
நம்ம ஊரு சுற்றுலா பகுதி 10
கங்கைகொண்ட சோழபுரம்
-முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –
வைத்தீஸ்வரன்கோயிலில் இருந்து மயிலாடுதுறை வழியாக குத்தாலம் வந்து, திருமணஞ்சேரி செல்லும் வழியில் சென்றால், திருமணஞ்சேரிக்கு முந்தைய கிராமம் கண்டியூராகும். குத்தாலம், வில்லியநல்லூர் போன்ற இக்கோயிலுக்கு அருகாமையில் உள்ள ஊர்களில் உள்ள பல குடும்பங்களுக்கு இக்கோயில் குல தெய்வக்கோயிலாகும். கோயிலுக்கு பக்தர்கள் வரும் முன்பாக குருக்களுக்கு தொலைபேசி மூலம் சொல்லி வைப்பார்கள். அபிஷேக ஆராதனைகளுக்குரிய பொருட்களுடன் பக்தர்கள் கோயிலுக்கு வருவர்.
சுமார் 1100 மணிக்கு பூஜைகள் தொடங்கும். வடிவுடையம்மனுக்கு முக்கிய சன்னதி; மாரியம்மன், லிங்கமூர்த்தி, வீரன் ஆகியோருக்கும் சன்னதிகள் உண்டு. அனைத்து மூர்த்திகளுக்கும் அபிஷேகம் செய்து, மாவிளக்கு போட்டு, பூஜை முடிக்கையில் சுமார் 1330 மணி ஆகிவிடும். கோயிலிலேயே பிரசாதத்தைச் சாப்பிட்டுவிட்டு நாங்கள் அங்கிருந்து கிளம்புவோம். நான் சுமார் 45 ஆண்டுகளாக, ஆண்டிற்கொருமுறை இந்தக் கோயிலுக்கு வருவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறேன்.
கோயிலில் இருந்து சுமார் 1400 மணிக்கு நாங்கள் கிளம்பினால் ஒரு மணி நேரத்தில் கங்கைகொண்ட சோழபுரத்திற்கு வந்து சேரலாம். அணைக்கரை என்ற இடத்தில் கொள்ளிடம் ஆற்றின் மீது கீழணை கட்டப்பட்டுள்ளது. இந்தப் பாலம் அடிக்கடி பழுதடைந்துவிடும். அதனால் சற்று தாமதமாகும்.
முதலாம் இராசேந்திரன் முதல் மூன்றாம் இராசேந்திர சோழன் காலம் வரை இவ்வூர் சோழர்களின் தலைநகராகத் திகழ்ந்தது. தன் தந்தையைப்போல, அதற்கீடாக மிகச்சிறப்புடன் ஆண்டவன் முதலாம் இராசேந்திர சோழன் (கிபி 1012-1044) கங்கைகொண்டான், பண்டிதசோழன் முதலிய பட்டப் பெயர்களையுடையவன். இவனுடைய மகள் அம்மங்காதேவி. இராசேந்திரன் லட்சத்தீவையும் வென்ற சிறப்புடையவன். சோழர் தலைநகரான தஞ்சை, பாண்டிய நாட்டு எல்லைக்கு அருகில் இருந்தமையால் அடிக்கடி போர் ஏற்படும் வாய்ப்பு இருந்தது. தவிர, காலந்தவறாது பெய்த மழையால் கொள்ளிடத்தில் வெள்ளப் பெருக்கேற்பட்டு, அதனால் தில்லைக்குச் சென்று நடராசப் பெருமானைக் காணவிரும்பிய போதெல்லாம் தடையும் உண்டாவதைக் கண்ட முதலாம் இராசேந்திர சோழன், சோழநாட்டின் மையப்பகுதியில் புதிய தலைநகரம் ஒன்றை அமைப்பதற்கு எண்ணினான்.
இடத்தைத் தேர்வு செய்து புதிய நகரத்தை நிர்மாணித்து அதை கங்கை நீரால் புனிதப்படுத்த எண்ணித் தன்படையை கங்கைநீர் கொண்டுவர வடநாட்டிற்கு அனுப்பிவைத்தான். அப்படையும் சென்று, வடநாட்டு மன்னர்களை வென்று கங்கை நீர் கொண்டு திரும்பியது. இதனால் முதலாம் இராசேந்திர சோழனுக்குக் கங்கை கொண்டான் – கங்கை கொண்ட சோழன் என்ற பெயர் உண்டாயிற்று. அந்நீரால் புனிதப்படுத்தி அவ்வூரில் தன்தந்தை, தஞ்சையிற் கட்டியது போலவே ஒரு பெரிய கோயிலைக் கட்டினான். அதுவே கங்கை கொண்ட சோழேச்சரம் அல்லது அவ்விடமே கங்கை கொண்ட சோழபுரம் ஆகும்.
இவ்வூரை நிறுவ சுண்ணாம்பினைத் தயாரித்த இடம் சுண்ணாம்புக்குழி என்றும், கோட்டை இருந்த பகுதி உட்கோட்டை (உக்கோட்டை) என்றும், ஆயுதச்சாலைகள் இருந்த இடம் ஆயிரக்கலம் என்றும் இன்றும் வழங்குகின்றது. இவ்வூருக்காக கட்டுவித்த ஏரி சோழகங்கம் எனப்பட்டது.
முதலாம் இராசராசன் காலத்திலிருந்து சோழர்களுக்குக் கட்டுப்பட்டிருந்த பாண்டியர் கி.பி.12 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் எதிர்த்து எழுந்தனர். அப்போது சோழமன்னர் பலமுறை பாண்டிய நாட்டின் மீது படையெடுத்து மதுரையை அழித்தனர். இதனால் மனங்குமுறிய பாண்டியர், சோழர்களைப் பழிவாங்கக் காத்திருந்தனர். மூன்றாம் குலோத்துங்கன் இறந்த பின்பு, பாண்டியர் சோழ நாட்டின் மீது படையெடுத்து தங்கள் வஞ்சத்தைத் தீர்த்துக் கொள்ளலாயினர். முதலாம் சடையவர்மன் சுந்தர பாண்டியன் சோழநாட்டை வென்று தன் பேரரசுடன் இணைத்துக் கொண்டான். அக்காலத்தேதான் கங்கைகொண்ட சோழபுரம் பெருத்த அழிவிற்கு ஆளாயிருத்தல் வேண்டும். மாளிகைகள் தரைமட்டமாக்கப்பட்டன.