
ஸ்ரீ விநாயகர் – கணபதி ஹோமம்!
கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன்
ஆசிரியர், கலைமகள்
சுதர்சன ஹோமம் பற்றி சிறப்பாக எழுதி உள்ளீர்கள். மகிழ்ச்சி. ஹோமங்கள் பற்றி நீங்கள் எழுதும் முதல் கட்டுரை இது! ஹோமத்தைப் பற்றி எழுத வேண்டுமானால் விநாயகப் பெருமானிடமிருந்து அல்லவா ஆரம்பிக்க வேண்டும் என்று என்னுடைய நண்பர் ஒருவர் அன்பாகத் தொலைபேசியில் வேண்டுதல் வைத்தார்.
அதன் விளைவு இந்தக் கட்டுரை! என்னிடம் உள்ள புத்தகக் (3000 புத்தகங்கள்) குவியலில் இருந்து சில புத்தகங்களைத் தேடி கண்டுபிடித்து ஆறு மணி நேரத்தில் கீழ்க்கண்ட கட்டுரையை எழுதி உள்ளேன்.
கணபதி ஹோமம் புதிய தொழில்களைத் துவக்கும் போது நடத்துவார்கள். உடல், மனம், ஆன்மிக அம்சங்களில் உள்ள தடைகள் நீங்கி வாழ்வில் வெற்றி கிடைக்கும். பொருளாதாரம், படிப்பு, ஆரோக்கியம் போன்ற அம்சங்களில் உள்ள தடைகள் நீங்கும். மற்ற ஹோமங்களைத் துவக்குவதற்கு முன்பு கணபதி ஹோமம் செய்ய வேண்டும் என்கிற பொதுவான விதியும் உள்ளது.
மஹாகணபதி ஹோம மந்திரங்களை உருவாக்கியவர் கனகரிஷி. ஹோமமாகச் செய்தவர் காஷ்யப மகரிஷி. அருகம்புல்லின் மகத்துவத்தை எல்லோரும் அறியச் செய்தவர் காஷ்யப்பர்.
சிவபெருமான் ஆனாலும் அவரும் முதலில் கணபதியை வழிபட்டுத் தான் எந்தக் காரியத்தையும் தொடங்க வேண்டும். இதற்கு ஒரு ஸ்தல புராணக் கதை வழங்கப்படுகிறது.
திரிபுரம் எரிக்க சிவபெருமான் செல்லும் பொழுது தேர் அச்சு முறிந்தது. இதற்கு கணபதியிடம் விடை பெறாததே காரணம் என்று கணபதிக்கு ஆசி வழங்கிய ஸ்தலம் தமிழகத்தில் உள்ள அச்சிறுபாக்கம் என்னும் கிராமம். அச்சு + இறு + பாக்கம் – அச்சிறுபாக்கம் என்பது மருவி அச்சரப்பாக்கம் என தற்போழுது வழங்கப் பெறுகிறது.
சுக்லாம்பரதரம் என்ற மந்திரத்தை முழுவதுமாகச் சொல்லி பின்னர்தான் வேள்விகளையும் ஹோமங்களையும் ஆரம்பிப்பார்கள்.
வெண்ணிற ஆடை அணிந்தவரும் (சுக்லாம்பரதரம்), உலகத்தைக் காப்பவரும் (பகவான்), வெண்மை நிறத்தவரும் (சசி வர்ணம்), நான்கு கரங்களை உடையவரும் (சதுர்புஜம்) , மலர்ந்த (பிரசன்ன வதனம்) முகத்தை உடையவரும், அனைத்து தடைகளையும் (சர்வ விக்ன) நீக்குபவரும், ஆனவரை அமைதிப்படுத்தி உள்ளத்தில் இருத்துகிறேன் . இதில் விநாயகர் பெயர் இல்லையே என்று எண்ணலாம். மூல முதல்வனின் பெயர், எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்ட ஒருவனின் பெயர் இடம் பெற வேண்டும் என்பது நியதி அல்ல. அது மறைமுகமாக சொல்லப் பட்டுள்ளது என்கின்றனர் சமஸ்கிருத ஆய்வாளர்கள்.
ஆதிசங்கரரின் சமஸ்கிருத மொழியில் உள்ள கணேச பஞ்சரத்னம் தமிழில் அவ்வை அருளிய விநாயகர் அகவல் ஆகியவற்றில் அனைத்து தத்துவங்களும் விநாயகரின் பெருமையும் கூறப்பட்டுள்ளது. வெள் எருக்கினால் செய்த விநாயகரைப் பூஜித்தல் மிகவும் சிறந்தது என்றும் சொல்வார்கள்.
கொழுக்கட்டை, அவல், பொரி, ஸத்துமா, கரும்புத்துண்டு, தேங்காய்க் கீற்று, எள், வாழைப்பழம் (அறுகம்புல்லாலும் ஹோமம் செய்ய வேண்டும்) ஆகியவை கணபதி ஹோம திரவியங்கள் ஆகும். எல்லா ஹோமங்களையும் செய்வது போல் அக்னி வளர்த்து அதில் நெய் ஊற்றி மேலே உள்ள பொருட்களை பூர்ணாஹூதியின் போது கொடுக்க வேண்டும்.
திண்டிவனத்துக்கு அருகில் உள்ள ஆல கிராமத்தில் பிள்ளையார் சிலை ஒன்று கிடைத்துள்ளது. 75 சென்டி மீட்டர் உயரமும், 40 சென்டிமீட்டர் அகலமும் கொண்ட ஒரே கல்லில் வடிவமைக்கப்பட்டிருக்கும் அழகிய விநாயகர் சிலை தமிழகத்திலேயே மிகவும் பழைமையான விநாயகர் சிலையாகக் கருதப்படுகிறது. அதனால்,அவரை ‘மூத்த விநாயகர்’ என அழைக்கிறார்கள்.
பிள்ளையார்பட்டியில் உள்ள கற்பக விநாயகர் சிலை, கி.பி. 6-ம் நூற்றாண்டைச் சேர்ந்தது.
ஆலகிராமத்தில் உள்ள யம தண்டீஸ்வரர் கோவிலில் உள்ளஇந்த விநாயகர் சிற்பத்தில் காணப்படும் தமிழ் வட்டெழுத்துகள், கி.பி. 4-ம் நூற்றாண்டிற்கும் கி.பி. 6-ம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்டது. எனவே இந்தச் சிற்பமே பிள்ளையார்பட்டிச் சிலையை விடப் பழைமையானது என்பது கல்வெட்டின் மூலம் உறுதியாகிறது. இந்தச் சிற்பத்தில் ‘பிரமிறை பன்னூற – சேவிக- மகன் -கிழார் – கோன்-கொடுவித்து’ எனப் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த வாசகம் கல்வெட்டை செதுக்கிய சிற்பியை குறிக்கிறது” என்றும் தெரிய வருகிறது.
பழைய தமிழ் இலக்கியங்களும் பிள்ளையாரைப் பற்றிப் பேசுகின்றன. “மூத்த பிள்ளையார் திருமும்மணிக்கோவை” என்னும் இந்த நூல் பதினோராம் திருமுறையில் இடம் பெற்றுள்ள நூல்களில் ஒன்று. 96 வகையான சிற்றிலக்கியங்களில் ஒன்று மும்மணிக்கோவை.
இதன் ஆசிரியர் அதிராவடிகள் (அதிரா அடிகள்); காலம் எட்டாம் நூற்றாண்டு அகவல், வெண்பா, கட்டளைக் கலித்துறை என்னும் மூவகைப் பாடல்கள் மாறி மாறித் தொடர்ந்துவரும் 30 பாடல்கள் கொண்ட நூல் இது. 24 முதல் 30 வரை இருந்த பாடல்கள் இப்போது கிடைக்கவில்லை.
அகரம் உயிரென்றும், உகாரம் இறையென்றும், மகாரம் மலமென்றும் கூறுவதால் அகரமாகிய உயிர் உகாரமாகிய இறைவனோடு இயைந்து ஒன்றியிருக்கும் நிலையை விளக்குவதே பிள்ளையார் சுழியாயிற்று( ” உ ” )என்கிற கருத்தும் ஆன்மீக அன்பர்களிடம் நிலவுகிறது!
கணபதி ஹோம மந்திரங்களைத் தனியாக நூல்களில் பார்த்துத் தெரிந்து கொள்ளவும். கணபதி ஹோமம் எந்த ஒரு காரியத்தைத் துவங்குவதாக இருந்தாலும் முதலில் செய்ய வேண்டிய ஹோமம் ஆகும்! மஹா கணபதியே நமஹ|