spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஆன்மிகம்ஆன்மிகக் கட்டுரைகள்பக்தி மணம் கமழும் அற்புத ஆடி!

பக்தி மணம் கமழும் அற்புத ஆடி!

- Advertisement -
sarathambal
sarathambal

கட்டுரை: கே.ஜி. ராமலிங்கம்

ஆம், உண்மைதான் இதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. அம்பாளுடன் ஆரம்பித்து ஆண்டாளின் திருப்பாவை நோன்போடு முடிகிற ஆறு மாதங்களுக்கு தட்சிணாயணம் என்று அழைக்கப்படும். இந்த அயணத்தில் தான் வரலட்சுமி விரதம், விநாயகர் சதுர்த்தி, சிராவண விரதம், நவராத்திரி, தீபாவளி, கார்த்திகை தீபம், ஸ்கந்த சஷ்டி, பாவை நோன்பு, வைகுண்ட ஏகாதசி, ஆருத்ரா தரிசனம் போன்ற பக்தி சம்பந்தப்பட்ட பண்டிகைகள் நடைபெறும். உத்தராயணத்தில் விஷேசமான பண்டிகைகள் குறைவு மேலும் பித்ருக்கள் சம்பந்தப்பட்ட காரியங்கள் செய்வதற்கு உகந்தது, பீஷ்மர் அவருடைய இச்சா ம்ருத்யு வரத்தின் படி உத்தராயண காலம் வரும் வரை அம்புப் படுக்கையில் காத்திருந்து உத்தராயணத்தில் வரும் அஷ்டமி அன்று மோட்ச கதியை அடைந்தார்.

பல்வேறு சிறப்புகள் கொண்ட ஆடி மாதம் இந்த ஆண்டு சனிக்கிழமை பிறக்கிறது.

ஜோதிட சாஸ்திரத்தில் இதை ‘கர்கடக மாதம்’ என்பார்கள்.

சூரியன் குருவின் நட்சத்திரமான புனர்பூசம் நான்காம் பாதத்தில் நுழையும் நேரத்தில் கடக ராசியில் சூரியன் செல்வதே ஆடி மாத பிரவேசம்.

தமிழ் மாத பிறப்புகளுக்கு ஒவ்வொரு முக்கியத்துவம் இருக்கிறது.

அந்தந்த கால, பருவ சூழ்நிலைக்கு ஏற்ப திருவிழாக்களையும், உற்சவங்களையும், விரத வழிபாடுகளையும் ஏற்படுத்தி வைத்துள்ளனர்.

ஆடி மாதத்தில் இருந்துதான் விரதங்கள், பண்டிகைகள், உற்சவங்கள் எல்லாம் ஒவ்வொன்றாக தொடங்குகிறது.

இந்த மாதத்தை அம்மன் மாதம் என்றும் அம்பாள் மாதம் என்றும் சிறப்பித்து கூறுவார்கள்.

அந்தளவுக்கு வீடுகளிலும், கோயில்களிலும் விழாக்களும், விரத வழிபாடுகளும் களை கட்டி விடும்.

அம்மன், அம்பாள், ஆண்டாள், சக்தி ஸ்தலங்களில் சிறப்பு பூஜைகள், ஹோமங்கள் என்று பக்தி மணம் கமழும்.

ஆடி மாதத்தில் வரும் செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகள் மிக விசேஷமானவை.

sringeri ambal sengottai mutt3
sringeri ambal sengottai mutt3

‘ஆடி செவ்வாய் தேடிக் குளி’ என்பது பழமொழி.

அதாவது விரதம் இருந்து எண்ணெய் தேய்த்து குளித்து அம்பாளை வழிபட பெண்களின் மாங்கல்ய பலம் கூடும் என்பது ஐதீகம்.

ஆடி வெள்ளி வழிபாடு செய்வது சகல பாக்யங்களையும் அள்ளித் தரும். திருமண பாக்யம் கைகூடிவரும்.

புதுமண தம்பதியருக்கும் நீண்ட காலமாக குழந்தை பாக்யம் எதிர்பார்த்திருப்போருக்கும் நல்ல அறிவாற்றல், புத்தி சாதுர்யத்துடன் கூடிய குழந்தை பாக்யம் உண்டாகும்.

ஆடி ஞாயிற்றுக்கிழமை பிரார்த்தனைகளையும் நேர்த்திக் கடன்களையும் செலுத்தும் நாளாக கருதப்படுகிறது.

அலகு குத்தி காவடி எடுத்தல், பால்குடம் எடுத்தல், பொங்கல் வைத்து வழிபடுதல், சிறப்பு பூஜைகள் செய்தல், தீ மிதித்தல், கூழ் ஊற்றுதல், அம்மன் கோயில்களுக்கு சென்று வழிபடுதல் என்று இந்த மாதம் முழுவதும் பக்தி மார்க்கத்தில் மூழ்கித் திளைப்பார்கள்.

ஆடி வெள்ளி, செவ்வாய், ஞாயிறு தவிர ஆடி அமாவாசை, ஆடிப்பூரம், ஆடிக்கிருத்திகை, ஆடித்தபசு ஆடி பவுர்ணமி, ஆடிப்பெருக்கு என்று பலப்பல விசேஷ நாட்கள் இந்த மாதத்தில் வருகின்றன.

இதில் ஆடி அமாவாசை முக்கியமானது. அன்றைய தினம் கடல், நதிகள் உள்ளிட்ட புனித நீர்நிலைகளில் நீராடி, முன்னோர்க்கு திதி கொடுப்பது மிகவும் சிறப்பானதாக கருதப்படுகிறது.

அவரவர் குடும்ப வழக்கப்படி வீட்டில் படையல் இட்டு வழிபட்டு முன்னோர் நினைவாக இல்லாதோர், இயலாதோர், முதியோர், ஆதரவற்றோர் இல்லங்களில் அன்னதானம், உடை, போர்வை போன்றவற்றை வழங்குவது பல்வேறு பாவங்களை நீக்கி புண்ணிய பலன்களை சேர்க்கும்.

ஆடி மாதத்தின் 18-வது நாள் ‘ஆடிப்பெருக்கு’ என்று கொண்டாடப்படுகிறது.

இந்நாளில் பெண்கள் தாலிக்கயிறு மாற்றி புதுக்கயிறு அணிவார்கள்.

தென்காசி மாவட்டத்தில் உள்ள சங்கரன்கோவிலில் ஆடி தபசு பிரசித்தி பெற்றது.

கோமதி அம்மனின் தவத்துக்கு இரங்கிய சிவபெருமான், புன்னை வனத்தில் சங்கர நாராயணராக ஆடி பவுர்ணமியன்று காட்சியளித்தார்.

ஆடிப்பூரம் ஆண்டாள் அவதாரம் செய்த திருநட்சத்திரம். கன்னிப் பெண்களும் திருமண பாக்யம் கைகூடாமல் இருக்கும் பெண்களும் இந்த நாளில் விரதம் இருந்து பக்தியுடன் ஆண்டாள் அருளிச் செய்த ‘வாரணமாயிரம்’ என்று தொடங்கும் பாசுரத்தை பாடி வர திருமண பிராப்தம் கூடிவரும்.

இத்தனை சிறப்புகள் மிக்க ஆடி மாதத்தில் நல்ல காரியங்களை ஆரம்பிக்க கூடாது, செய்யக் கூடாது என்ற கருத்து நிலவுகிறதே. எதனால்?

lalithambal
lalithambal

இந்த மாதத்தில் விரதங்கள், வழிபாடுகள், கோயில் திருவிழாக்கள் மாறிமாறி வந்துகொண்டே இருக்கும்.

ஆன்மீகத்திலும் இறை வழிபாட்டிலும் மனப்பூர்வமாக ஈடுபட வேண்டியிருப்பதால் மற்ற காரியங்களில், விசேஷங்களில் கவனம் செலுத்துவது சிரமம்.

இறைவனை துதிப்பதற்கும், அவன் சிந்தனையாகவே ஆன்மீக ஸ்தலங்களுக்கு சென்று தரிசனம் செய்வதற்கும் இடையூறாக மற்ற விழாக்கள், நிகழ்ச்சிகள் இருந்துவிட கூடாது என்பதற்காகவே மற்ற சுப விசேஷங்கள் இந்த மாதத்தில் தவிர்க்கப்படுகிறது.

கேரளத்தில் ஆடி மாதத்தை ராமாயண மாதமாக கொண்டாடுவார்கள். மாதம் முழுவதும் ராமாயண பாராயணம் கோவிலில் நடக்கும்.
….

அப்பர் பிரான் கண்ட கயிலாயக் காட்சியினை இப்பதிகத்தில் முழுமையாகக் கூறுகிறார்

மாதர்ப் பிறைக் கண்ணியானை மலையான் மகளொடும் பாடி
போதொடு நீர் சுமந்து ஏத்திப் புகுவார் அவர் பின் புகுவேன்
யாதும் சுவடு படாமல் ஐயாறு அடைகின்றா போது
காதல் மடப்பிடியோடும் களிறு வருவனக் கண்டேன் கண்டேன் அவர் பாதம் கண்டறியாதனக் கண்டேன்.
(அப்பர் தேவாரம்)

திருநாவுக்கரசர் @ அப்பர் கயிலை தரிசனம் பெறுவதற்காக வடதிசை நோக்கிச் சென்ற நாவுக்கரசரை, அங்குள்ள நீர்நிலையில் மூழ்கும்படி சிவன் கட்டளையிட்டார். மூழ்கிய அவர், திருவையாறில் உள்ள திருக்குளத்தில் எழுந்தார். இக்குளத்திற்கு உப்பங்கோட்டை பிள்ளையார் குளம் என்றும் சமுத்திர தீர்த்தம் என்றும் பெயருண்டு. அங்கே அம்மையப்பர் ரிஷப வாகனத்தில் காட்சியளித்தார்.

இவ்விழா ஒவ்வொரு ஆண்டும் ஆடி அமாவாசையன்று இரவில் நடக்கும். இதை அப்பர் கயிலாயக் காட்சி என்பர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe