ராமன் எத்தனை ராமனடி! பாரதத் திருநாட்டின் கலாச்சாரம், பண்பாடு, ஆன்மீக பலம், இறையாண்மை இவை இங்கு வாழும் மக்களுக்குப் பெருமை சேர்ப்பவை. நமது புராண, இதிகாசங்கள், வேதங்கள் உலகிற்கே வழிகாட்டக் கூடியவை! இதனைப் போற்றும் வகையில், சென்னையில் இரண்டு நாள் ஶ்ரீராமர் கருத்தரங்கம் ஒன்று நடைபெற்றது.
தேஜஸ் பவுண்டேஷனும் பி.எஸ்.கல்விக் குழுமமும் இணைந்து, “இந்திய இலக்கியங்களில் ஶ்ரீ ராமர்” என்ற தலைப்பில், இரண்டு நாட்களுக்கு தேசீயக் கருத்தரங்கினை நிகழ்த்தினார்கள் – பி எஸ் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடத்தப்பட்ட இந்தக் கருத்தரங்கில், இளைஞர்களுக்கும் வாய்ப்பளிக்கப் பட்டது பாராட்டப்பட வேண்டிய ஒன்று! நாளைய எழுச்சிமிகு, ஆன்மீக பாரதத்திற்கு இவர்களே ஆணிவேர்கள் – அவர்களின் பங்களிப்பு அதனை உறுதி செய்தது. மிகச் சிறப்பாக நடைபெற்ற அமர்வு அது!
முதல் அமர்வில் ராமகாவியமும்,திருக்குறளும் (புலவர் ராமசாமி), ராமகாவியமும் திருவாய்மொழியும் (நாவலர் நாராயணன்), ராமகாவியமும் ரமண காவியமும் (ஶ்ரீராம்) என்ற தலைப்புகளில் அறிஞர் பெருமக்களின் உரைகள் சிறப்பு!. கருத்தரங்கின் ‘தோரண வாயில்’ இலக்கிய மலர்மாலைகளால் அலங்கரிக்கப் பட்டது – அரங்கம் முழுதும் தமிழின் வாசம் ராமகாவியத்தின் சிறப்பால் நிறைத்தது!
மாலையில் டாக்டர் கணேஷ் குழுவினரின் நாமசங்கீர்த்தனம் – பக்தி இசை. இராம பக்திப் பாடல்கள், அரங்கத்தைக் கட்டிப் போட்டன.
தொடர்ந்தது, முறையான தொடக்கவிழா – வீரமணி ராஜுவின் இறை வணக்கம், விழா மலர் வெளியீடு, வாழ்த்துரையைத் தொடர்ந்து, மூவர் ராமாயணம் என்ற தலைப்பில் சிறப்புச் சொற்பொழிவு – பி என் பரசுராமன் வால்மீகி ராமாயணம் பற்றியும் (இயல்பான நகைச்சுவை கலந்த பேச்சுடன் கொஞ்சம் வால்மீகியைப் பற்றியும் பேசினார்!), இசைக்கவி ரமணன் கம்பராமாயணம் பற்றியும் (அருமையான குரலில் இரண்டு பாடல்கள் மற்றும் கம்பனின் தமிழில் நட்பு, வீரம் என மேற்கோள்களுடன் பேசினார்!), முனைவர் வ வே சுப்பிரமணியன் துளசி ராமாயணம் பற்றியும் (பாமரர்களுக்கான ராமாயணம், மொகலாயர்கள் காலத்தில் இந்து மதத்தை மீட்டெடுத்த ராமாயணம், வால்மீகி, கம்பனில் இல்லாத அல்லது மாறுதலான பகுதிகளைச் சுட்டி அருமையானதொரு உரை!) சொற்பொழிவாற்றினர். செவிக்கினிமையாக அமைந்திருந்தது முதல் நாள் நிகழ்வுகள்!
இரண்டாம் நாள், காலை பத்து மணிக்குக் கவியரங்கம் – ‘அறமே அவன் உரு’ என்ற தலைப்பில் கவிஞர் விவேக் பாரதி (சொல்லறச் செல்வன்), கவிஞர் சிவநிறைச் செல்வி (இல்லற ஏந்தல்), கவிஞர் விஜயகிருஷ்ணன் (வில்லற வேந்தன்), கவிஞர் அ.க.ராஜாராமன் (நல்லற நாயகன்) ஆகியோரின் சிறப்புக் கவிதைகள் வாசிக்கப்பட்டன! ஶ்ரீ ஶ்ரீ பிரம்மானந்த சரஸ்வதி ஸ்வாமிகள் நிகழ்ச்சியைத் துவக்கி வைத்து ஆசியுரை வழங்கினார்கள்.
அதே நேரத்தில், மற்றுமொருஅமர்வில் “இராமாயணத்தில் முனிவர்கள்” என்ற தலைப்பில் வசிஷ்டர் (திருமதி காந்தலெஷ்மி சந்திரமெளலி), பரத்வாஜர் (புதுவை திரு வயி நாராயணசாமி), விஸ்வாமித்திரர் (புலவர் திருமதி விஜயலஷ்மி), அகஸ்தியர் (திருமதி ரமா சுப்பிரமணியன்) போன்ற முனிவர்களின் பங்களிப்பு, ராமாயணத்தில் எப்படி பார்க்கப்படுகிறது என்று பேசப்பட்டது !
அடுத்து வந்த ‘இளையோர் அரங்கம்’ இந்தக் கருத்தரங்கத்தின் முத்தாய்ப்பான அமர்வாக இருந்தது. வழக்கறிஞர் சுமதியின் தலைமையில், “பன்முகப் பார்வையில் ஶ்ரீராமர்” என்ற தலைப்பில் இளைஞர்களின் பேச்சு! யோகேஷ்குமார், கைகேயியின் பார்வையையும், இலக்கியா குகனின் பார்வையையும், அனுக்கிரஹா ஆதிபகவன் அனுமன் பார்வையையும், திருமாறன் வாலியின் பார்வையையும், பத்மா மோகன் விபீஷணனின் பார்வையையும், கோ சரவணன் இராவணன் பார்வையையும் படம் பிடித்தாற்போலப் பேசினர். பேச்சில் தெளிவும், பார்வையில் நேர்மையும், ஆராய்வதில் புத்தி கூர்மையும் பளிச்சிட்டன! வாழ்த்துகள் !
நிறைவு விழாவில், நீதியரசர் திரு ஜி ஆர் சுவாமிநாதன் சிறப்புரை ஆற்றினார். ஶ்ரீராமர் பாதம் மற்றும் ராமர் ஜாதகம் வெளியிட்டுப் பேசியவர் திரு எஸ் கோபாலகிருஷ்ணன். தாமல் திரு இராமகிருஷ்ணன், திருமதி பெருந்தேவி, இலக்கிய வீதி திரு. இனியவன், திரு பழ பழனியப்பன் ஆகியோருக்கு தேஜஸ் விருது வழங்கி கெளரவிக்கப் பட்டது.
நிறைவாக உ.வே.வில்லூர் நடாதூர் வி எஸ் ஶ்ரீ கருணாகரச்சார் ஸ்வாமிகள் “ஶ்ரீராமர் பட்டபிஷேகம்” உபந்யாசம் நடைபெற்றது. இருநூற்றுக்கும் அதிகமான இராமாயணங்கள், உலகின் பல பகுதிகளில் அவர்கள் கலாச்சாரத்திற்கேற்ற மாறுதல்களுடன் வழங்கி வருகின்றன என்றார் – கம்பர், அருணாசல்க் கவி, வால்மீகி, துளசி என பலரின் ராமாயணங்களிலிருந்து ஶ்ரீராமர் பட்டாபிஷேகம் பற்றிய ஸ்லோகங்கள், பாடல்களை மிக அழகாகச் சொன்னார்.
மாநாட்டுத் தீர்மானங்கள் – 1) 2021 பிப்ரவரி, “தமிழ்த் தாத்தாவும் இலக்கியங்களும்” மாநாடு நடத்தப் படும். மாநாட்டில் சந்திரமோகன் எழுத்து இயக்கத்தில், உ.வே.சா. பற்றிய மேடை நாடகம் நடைபெறும்.
2) “சங்கல்பம்” என்னும் ஆய்விதழ் ஒன்றைக் கொண்டு வருவது.
3) மகாகவி பாரதியின் நினைவைப் போற்றும் வண்ணம் சிறப்பு நிகழ்ச்சி ஒன்றை நடத்துவது.
முதல்நாள், “இலங்கையில் இராமாயணத் தேடல்கள்” புத்தகம் (Dr.ஷ்யாமா சுவாமிநாதன் எழுதிய ஆன்மீகப் பயணக் கட்டுரை நூல்) வெளியிடப்பட்டது.
இலங்கையில் நடந்தேறிய ராமாயணத்தின் காட்சிகளை இன்றும் மனிதர்கள் கண்டு அறிந்து கொள்ளக் கூடிய உண்மைச் சுவடுகள் என ஐம்பத்தியொரு இடங்கள் இலங்கையில் ஆராய்ச்சியாளர்களால் கண்டறியப் பட்டுள்ளன. இவற்றைப் பற்றிய செய்திகளையும், இந்த இடங்களுக்குச் சென்று வந்த அனுபவங்களையும் சுவையுடன் எழுதியுள்ளார் டாக்டர் ஷ்யாமா. வாசிக்க வேண்டிய நூல்! (செங்கைப் பதிப்பகம், ஆலப்பாக்கம், வல்லம் PO,செங்கல்பட்டு – 603 003).
மாநாட்டின் முடிவில், நல்லதொரு ஆன்மீக, தமிழிலக்கிய, இந்திய கலாச்சார அனுபவத்தை சுவாசித்த திருப்தி இருந்தது என்றால் மிகையில்லை!
- ஜெ.பாஸ்கரன். H