ஹிமா(லய சாதனை) தாஸ்! வாழ்த்துகள்!

ஹிமா தாஸ் நம் தேசத்தின் பெருமை. எப்படி வென்றாள் இந்தப் பதினெட்டு வயதுச்சிறுமி? பெரிய அகாடமிகளில் பயிற்சி இல்லை. சர்வதேச பிராண்ட் ஷூ இல்லை. உடைகளும் விளையாட்டுக்கென வடிவமைக்கப்பட்ட பிரத்தியேக ரகமில்லை. ஆங்கிலம் சரளமாகப் பேசத் தெரியவில்லை!!

இவள் எப்படி வென்றாள் என்ற கேள்வியை விட இவளெல்லாம் எப்படி வெல்லலாம் என்ற ஆற்றாமையே இந்திய தடகள கூட்டமைப்பின் ஆட்கள் முதல் ப(ர)த்திரிக்கையாளர் வரை பேச்சில் தொனிக்கிறது.

தமிழகத்தின் பெரும்பாலான ஊடகங்களுக்கு இது செய்தியாகவே தெரியவில்லை என்பதில் வியப்பில்லை. அவர்கள் அவ்வளவுதான்.

ஒன்று கவனிக்கவேண்டும். 400 மீட்டர் ஓடி முடித்து குறுக்கே கட்டப்பட்ட கயிற்றைத் தாண்டியதும் ஏதோ சாவகாசமாக பொடி நடை நடந்து வந்தவள் போல கைகளை ஆட்டிக்கொண்டு சிரித்தபடி மைதானத்தை வலம் வந்தாள் ஹிமா. அவள் 400 மீட்டர் மட்டும் ஓடிப் பயிலவில்லை என்பது அவள் வென்று நின்ற நிமிர்வில் தெரிந்தது.

ஓடினாள், பயின்றாள், 4000 மீட்டர் என்றாலும் முடியும் என்று சிரித்தபடி வென்றாள் அந்தக் காமாக்யா தேவியின் துகள்.

காரணம்?

எம்பிஏ படித்திருந்தாலும் எம்பி எம்பி பிஏ கூடத் தாண்டாத அமெரிக்கனோ ஐரோபியனோ சொல்வதை “எஸ் சார்!” என்று மறுசிந்தனையின்றி ஏற்றுக் கொண்டு அவர்களின் காலணியை நாவால் பளபளக்க வைப்பதைப் பெருமை என்றெண்ணும் “என்னவானாலும் வெள்ளைக்காரன் நம்மைவிட பெரியவன்” என்ற தாழ்வு மனப்பான்மையை ஊட்டி வளர்க்கும் ”உயர்கல்வி” அவளுக்கு இல்லை.

பட்டிக்காட்டுப் பெண்ணே உன்னால் வெள்ளைக்காரனை தோற்கடித்து வரமுடியுமா? அவர்களோடு போட்டியில் கலந்து கொள்வதே பாக்கியம் என்று தலைதட்டி வளர்வதைத் தடுக்கும் உலகப்புகழ் கோச்சுகள் அவளுக்கு இல்லை.

இங்கே பயிற்சி போதாது என்றும், அவர்கள் எப்படிப் பயில்கிறார்கள் தெரியுமா என்றும் படங்காட்டித் தன்னம்பிக்கையை தகர்க்கும் ”பயிற்சி மையங்கள்” பக்கம் அவள் தலைவைத்துப் படுத்ததில்லை.

அன்னைபூமியில் விளைந்த அன்னை ஊட்டிய சோற்றைத் தவிர உடலை உறுதியாக்கும் வெளிநாட்டு “ஆரோக்கிய வஸ்துக்களை” அவள் உண்டதில்லை.

எல்லாவற்றுக்கும் மேலாக ஆங்கிலம் தெரியாவிட்டால் திறமையே இல்லை என்ற வான்கோழித்தனமான அரசாங்கம் அசாமிலும் பாரதத்திலும் இப்போது இல்லை.

உம்மோடு இந்த விஷயத்தில் உடன்படுகிறேன் ஸ்ரீமான் மோகந்தாஸ் கரம்சந்த் காந்தி!
பாரதத்தின் உயிர் கிராமங்களில்தான் உயிர்ப்புடன் உள்ளது.
பட்டணங்களில் பெரும்பாலும் வெண்டிலேட்டரே வாழவைக்கிறது.

வாழ்க நீ ஹிமா….. அன்னை பராசக்தி உன்னை உயரங்கள் பல காண உயர்த்துவாள். உள்ளத்தால் உயர்விலேயே இரு. உளமார்ந்த வாழ்த்துக்கள்.

  • அருண்பிரபு ஹரிஹரன்