
திருப்பள்ளியெழுச்சி
தனியன்கள்
(திருமலையாண்டான் அருளிச் செய்தது)
தமேவ மத்வா பரவாஸுதேவம்
ரங்கேசயம் ராஜவதர்ஹணீயம்
ப்ரபோதகீம் யோ க்ருத ஸூக்திமாலாம்
பக்தாங்க்ரிரேணும் பகவந்தமீடே.
பொருள்
வைகுண்டத்தில் வீற்றிருக்கும் பரவாசுதேவனாகிய எம்பெருமானே ராஜாதிராஜனாக அரங்கத்தில் வீற்றிருக்கிறான் என்பதை முழுமையாக உணர்ந்து, அவனைத் துயில் எழுப்பும் (திருப்பள்ளியெழுச்சி என்னும்) பாசுர மாலையை அருளிச்செய்த தொண்டரடிப்பொடி ஆழ்வாரைப் போற்றி வணங்குகிறேன்.
(திருவரங்கப் பெருமாள் அரையர் அருளிச் செய்தது)
மண்டங்குடியென்பர் மாமறையோர் மன்னியசீர்த்
தொண்டரடிப்பொடி தொன்னகரம் – வண்டு
திணர்த்தவயல் தென்னரங்கத் தம்மானைப் பள்ளி
யுணர்த்தும் பிரானுதித்தவூர்.
பொருள்
தேன் வண்டுகள் விரும்பி மீண்டும் மீண்டும் விஜயம் செய்யும் பூஞ்சோலைகள் நிரம்பிய திருவரங்கத்தில் உள்ள இறைவனைத் துயில் எழுப்பும் பாசுரங்களைப் படைத்தவரும், உன்னத குணங்கள் அமையப் பெற்றவருமான தொண்டரடிப்பொடி ஆழ்வார் அவதரித்த நகரம் மண்டங்குடி. வேத விற்பன்னர்கள் நிறைந்த பாரம்பரியச் சிறப்புடைய ஊர் மண்டங்குடி. (அந்தத் திருத்தலத்தைப் போற்றுகிறேன்.)
ஆன்மிகம், தத்துவம்
மண்டம் என்பது நன்கு காய்ச்சப்படும் பாலின்மீது திரண்டுவரும் ஏட்டைக் குறிக்கிறது. மண்டங்குடி வாழ் மறையோர்கள், வேதங்களை ஓதுவது, உள்ளூரச் சிந்திப்பது, பிறருடன் விவாதிப்பது முதலிய செயல்களின் மூலம், வேதங்களின் சாரமாகத் திரண்டு நிற்கும் பரமாத்மனை முழுமையாகக் கண்டுணர்ந்தார்கள். இதனாலேயே அந்த ஊருக்கு மண்டங்குடி என்ற பெயர் வாய்த்தது. அந்த வேத நாயகனாகிய எம்பெருமானே ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொண்டிருக்கிறான் என்பதை அனுபவத்தில் கண்டுகொண்ட தொண்டரடிப்பொடி ஆழ்வார் அவதரித்த தலமும் அதுவே.

தொண்டரடிப்பொடி ஆழ்வார் அருளிச்செய்த
திருப்பள்ளியெழுச்சி
** கதிரவன் குணதிசைச் சிகரம் வந்தணைந்தான்
கன இருள் அகன்றது காலையம் பொழுதாய்
மது விரிந்தொழுகின மாமலர் எல்லாம்
வானவர் அரசர்கள் வந்து வந்தீண்டி
எதிர்திசை நிறைந்தனர் இவரொடும் புகுந்த
இருங்களிற்றீட்டமும் பிடியொடு முரசும்
அதிர்தலில் அலைகடல் போன்றுளதெங்கும்
அரங்கத்தம்மா! பள்ளியெழுந்தருளாயே. (1)
பொருள்
கதிரவன் கிழக்குத் திசையில் உதயகிரியின் உச்சியை வந்தடைந்து விட்டான். இரவின் கரிய இருள் நீங்கி, அழகிய காலைப்பொழுது மலர்ந்தது. தூய புஷ்பங்கள் எல்லாம் மலர்ந்து தேன் சொரிந்து நிற்கின்றன; வானுலகத்து தேவர்களும், பூவுலக ராஜாக்களும் பெருந்திரளாகத் திரண்டு உன் சன்னிதி வாயிலில் கூடியிருக்கிறார்கள். இவர்களோடு உடன்வந்த பெரிய ஆண் யானைக் கூட்டங்களும் பெண் யானைகளும் பிளிறும் சப்தமும் முரசுகளின் ஓசையும், கடலின் அலையோசையைப் போலத் திசையெங்கும் எதிரொலிக்கின்றன. அப்பனே, அரங்கநாதா, நீ உறக்கம் கலைந்து துயில் எழுவாய்!
அருஞ்சொற்பொருள்
மா – பெரிய, உன்னதமான (மலர்கள், மாலையாகத் தொடுக்கப்பட்டுப் பெருமாளின் திருமேனி தீண்டும் பாக்கியம் பெற்றவை. எனவே, இங்கு ‘மா’ என்பதற்கு உன்னதமான என்று பொருள் கொள்வதே பொருத்தம்.)
அரங்கத்தம்மா = அரங்கத்து அம்மா(ன்)
அம்மான் என்றால் தாய்மாமன். எனினும், அம்மாள் என்ற பெண்பால் பெயருக்கான ஆண்பால் சொல்லாக, அப்பன் என்ற பொருளிலும் அது பயன்படுத்தப்படும். அப்பன் என்பது பகவானைக் குறிக்கிறது.
இருங்களிறு – பெருவலிமை கொண்ட ஆண் யானை
ஈட்டம் – கூட்டம்
பிடி – பெண் யானை
பிடியொடு இருங்களிற்று ஈட்டமும், முரசும் என்று பதம் பிரிக்கலாம்.
- விளக்கம்: வேதா டி.ஸ்ரீதரன்