய்யும் வினைஞர்களுக்கு விருது வழங்கும் போது, எடுக்கப்படும் குழுப் புகைப்படத்தில், நிகழ்ச்சியின் நாயகனும், அந்த விழாவில் பேச வந்த சிறப்பு விருந்தினர்களும் இருக்கையைவிட்டு எழுந்து வினைஞர்களுக்கு உட்கார இடம் கொடுத்திருக்காதற்கு காரணம் பார்ப்பனியம் என்கிறார் கிருஷ்ணா.
சங்கீதத் துறையில் இருக்கும் நிஜமான பிரச்னைகளை சுட்டும் போது, அதை விளக்குகிறேன் பேர்வழி என்று எதையெல்லாமோ சொல்லிக் குழப்பியடித்துள்ளார் கிருஷ்ணா.
கிருஷ்ணா சொல்வதில் பிரச்னை இருக்கிறது என்றால், “அப்போ சங்கீதத் துறை அப்பழுக்கே இல்லாமல் இருக்கிறதா?”, என்று பொங்கி வருபவர்கள் ஒரு பக்கம்; “அதுதான் அப்பவே சொன்னோம்! மிஷனரி காசை வாங்கிட்டு, நல்லவங்க மேல புழுதி வாரி இரைக்கறதேதான் கிருஷ்ணா வேலை.”, என்று வரிந்துகட்டிக் கொண்டு வருபவர்கள் இன்னொரு பக்கம்.
இவற்றுக்கிடையில் உண்மை எங்கோ ஓரமாக உறங்கிக் கொண்டிருக்கிறது.
- லலிதாராம் ராமசந்திரன் (Lalitharam Ramachandran )