
ஒருநாள் கிரிக்கட் உலகக் கோப்பைப் போட்டி
பத்தாம் நாள்
இந்தியா vs பாகிஸ்தான்
அகமதாபாத் – 14.10.2023
முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்
பாகிஸ்தான் அணியை (42.5 ஓவரில் 191 ஆல் அவுட், பாபர் அசம் 50, ரிஸ்வான் 49, இமாம் உல் ஹக் 36, பும்ரா 2/19, சிராஜ் 2/50, ஹார்திக் 2/34, குல்தீப் 2/35, ஜதேஜா 2/38) இந்திய அணி (30.3 ஓவரில் 192/3, ரோஹித் ஷர்மா 86, ஷ்ரேயாஸ் ஐயர் 53, ஷாஹீன் அஃப்ரிடி 2/36, ஹசன் அலி 1/34) 7 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.
பூவாதலையா வென்ற இந்திய அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. இதுவரையில் ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டிகளில் ஒரு முறை கூட இந்திய அணியை வென்றிராத பாகிஸ்தான் அணி முதலில் மட்டையாட வந்தது. ஒரு கட்டத்தில் அந்த அணி 29.4 ஓவரில் மூன்று விக்கட் இழப்பிற்கு 155 ரன் எடுத்திருந்தது. அதன் பின்னர் அடுத்த 13 ஓவரில் 36 ரன்கள் எடுப்பதற்குள் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 191 ரன்கள் மட்டுமே அந்த அணியால் எடுக்க முடிந்தது.
அதன் பின்னர் ஆடவந்த இந்திய அணிக்கு ரோஹித் ஷர்மா அபாரமாக ஆடினார். 6 சிக்சர், 4 பவுண்டரிகளுடன் 63 பந்துகளில் 86 ரன் எடுத்து அவர் ஆட்டமிழக்கும்போது இந்திய அணியின் வெற்றி கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. ரோஹித்தின் அதிரடி ஆட்டத்தில் முதல் 10 ஓவர்களில் இந்திய அணி 79 ரன்கள் எடுத்திருந்தது. இறுதியாக 30.3 ஓவரில் இந்திய அணி வெற்றியை எட்டியது. பும்ரா ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். 100 ஓவருக்குப் பதிலாக 74 ஓவர்களில் மேட்ச் முடிந்துவிட்டது. இந்திய அணிக்கு நல்ல ரன்ரேட்டும் கிடைத்தது.
உலகக் கோப்பை ஒருநாள் போட்டிகளில், இந்திய பாகிஸ்தான் – அணிகள் மோதும் போட்டி என்றால் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்தப் போட்டியிலும் இந்திய அணியே வென்று, பாகிஸ்தானுடன் தோல்வியை சந்திக்காத ராசியை தொடரச் செய்துவிட்டது.
இந்த வெற்றியுடன் இந்திய அணி 6 புள்ளிகளுடனும் சிறப்பான ரன் ரேட்டுடனும் புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. நாளை ஆப்கானிஸ்தான் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே டெல்லியில் ஆட்டம் நடைபெறுகிறது.