spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஅரசியல்நீட் விலக்குக் கோரிக்கை: ஸ்டாலினின் புதிய கூத்து!

நீட் விலக்குக் கோரிக்கை: ஸ்டாலினின் புதிய கூத்து!

- Advertisement -

— ஆர். வி. ஆர்

ஒரு பொது நிகழ்ச்சிக்காக அண்மையில் சென்னை வந்த ஜனாதிபதி திரவுபதி முர்மு டெல்லி திரும்புவதற்காகச் சென்னை விமான நிலையத்தில் இருந்தார். அவரை வழி அனுப்ப விமான நிலையம் வந்த முதல்வர் மு. க. ஸ்டாலின் ஜனாதிபதியிடம் ஒரு ஸ்டண்ட் அடித்துவிட்டுத் தான் வந்த பிரதான வேலை முடிந்ததில் திருப்தி அடைந்தார்.

அது என்ன ஸ்டண்ட்? தற்போதைய தமிழக சட்டசபை நிறைவேற்றிய நீட் விலக்கு மசோதாவுக்கு ஜனாதிபதி விரைவில் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று தான் எழுதிய புதிய கடிதத்தை ஸ்டாலின் நேரடியாக ஜனாதிபதியின் கையில் கொடுத்தார். அதுதான் அந்தக் கூத்து.

ஜனாதிபதி என்ன செய்வார்? நாம் பிளாட்பாரத்தில் நடக்கும்போது நம் கையில் திணிக்காத குறையாக நம்மிடம் கொடுக்கப்படும் விளம்பரத் தாள்களை நாம் பாவமே என்று வாங்குவது போல் அவரும் வாங்கி இருப்பார். மத்திய அரசு அநேகமாக அதைப் பைலில் தூங்க வைக்கும். வேறு நடவடிக்கை எடுக்க அந்தக் கடிதத்தில் துளியும் சாரமில்லை.

மருத்துவச் சேர்க்கைக்கான நீட் நுழைவுத் தேர்விலிருந்து தமிழகத்திற்கு சட்டம் விலக்குத் தரவேண்டும் என்பது திமுக-வின் நிலைப்பாடு. அந்தப் பைத்தியக்கார நிலையை, அந்தப் பித்தலாட்டத்தை, நமது மாநில மக்கள் புரிந்து கொள்ளவே மாட்டார்கள் என்று ஸ்டாலின் எண்ணுகிறார்.

ஒரு அப்பட்டமான சுயநலம் மிக்க மோசடிக் கோரிக்கையை இவ்வளவு வெளிப்படையாக வேறு எந்தத் தலைவர் அடிக்கடி மக்கள் முன் வைத்து மத்திய அரசிடமும் வலியுறுத்திக் கொண்டே இருப்பார்? இதைத் திமுக செய்கிறது, ஸ்டாலின் இதற்குக் குரல் கொடுக்கிறார், என்றால் என்ன அர்த்தம்?

தமிழர்கள் உட்பட, சாதாரண இந்தியர்கள் அப்பாவிகள். அரசின் ஒரு திட்டம் அல்லது செயல்பாடு நாட்டை முன்னெடுத்துச் செல்லுமா –அதன் வழியாகத் தங்களின் வாழ்வு முன்னேறுமா – என்பது பற்றித் தெளிவான புரிதல் இல்லாதவர்கள், அதனால் அதில் அக்கறை இல்லாதவர்கள். அவர்களின் ஏழ்மையும் வாழ்க்கை நிலையும் அப்படித்தான் அவர்களை வைத்திருக்கும்.

நீட் தேர்வின் அவசியம், நீட் விலக்குக் கோரிக்கையின் ஓட்டைகள் ஆகியவை பற்றித் தமிழ்நாட்டின் சாதாரண மக்கள் அறிய முடியாது, அவர்கள் கவலைப்பட இடமில்லை. ஆகவே ஸ்டாலின் இப்படித்தான் நினைப்பார்: ‘நாம் நீட் விலக்கு கேட்பதால் சாதாரண மக்களிடம் நமக்குக் கெட்ட பெயர் வராது. ஒருவேளை நாம் இதில் வெற்றி பெற்றால் நமக்கு வரும் நன்மைகளும் அந்த மக்களுக்குப் புலப்படாது. இப்போதைக்கு இந்த நீட் விலக்கு விளையாட்டை நாம் தொடர்ந்து நடத்துவோம்!’

நீட் நுழைவுத் தேர்வு தமிழகத்தில் யாரை பாதிக்கிறது, எதனால் தமிழகத்திற்கு நீட் வேண்டாம் என்று ஸ்டாலின் ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்தில் சொல்லி இருக்கிறார் – அது அவரின் வழக்கமான புளுகு தான்.

“நீட் தேர்வின் அடிப்படையிலான மாணவர் சேர்க்கை ஏழை மற்றும் பின்தங்கிய வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு எதிரானது என்பதால் தமிழகத்தில் பிளஸ் 2 மதிப்பெண்கள் வழியே மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடந்தது” என்று தன் கடிதத்தில் ஆரம்பிக்கிறார் ஸ்டாலின். அதாவது, நீட் தேர்வு இல்லாமல் பிளஸ் 2 மதிப்பெண்கள் அடிப்படையிலேயே தமிழகத்தில் மருத்துவச் சேர்க்கை நடைபெற்றால் “ஏழை மற்றும் பின்தங்கிய வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள்” பயன் அடைவார்கள், இப்போது நீட் தேர்வு வந்ததால் அத்தகைய மாணவர்கள் பயன் அடையவில்லை என்பதுதான் ஸ்டாலினின் ஒரே பாயிண்ட். இது போலியான பேச்சு, பஞ்சரான வாதம்.

தமிழகத்தின் தனியார் மருத்துவக் கல்லூரி முதலாளிகள் மற்றும் அவர்களுக்குத் துணை நிற்கும் அரசியல் தலைவர்கள் நீட் தேர்வு வந்ததால் எவ்வளவு பிரும்மாண்ட நஷ்டத்தை அடைந்தார்கள் என்று திமுக-வுக்கும் மற்ற அரசியல் கட்சிகளுக்கும் தெரியும். மத்திய அரசுக்கும் தெரியும்.

ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்தில் ஸ்டாலின் முக்கியமாக என்ன சொல்லவில்லை என்பதைப் பாருங்கள்.

‘நீட் தேர்வு வினாக்கள் மருத்துவச் சேர்க்கைக்கு சம்பந்தமே இல்லாதவை’ என்று ஸ்டாலின் சொல்லவில்லை.

‘நீட் தேர்வு சொத்தையாக, தரம் குறைந்ததாக இருக்கிறது, அதை விட தமிழகத்தின் பிளஸ் 2 தேர்வு மதிப்பானது, தரம் உயர்ந்தது’ என்றும் அவர் சொல்லவில்லை.

‘நீட் தேர்வு முறையை விட, தமிழகத்தில் முன்பிருந்த பிளஸ் 2 வழியிலான மருத்துவச் சேர்க்கை வெளிப்படையாக, பாரபட்சமின்றி அமைந்தது’ என்றும் ஸ்டாலின் ஜனாதிபதியிடம் பெருமைப் பட்டுக் கொள்ளவில்லை.

நீட் தேர்வு முறையில் பட்டியல் ஜாதியினர், பட்டியல் பழங்குடி மக்கள் மற்றும் பின்தங்கிய வகுப்பினருக்காகத் தமிழக மருத்துவச் சேர்க்கைகளில் இட ஒதுக்கீடு கடைப் பிடிக்கப் படுகிறது. ஆகையால் ஸ்டாலின் எப்போதும் பேசும் சமூக நீதிக்கு நீட்டால் நமது மாநிலத்தில் குறைவில்லை.

வசதி குறைந்தவர்கள் மற்றும் மிக ஏழைக் குடும்பத்தில் பிறந்த மாணவர்களும் நீட் எழுதித் தமிழகத்தில் மருத்துவச் சேர்க்கை பெற்ற விவரங்கள் வருடா வருடம் பத்திரிகைகளில் போட்டோவுடன் வருகின்றன. படிப்பில் நாட்டமுள்ள ஏழைகள் நலனும் நீட் முறையில் காக்கப்படுவது தெரிகிறது.

இதுதான் நீட் தேர்வின் வெளிப்படையான நல்ல விளைவென்பதால், ஸ்டாலின் பொதுமக்களிடம் சொல்ல விரும்பாத, சொல்ல முடியாத, ஏதோ கசமுசா விஷயம் தானே திமுக-வின் நீட் எதிர்ப்புக்குக் காரணம்?

இன்னொரு விஷயம். நன்கு நிர்வகிக்கப் படும் நீட் தேர்வு முறை வந்த பின், பெரிய மனிதர்களின் சிபாரிசைப் பாக்கெட்டில் வைத்திருக்கும் தகுதிக் குறைவான மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கப் படுவதில்லை. இந்த உண்மையைச் சில நாட்கள் முன்பு திமுக பிரமுகர் தயாநிதி மாறன் ஒரு பொது மேடையில் தன்னையும் அறியாமல் அம்பலப் படுத்தினார். அவர் பேசியது இது:

“என் மகளைப் பள்ளிக் கூடத்தில் சேர்க்கும் சமயத்தில் நான் அவளை ஸ்டேட் போர்டு பள்ளியில் சேர்க்க நினைத்தேன். என் மனைவியோ சி.பி.எஸ்.சி. பாடத் திட்ட பள்ளியை விரும்பினார் – பின்னாளில் மருத்துவக் கல்லூரியில் சேர்க்கை எளிதாகக் கிடைக்கும் என்ற எண்ணத்தில். அப்போது நான் சொன்னேன்: ‘நீ ஏம்மா கவலைப் படற? எங்க கலைஞர் எவ்வளவு பேருக்கு சீட் வாங்கிக் குடுத்திருக்காரு! எங்கப்பா எவ்வளவு பேருக்கு சீட் வாங்கிக் குடுத்திருக்காரு! எங்க மாமா ஸ்டாலின் எத்தனை பேருக்கு சீட் வாங்கிக் குடுத்திருக்காரு! நானே மந்திரியா இருந்தபோது எவ்வளவு பேருக்கு சீட் வாங்கிக் குடுத்திருக்கேன்! என் பொண்ணுக்கு நான் வாங்கித் தர மாட்டேனா? என்று மார் தட்டி நின்றேன். அதன்படி என் மகளை ஸ்டேட் போர்டு பள்ளியில் சேர்த்தேன். 2017 வந்தது. அப்போது என் மகள் பிளஸ் 2 முடித்தார். வந்தது பார் நீட்! என்னாச்சு? என் மகளுக்கு மருத்துவ சீட் கிடைக்கவில்லை…….”

முன்பு தமிழகம் கடைப்பிடித்த பிளஸ் 2 வழி மருத்துவச் சேர்க்கை முறையில் கலைஞர் கருணாநிதி, முரசொலி மாறன், மு.க.ஸ்டாலின் மற்றும் தயாநிதி மாறன் எத்தனையோ நபர்களுக்கு மருத்துவ சீட் கிடைக்கச் செய்தார்கள் என்றால், அப்படி மருத்துவப் படிப்பில் சேர்ந்த மாணவர்கள் அனைவரும் ஸ்டாலின் தனது கடிதத்தில் தாங்கிப் பிடித்த ஏழைகளா, பின் தங்கிய வகுப்பினரா? அனேகமாக இருக்க முடியாது.

முன்பு பிளஸ் 2 வழியில் சேர்க்கை நடந்த போது ஏழைகள் மற்றும் பின் தங்கிய வகுப்பினர் பாதிக்கப் படவில்லை என்று ஸ்டாலின் ஜனாதிபதியிடம் தெரிவித்தது உண்மை என்றால் – அதாவது அத்தகைய மாணவர்களுக்கு முன்பு சுலபமாக மருத்துவச் சேர்க்கை கிடைத்தது என்றால் – அப்போது திமுக பிரமுகர்கள் சீட் “வாங்கிக் கொடுத்த” எக்கச்சக்கமான மாணவர்கள் ஏழைகள் அல்ல என்றுதானே அர்த்தம் – அவர்களில் பின்தங்கிய வகுப்பினர் இருந்தாலும்?

திமுக-வின் நீட் விலக்குக் கோரிக்கையில் ஒரு சத்தும் இல்லை, ஆனால் வண்டி வண்டியாக மர்மம் இருக்கிறது என்பதை தயாநிதி மாறனும் இப்போது உளறிக் கொட்டி விட்டார். ஆனாலும் ஸ்டாலின் கவலைப் பட மாட்டார். அதற்கெல்லாம் சிறிதாவது ஒருவரிடம் வெட்க உணர்வு இருக்க வேண்டுமே?

 Author: R. Veera Raghavan, Advocate, Chennai

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe