“பகவான் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் (மீ.விசுவநாதன்)
காளி பூஜை செய்தவர் – அவள்
காலைத் தொழுது வென்றவர்
ஆளி வர்யார் கேட்கிறாய் – அவர்
அன்பு இராம கிருஷ்ணராம்
கங்கை நீரைப் போன்றவர் – புதுக்
காற்றைப் போலத் தூயவர்
எங்கு யாரு என்கிறாய் – அவர்
இராம கிருஷ்ண தேவராம்
பந்த பாசம் வென்றவர் – இறை
பக்தி ஒன்றே செய்தவர்
எந்த சாமி என்கிறாய் – அவர்
எங்கள் இராம கிருஷ்ணராம்
சீடன் தேடிச் சென்றவர் – நற்
சீடர் கண்டு தந்தவர்
நாடு போற்றும் ஞானியர் – அவர்
நமது இராம கிருஷ்ணராம்
வெளியு லகினை விட்டவர் – நல்
வினைகள் செய்த வித்தகர்
ஒளிமு கத்து முத்தராம் – அவர்
உருவில் இராம கிருஷ்ணராம்
தன்னில் நம்மைக் கண்டவர் – பிறர்
தவிப்பை நீக்கும் தாயவர்
உன்னை என்னை உயர்த்திடும் – அந்த
உயிரே இராம கிருஷ்ணராம்.
(இன்று 18.02.2020 – பகவான் ஸ்ரீராமகிருஷ்ண
பரமஹம்சரின் பிறந்த தினம்)