பெ.சு.மணி காலமானார் !

Published:

pesu mani
pesu mani

எண்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதிய எழுத்தாளர் பெ.சு. மணி தம் 87ஆம் வயதில் இன்று மாலை நான்கு மணியளவில் தில்லியில் காலமானார்.

வ.வே.சு. ஐயரின் கட்டுரைக் களஞ்சியம், வ.வே.சு. ஐயரின் கம்பராமாயணக் கட்டுரைகள் உள்ளிட்ட பல தொகுப்பு நூல்களை வெளியிட்டவர்.

இந்திய தேசியத்தின் தோற்றமும் வளர்ச்சியும், பழந்தமிழ் இதழ்கள், வீரமுரசு சுப்பிரமணிய சிவா, எழுத்திடைச் செழித்த செம்மல் கா.சி. வெங்கட்ரமணி உள்ளிட்ட நூல்களின் ஆசிரியரும் கூட!

வெ. சாமிநாத சர்மா மற்றும் ம.பொ.சி.யின் அன்பரான இவர் சாகித்ய அகாதமிக்காக, வாழ்வும் பணியும் வரிசையில் ம.பொ.சி. பற்றியும் சாமிநாத சர்மா பற்றியும் நூல்கள் எழுதியுள்ளார்.

பாரதி அன்பரும் கூட. பாரதியாரின் ஞானரதம் மூலமும் ஆய்வும், சமூக சீர்திருத்த வரலாற்றில் பாரதியார் போன்ற நூல்கள் இவரது படைப்புகளே.

விவேகானந்தரின் சிகாகோ சொற்பொழிவுகள், ஸ்ரீசாரதா தேவி, சுவாமி விபுலானந்தரின் தலையங்க இலக்கியம்` போன்ற பல புத்தகங்களை எழுதியவர்.

ALSO READ:  அந்த 7 போக்குகள் : 80வது சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி சொன்ன விஷயம்!

எண்ணற்ற ஆய்வுக் கட்டுரைகளின் ஆசிரியர். தினமணி இவரது பல கட்டுரைகளை வெளியிட்டுள்ளது.

கதர் வேட்டி, கதர் ஜிப்பா அணிந்து சைக்கிளில் சென்னையை வலம் வந்தவர். சென்னை மேற்கு மாம்பலத்தில் வசித்தவர். எளிய வாழ்வு வாழ்ந்தவர், பழகுவதற்கு இனிய பண்பாளர். ஆழ்ந்த இரங்கல்!

கணீரென்ற குரலில் பாடக் கூடிய வல்லமை படைத்தவர். இவர் கலந்துகொள்ளும் கூட்டங்கள் பலவற்றில் இவர்தான் கடவுள் வாழ்த்துப் பாடல் பாடவேண்டும் என்பது கூட்டத்திற்கு வந்துள்ளோரின் நேயர் விருப்பமாக அமையும்.

சில ஆண்டுகளுக்கு முன் இவரது மனைவி காலமாகி விட்டார். இப்போது தமிழுலகம், ஆய்வு நோக்கில் தகவல்களைத் திரட்டி நூல் எழுதும் சிறந்த எழுத்தாளர் ஒருவரை, மிகச் சிறந்த பண்பாளர் ஒருவரை இழந்துள்ளது.

  • திருப்பூர் கிருஷ்ணன்

Related articles

Recent articles

spot_img