கலைமகள் மாத இதழின் 87வது ஆண்டு விழா

கலைமகள் மாத இதழின் 87வது ஆண்டுவிழா, வாசகர் விழாவாக மயிலாப்பூரில்   இன்று  காலை பத்து மணிக்கு வெகு விமர்சையாகத் துவங்கி மகிழ்ச்சி கொள்ளும் வகையில் நிறைவாக இரண்டரை மணிநேரம் போனதே தெரியாமல்     நடந்து முடிந்தது.

கலைமகள் இதழின் வளர்ச்சிக்கு உதவிடும் அன்பர்களையும், அலுவலக ஊழியர்களையும் முதலில் கௌரவம் செய்தனர்.

திரு. நல்லி குப்புசாமிச் செட்டியார் தலைமை தாங்கி, கலைமகளின் ஆரம்ப காலத்தில் இருந்து இன்றுவரை அடைந்துள்ள வளர்ச்சி பற்றியும், முதல் ஆசிரியர் உ.வே.சா. துவங்கி இன்று ஆசிரியராக இருக்கும் கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன் வரையிலான அதன் ஆசிரியர் குழு பற்றியும் மிக அழகாக உரையாற்றினார்.

விழாவின் முக்கிய நிகழ்வான கலைமகள் விருதை மூன்று சிறந்த படைப்பாளிகளான திரு. பாலகுமாரன், திரு.இந்திரா சௌந்தர் ராஜன், திரு. தேவி பாலா ஆகியோருக்கு வழங்கினார்.

“தனக்கும் கலைமகளுக்குமான தொடர்பு தனது 12வது வயதில் துவங்கியது. தனது தாயார் திருமதி. சுலோச்சனா அவர்கள் கலைமகள், மஞ்சரி, கண்ணன் ஆகிய பத்திரிகைகளை வாங்குவார். அவைகளை விரும்பிப் படிப்பேன். பிற்காலத்தில் அனைத்துப் பத்திரிகைகளிலும் எழுதி வந்த என்னிடம் எனது சித்தி,”மற்ற பத்திரிகைகளில் எழுதுவது முக்கியமல்ல ” கலைமகள்” பத்திரிகையில் உன்னோடு கதை வரணும்..அதுதான் சிறப்பு” என்பாள். எனது கதை கலைமகளிலும் வெளியானது.   இன்று கிடைத்த இந்த விருதை  தாய்வீட்டு சீதனமாகக் கருதுகிறேன். ரொம்பவும் சந்தோஷமாக இருக்கிறது. கலைமகள் இன்னும் மேலும் மேலும் உயர எனது வாழ்த்துகள். அதன் ஆசிரியர் கீழம்பூர் சங்கர சுப்ரமணியனுக்கு ஆசீர்வாதம்” என்றார் தனது  ஏற்புரையில் திரு.பாலகுமாரன்.

“சுமங்கலிப் பிரார்த்தனை” என்ற தனது முதல் சிறுகதை கலைமகளில் வெளியானது. அதன் பிறகு மற்ற பத்திரிகைகளிலும் தனது கதைகள் வெளிவரத் துவங்கியது என்றும் அதனால் கலைமகளே எழுத்துலகில் தனக்குத்  தாய்வீடு ” என்றார் எழுத்தாளர் திரு. தேவிபாலா.

“தனது பத்தொன்பதாவது வயதில் கலைமகளில் எழுதிய கதைக்கு முதல் பரிசு கிடைத்தது. தொடர்ந்து நாவல் போட்டியிலும் எனது நாவலுக்கு முதல் பரிசு கிடைத்தது. 1988ம் வருடம் இலக்கிய சிந்தனை மாதக் கூட்டத்தில் கலைமகளில் வெளியான எனது சிறுகதை அந்தமாதச் சிறந்த சிறுகதையாகத் தேர்வு பெற்றது. பிறகு அந்த ஆண்டின் சிறந்த சிறுகதையாகவும் தேர்வு செய்யப்பட்டு இலக்கிய சிந்தனையின் ஆண்டுப் பரிசும் கிடைத்தது. இப்படியாகத் தனது இலக்கியப் பயணத்திற்கு வைர ஒளியாகக் கலைமகள் விளங்கியது. இன்று தொலைக்காட்சித் தொடர், திரைப்படம் என்று எங்களின் நிலை உயர்ந்தாலும் அதற்கு அஸ்திவாரமே கலைமகள் பத்திரிக்கை கொடுத்த ஊக்கமே காரணம் என்றும், விரைவில் கலைமகள் பத்திரிக்கை “தொலைக்காட்சி” ஊடகத்தையும் துவங்கி வெற்றி பெறவேண்டும்” என்று வாழ்த்தினார் எழுத்தாளர் திரு. இந்திரா சௌந்தர் ராஜன்.

கலைமகள் என்றுமே அதன் முன்னோர்கள் வகுத்துக் கொடுத்த பாதையில்தான் தொடர்ந்து செல்லும் என்றும், “கலைமகள் விருது” பெற்ற மூன்று படைப்பாளின் உழைப்பையும், திறமையையும்  ஆசிரியர் கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன் பாராட்டினார்.

நிகழ்ச்சியை கவித்துவமாகத் தொகுத்து வழங்கினார் திரு. சந்திரமோகன். விழா நிறைவடைந்ததும் அனைவருக்கும் மதிய விருந்து அளிக்கப்பட்டது.

செய்தி: மீ.விஸ்வநாதன்