spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஅரசியல்நியாயத்தின் முகம் விஜயகாந்த்!

நியாயத்தின் முகம் விஜயகாந்த்!

- Advertisement -
500x300 1717190 vijayakanth modi

— ஆர். வி. ஆர்

சில திரைப்பட நடிகர்களிடம் சில விசேஷ தனிமனிதப் பண்புகள் இருக்கலாம். அந்தப் பண்புகள் அவர்களின் நடிப்பையும் தாண்டி எல்லா மக்களையும் பரவலாக ஈர்க்கும். அவர்கள் நடிக்கும் பல கதாபாத்திரங்களில் அந்தப் பண்புகள் அவர்களுக்காக வைக்கப்படும். திரை நடிகரும் தரை மனிதரும் ஒருவரை ஒருவர் உயர்த்திப் பிடிப்பார்கள். அப்படி ஒரு நடிகர், மறைந்த விஜயகாந்த்.

விஜயகாந்தின் பண்பு எதுவாக இருந்தது? சாதாரண மக்களுக்கு அவர் நியாயத்தின் முகமாகத் தென்பட்டார். உரத்து நியாயம் கேட்பது அவரது குணமாகப் பார்க்கப்பட்டது. அத்தகையவர், நாள்தோறும் அநீதியையும் அநியாயத்தையும் பலதரப்பில் எதிர்நோக்கும் சாதாரண மக்களுக்கு உயர்ந்த மனிதராகத் தென்பட்டார். இதுதான் விஜயகாந்த் வெற்றியின் நுட்பம். அவரது மனிதத் தன்மையும் அவருக்கு மெருகு சேர்த்தது.

அன்பின் முகமாக இருந்தவர் எம்.ஜி.ஆர். நியாயத்தின் முகமாக இருந்தவர் விஜயகாந்த். போர்க்குணத்தின் முகமாக இருந்தவர் ஜெயலலிதா. இப்போது எளிமையின் முகமாக இருப்பவர் ரஜினிகாந்த். இந்த நடிகர்கள் சாதாரண மக்களின் அபிமானத்தைப் பெற்றது இந்த உயர்ந்த பண்புகளுக்காகத்தான். என்ன காரணம் ஆனாலும் – தனிப்பட்ட வாழ்விலோ, அரசியலிலோ, அரசு நிர்வாகத்திலோ இவர்கள் தவறு செய்திருந்தாலும் – இவர்களைச் சாதாரண மக்களின் மனதிலிருந்து அகற்ற முடியாது.

விஜயகாந்த் நியாயத்தின் முகமாக சாதாரண மக்களால் அங்கீகரிக்கப் பட்டார் என்பதற்கு ஒரு உதாரணத்தைப் பார்க்கலாம்.

2005 செப்டம்பரில் விஜயகாந்த் தேமுதிக என்ற தனிக் கட்சி ஆரம்பித்தார். அடுத்த எட்டு மாதத்தில் தமிழக சட்டசபைத் தேர்தல் வந்தது. வலுவான திமுக மற்றும் அதிமுக-வை எதிர்த்து, கூட்டணி எதுவும் இல்லாமல், எல்லாத் தொகுதிகளிலும் தனது கட்சி வேட்பாளர்களை நிறுத்திப் போட்டியிட்டார் அவர். முடிவாக விஜயகாந்த் கட்சியில் அவர் மட்டும் தான் ஜெயித்தார். இருந்தாலும் தமிழக மக்களின் 8.4 சதவிகித ஓட்டுக்களை அவர் கட்சி மாநிலத்தில் பெற்றது – அதுவும் திமுக மற்றும் அதிமுக-வை ஒருசேர எதிர்த்துப் பெற்றது. அது மட்டுமே விஜயகாந்தின் அசாதாரண வெற்றி. பிறகு 2009-ல் நடந்த லோக் சபா தேர்தலில் தனியாகவே தமிழகத்தின் எல்லாத் தொகுதிகளில் நின்ற அவர் கட்சி, ஒரு சீட்டும் ஜெயிக்கவில்லை என்றாலும் மாநிலத்தில் 10.1 சதவிகித வாக்குகளைப் பெற்றது. ஆனால் இந்த உந்துசக்தியை நிலைநிறுத்தி, பலதரப்பட்ட மக்களிடையே விரிவாக்கி, அரசியலில் மேலும் வெற்றி அடையும் பதவிசும் சாமர்த்தியமும் அவரிடம் இல்லை. கூடிவந்த உடல் நலமின்மையும் அவரை முடக்கியது.

விஜயகாந்தின் ஆரம்ப 8 சதவிகித தேர்தல் சாதனைக்குக் காரணம்: திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் அநியாயம் செய்கின்றன, அவற்றை எதிர்க்கவல்ல நியாயவான் விஜயகாந்த் என்று மக்களிடம் இருந்த உள்ளுணர்வு தான். நடிப்புத் துறையில் விஜயகாந்தை விட பன்முகச் சிறப்புடையவர் என்று பேரெடுத்த கமல் ஹாசன் முயன்றிருந்தாலும் அன்று இந்தச் சாதனையைச் செய்திருக்க முடியாது. இனிமேல் கமல் ஹாசனால் அப்படி முயற்சிக்க நினைக்கவும் முடியாது. நடிகர் என்பதையும் தாண்டி விஜயகாந்த் நியாயத்தின் முகமாக மக்களுக்குத் தோன்றினார், அது விஜயகாந்தின் சிறப்பு என்பதை இந்த ஒப்பீடு உணர்த்தும்.

தமிழக அரசியலில் ஊறி இருக்கும் அநியாயத்தை எதிர்த்துப் போரிடும் நியாயத்தின் முகம் – அது இப்போது யாரிடம் இருந்தாலும் – நீண்ட காலம் பிரகாசமாக ஒளிரவேண்டும். அந்த முகம் தெளிவாக, தீட்சண்யமாக, நேர்மையாக இருந்தால் சாதாரண மக்கள் நிச்சயம் அடையாளம் கண்டு வரவேற்பார்கள். பார்க்கிறோம் அல்லவா?

 Author: R. Veera Raghavan, Advocate, Chennai
Blog: https://rvr-india.blogspot.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe