திருப்புகழ்க் கதைகள் 214
முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்
சீ உதிரம் எங்கும் – பழநி
அருணகிரிநாதர் அருளியுள்ள நூற்றி ஐம்பத்தியெட்டாவது திருப்புகழ், ‘சீ உதிரம் எங்கும்’எனத் தொடங்கும் பழநி தலத்துத் திருப்புகழாகும். “பழநியப்பா, இந்தப் பாழ் உடலை அடியேன் நம்பி வாடாமல், திருவடியில் சேர்த்து அருள்வாயாக”என அருணகிரிநாதர் இத்திருப்புகழில் வேண்டுகிறார். இனி திருப்புகழைக் காணலாம்.
சீயுதிர மெங்கு மேய்புழுநி ரம்பு
மாயமல பிண்ட நோயிடுகு ரம்பை
தீநரிகள் கங்கு காகமிவை தின்ப …… தொழியாதே
தீதுளகு ணங்க ளேபெருகு தொந்த
மாயையில்வ ளர்ந்த தோல்தசையெ லும்பு
சேரிடுந ரம்பு தானிவைபொ திந்து …… நிலைகாணா
ஆயதுந மன்கை போகவுயி ரந்த
நாழிகையில் விஞ்ச ஊசிடுமி டும்பை
யாகியவு டம்பு பேணிநிலை யென்று …… மடவார்பால்
ஆசையைவி ரும்பி யேவிரக சிங்கி
தானுமிக வந்து மேவிடம யங்கு
மாழ்துயர்வி ழுந்து மாளுமெனை யன்பு …… புரிவாயே
மாயைவல கஞ்ச னால்விடவெ குண்டு
பார்முழுது மண்ட கோளமுந டுங்க
வாய்பிளறி நின்று மேகநிகர் தன்கை …… யதனாலே
வாரியுற அண்டி வீறொடுமு ழங்கு
நீரைநுகர் கின்ற கோபமொடெ திர்ந்த
வாரண இரண்டு கோடொடிய வென்ற …… நெடியோனாம்
வேயினிசை கொண்டு கோநிரைபு ரந்து
மேயல்புரி செங்கண் மால்மருக துங்க
வேலகிர வுஞ்ச மால்வரையி டிந்து …… பொடியாக
வேலைவிடு கந்த காவிரிவி ளங்கு
கார்கலிசை வந்த சேவகன்வ ணங்க
வீரைநகர் வந்து வாழ்பழநி யண்டர் …… பெருமாளே.
இத்திருப்புகழின் பொருளாவது – மாயையில் வல்லவனாகிய கம்சனால் ஏவப்பட்டு, கோபித்து, உலக முழுவதும் உருண்டுள்ள அண்டமும் நடுங்குமாறு, வாய் விட்டுக் கதறி நின்று, மேகம்போல் கருத்த தும்பிக்கையால் வாரிக்கொள்ளும்படி நெருங்கி வந்து, கருவத்துடன் முழக்கம் செய்து, தண்ணீரைப் பருகுகின்ற கோபத்துடன் எதிர்வந்த குவலயாபீடம் என்ற யானையின் இரண்டு கொம்புகளையும் ஒடித்து வென்ற நெடிய வடிவினரும், புல்லாங்குழல் வாசித்து பசுக்கூட்டங்களை மேய்த்துக் காத்தருளிய சிவந்த கண்களையுடையவருமாகிய நாராயண மூர்த்தியின் திருமருகரே;
தூய வேலாயுதரே; மயக்கம் புரிந்த கிரவுஞ்ச மலையிடிந்து தூளாகும்படி வேற்படையை விடுத்த கந்தக் கடவுளே; காவிரி அனைய நீர் சூழ்ந்த கலிசையில் வாழ்ந்த கலிசைச் சேவகனார் வழிபட்ட வீரை என்ற திருத்தலத்திலும், பழநியிலும், எழுந்தருளியுள்ள தேவர்கள் போற்றும் பெருமிதம் உடையவரே; சீழும் உதிரமும் எங்கும் பொருந்தி புழு நிரம்பிய, தோன்றி மறையும் மலப்பிண்டம், நோய் நிறைந்த கூடு, நெருப்பும் நரிகளும், கழுகுகளும் காக்கைகளும் தின்கின்ற, துர்க்குணங்கள் வளர்கின்ற பாசபந்த மாயையில் வளர்ந்த தோல் சதை எலும்பு, நரம்பு முதலிய சேர்ந்து மூடிய இந்த உடம்பு நிலையில்லாதது;
எமன் கையில் உயிர்போன நேரத்தில் மிகவும் ஊசியழியும் துன்பம் நிறைந்த உடலை விரும்பி, இதை நிலைத்தது என்று கருதி, மாதர்களின்மீது ஆசை வைத்து, காம நஞ்சு மிகுந்து மயங்கி, ஆழமான துயரத்தில் வீழ்ந்து மடிகின்ற அடியேனை அன்பு செய்து ஆண்டருள்வீர் – என்பதாகும். இத்திருப்புகழில் வருகின்ற வரிகளான
மாயைவல கஞ்ச னால்விடவெ குண்டு
பார்முழுது மண்ட கோளமுந டுங்க
வாய்பிளறி நின்று மேகநிகர் தன்கை …… யதனாலே
வாரியுற அண்டி வீறொடுமு ழங்கு
நீரைநுகர் கின்ற கோபமொடெ திர்ந்த
வாரண இரண்டு கோடொடிய வென்ற …… நெடியோனாம்
வேயினிசை கொண்டு கோநிரைபு ரந்து
மேயல்புரி செங்கண் மால்மருக
என்ற வரிகளில் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா குவாலயாபீடம் என்ற யானையைக் கொன்ற கதையை அருணகிரியார் பாடுகிறார்.
தன்னைக் கொல்ல வந்த தனது தங்கை தேவகியின் எட்டாவது மகன் கோகுலத்தில் நந்தகோபனிடத்தில் வளருகிறான் என்பதைக் கேள்வியுற்ற கம்சன், கண்ணனைக் கொல்ல பல அசுரர்களை அனுப்பினான். முலைப்பால் கொடுத்துக் கொல்லவந்த பூதனை, கொக்கு வடிவில் வந்த பகன், மலைப்பாம்பாக வந்த ஆகாசுரன், வண்டி வடிவில் வந்த சகடாசுரன், கழுதையாக வந்த தேநுகாசுரன், இடைச்சிறுவர்களாக வந்த பிரப்பலன், வியோமன், காளையாக வந்த அரிஷ்டன், குதிரையாக வந்த கேசி ஆகிய அனைத்து அசுரர்களையும் கண்ணன் வதம் செய்தார்.