
ஹைதராபாத் வேதபவன் ஸ்தாபகர் பிரபல வேத பண்டிதர், வேத பாஷ்ய ரத்னாகர, பிரம்மஸ்ரீ வெங்கட்ராமன் கனபாடிகள் காலமானார்.
ஜனாதிபதி விருது பெற்றவர், உலகப் புகழ்பெற்ற வேத பண்டிதர், சங்கர வேதபாடசாலை(வேத பவன்)யை நிறுவியவர் ஶ்ரீவேங்கட்ராமன் கனபாடிகள் (74) வெள்ளிக்கிழமை நேற்று மாலை காலமானார். சில நாட்களாக உடல்நலமின்றி பஞ்சாரா ஹில்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் வெள்ளிக்கிழமை மாலை அவர் காலமானார்.

வேத வித்யை பரி ரக்ஷணைக்கும் உலக அளவில் வேத வித்யையை பரப்புவதற்கும் வேங்கட்ராமன் கனபாடிகள் சிறப்பான முயற்சி செய்தார். அவர் ஆற்றிய சேவைகளுக்கு அடையாளமாக ஜனாதிபதி விருதுக்கு தேர்ந்தெடுக்கப் பட்டார்.
ஶ்ரீவேங்கட்ராமன் கனபாடிகள் 1946ல் தமிழ் நாட்டில் பிறந்தார். 1958 – 78 ஆண்டுகளுக்கு இடையில் பிரபல வேத பண்டிதர்கள் ஸ்ரீனிவாச சாஸ்திரி, ராமஸ்வாமி சர்மா, சன்னிதானம் லக்ஷ்மி நாராயண அவதானி, வீரேஸ்வர கிருஷ்ண டோங்க்ரே ஆகியோரிடம் வேத சாஸ்திரங்களை அத்யயனம் செய்தார்.
பின்னர் காஞ்சி காமகோடி பீடம், சிருங்கேரி பீடங்களில் வேதம் தொடர்பான நிகழ்ச்சிகளை நிர்வகிப்பதில் முக்கிய பங்காற்றினார். திருமலா திருப்பதி தேவஸ்தானம் வேத வித்யா கேந்திரத்தின் ஆச்சாரியராக சேவையாற்றினார். வேதம் தொடர்பாக உலக அளவில் நிகழ்ச்சிகளை நிர்வகித்தார். பல அவார்டுகள் அவரை வந்தடைந்து கௌரவம் பெற்றன.

30 ஆண்டுகளுக்கு முன் ஹைதராபாத்தில் நிலையாக வசிக்கத் தொடங்கினார். சபில்குடாவில் மிகச் சிறந்த விழுமியங்களோடு வேதபாடசாலை தொடங்கினார்.
ஹைதராபாதில் தன் வீட்டிலேயே மூன்று சிறுவர்களுக்கு வேதக் கல்வியை கற்றுத்தர தொடங்கினார். மாணவர்களின் எண்ணிக்கை அதிகமானதால் காஞ்சி மகாபெரியவா அருளாசியுடன் வேதபவனம் தொடங்கி அதில் 45 சிஷ்யர்களுக்காக வேதபாடசாலை ஆரம்பித்தார்.
தற்போது மிகப் பெரும் விருட்சமாக வளர்ந்து 150 மாணவர்கள் வேதம் பயில்கிறார்கள். ஹைதராபாத் சிகந்திராபாத் இரட்டை மாநகர் மட்டுமின்றி ஆந்திரா, தெலங்காணா இரு தெலுங்கு மாநிலங்களில் வசிக்கும் ஆன்மீக அன்பர்களுக்கு மிகச் சிறந்த வேத கேந்திரமாக வேதபவனம் விளங்குகிறது.

இதன் நிறுவனராக, நிர்வாகியாக மிகப்பெரும் பொறுப்பை வேங்கட்ராமன் கனபாடிகள் நிர்வகித்து வந்தார். ஆன்மிக அன்பர்களுக்கு மிகப்பெரும் வழிகாட்டியாகத் திகழ்ந்தார். மென்மையாக பேசக்கூடியவர். அனைத்து ஆன்மீக அன்பர்களுக்கும் உதவிகரமாக இருந்தவர்.
அவருடைய மறைவு தீராத பேரிழப்பாக ஆன்மீக அன்பர்களால் கருதப்படுகிறது. ஊரடங்கு காரணமாக அன்பர்கள் நேரில் வேதபவன் சென்று அன்னாருக்கு அஞ்சலி செலுத்த இயலாதிருப்பது வருந்தத் தக்கது.
பிரம்மஸ்ரீ ஆர் வேங்கட்ராம ஸலக்ஷண கனபாடிகள் மறைவுக்கு திருமலா திருப்பதி தேவஸ்தானம் இரங்கல் தெரிவித்துள்ளது.
மகாமகோபாத்தியாய, பாரத ஜனாதிபதி விருது பெற்ற, வேத பாஷ்ய ரத்னாகர பிரம்மஸ்ரீ ஆர் வேங்கட்ராம ஸலக்ஷண கனபாடிகள் மறைவுக்கு திதிதே ஈஓ அனில்குமார் சிங்கால், அடிஷனல் ஈஓ தர்மாரெட்டி, ஜெஈஓ பசந்த் குமார் மற்றும் உயர் அதிகாரிகள் வெள்ளிக்கிழமை இரங்கல் தெரிவித்தனர். அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய ஸ்ரீவாரு சுவாமியை பிரார்த்திப்பதாக தெரிவித்தனர்.

பிரம்மஸ்ரீ ஆர் வெங்கட்ராம சலக்ஷண கனபாடிகளின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தனர்.
திருமலை திருப்பதி தேவஸ்தான மக்கள் தொடர்பு அதிகாரி ஹைதராபாத்தைச் சேர்ந்த பிரம்மஸ்ரீ ஆர் வேங்கட்ராம சலக்ஷண கனபாடிகள், கடந்த 30 ஆண்டுகளாக திதிதே ஸ்ரீவெங்கடேஸ்வரா உன்னத வேத அத்யயன அமைப்புக்கு இசி மெம்பராக சேவைகள் ஆற்றி வந்தார்.
எஸ்வி வேத விஸ்வ வித்யாலயம் அகடமிக் கவுன்ஸில் மெம்பர் ஆக சேவையாற்றினார். நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கு வேதக் கல்வி, வேத பாஷ்யம் கற்பித்த மகா வேத பண்டிதர் ஸ்ரீவெங்கடராம கனபாடிகள். இவருடைய சேவைகள் என்றும் நினைவில் நிற்பவை. இவருடைய மறைவு வேத விஞ்ஞானத்திற்கு தீராத இழப்பு என்று புகழாரம் சூட்டினர்” என்று திதி தே மக்கள் தொடர்பு அதிகாரி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

ஶ்ரீசங்கர குருகுல வேதபாடசாலை (வேதபவன்) ஹைதராபாத் பற்றி:
ஸ்ரீ சங்கர குருகுல வேத பாடாசாலை 1984 ம் ஆண்டில், ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் ஸ்ரீ பரமாச்சாரியாரால், செகந்திராபாத் மற்றும் ஹைதராபாத்தின் இரட்டை மா நகரங்களில், பாஷ்ய ரத்னகரா ஶ்ரீ வெங்கட்ராம கனபாடிகளின் கீழ் மூன்று வித்யார்த்திகளுடன் தொடங்கப்பட்டது. இவர் நாட்டின் மிகச் சிறந்த வேத அறிஞர்களில் ஒருவர். இது அவரது இல்லத்தில் பாரம்பரிய குருகுல முறையாக துவக்கப்பட்டது.
பாடசாலையில் மாணவர்கள் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருவதால் பாடசாலையின் வளர்ச்சி மற்றும் பராமரிப்பிற்காக ஒரு தனி டிரஸ்ட் ஏற்படுத்த வேண்டும் என்று ஸ்ரீபரமாச்சாரியார் உத்தரவிட்டார். அதன்படி, 1992 ம் ஆண்டில், ஒரு அறக்கட்டளை அமைக்கப்பட்டு, இந்திய அறக்கட்டளை சட்டத்தின் கீழ் ஒரு இலாப நோக்கற்ற அறக்கட்டளையாக பதிவு செய்யப்பட்டது.

பின்னர், வித்யார்த்திகளின் எண்ணிக்கை அதிகரித்ததால், வேத பாடசாலை, செகந்திராபாத், நெரெட்மெட், சந்திரகிரி காலனியில் சங்கரா பக்தசபாவுக்கு சொந்தமான ஒரு கட்டிடத்திற்கு (1968 ஆம் ஆண்டில் ஸ்ரீ பரமச்சாரியாரால் ஊக்குவிக்கப்பட்ட ஒரு சகோதரி அமைப்பு) வேத பவனுக்கு மாற்றப்பட்டது.
காஞ்சி மற்றும் சிருங்கேரியின் ஆச்சார்யர்களால் ஆசீர்வதிக்கப்பட்ட இந்த வேத பாடசாலை, எப்போதும் வேதம் தொடர்பாக பாடுபடுவதாகவும், நமது பண்டைய பாரம்பரியமான வாய்வழி பாராயணம் செய்வதற்கும், முழு உலகத்தின் அமைதி மற்றும் நலனுக்காக வேதங்களைப் படிப்பதற்கும் உதவும் என்று உறுதியளிக்கிறது.
ராஜி ரகுநாதன், ஹைதராபாத்-62


