
’இலக்கியவீதி’ இனியவன் என்று தமிழிலக்கிய உலகில் எல்லோராலும் அன்புடன் அழைக்கப்பட்ட இனியவன் தமது 81 ஆவது வயதில், வயது மூப்பால் ஞாயிற்றுக் கிழமை காலமானார்.
செங்கல்பட்டு மாவட்டம் வேடந்தாங்கல் அருகில் உள்ள விநாயகநல்லுாரில் வீராசாமி – பங்கஜம்மாள் தம்பதியின் மகனாக 1942 ஏப்.20ஆம் தேதி பிறந்தவர் இந்த லக்ஷ்மீபதி. லக்ஷ்மிபதி என்ற இந்தப் பெயர் இனியவன் ஆனது இலக்கியத்தின் வசப்பட்டுத்தானோ என்னவோ?!
பள்ளிப் பருவத்தில் இதழ் ஒன்றில் இவர் எழுதிய சிறுகதை, இவரின் புகைப்படத்துடன் இனியவன் என்ற பெயருடன் வெளியானது. அந்தப் பெயரே பிடித்துப் போனதால், இனியவன் என்ற பெயரே இவருக்கு நிலைத்தும்விட்டது.
தமிழிலக்கியத்தில் பெரும் காதற்கொண்ட இனியவன், இலக்கிய விவாதங்கள், திறனாய்வுகள், கவியரங்குகள் உள்ளிட்டவற்றை நடத்தும் வகையில் 1977ல் ‘இலக்கியவீதி’ என்ற அமைப்பைத் தொடங்கி நடத்தி வந்தார். இதனால் இவர் பெயருடன் இலக்கியவீதி என்ற அமைபின் பெயரும் ஒட்டிக் கொண்டது. இந்த அமைப்பின் மூலம், பிரபல எழுத்தாளர்களின் உரை, புத்தக வெளியீடுகள், புத்தக திறனாய்வுகள், பிரபலங்களின் நினைவேந்தல்கள், எழுத்தாளர்களுக்கு விருது வழங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை மனமுவந்து நடத்தினார்.
ஓவியம், சிற்பம், பாட்டு உள்ளிட்ட கலைகளில் திறமையானவர்களையும் அடையாளம் கண்டு, நிகழ்ச்சிகளில் அறிமுகம் செய்துவைத்தார். சென்னை கம்பன் கழகத்தின் செயலராகப் பொறுப்பேற்று, பேச்சாளர்களை ஊக்குவித்தார். 250க்கும் மேற்பட்ட சிறுகதைகள்,17 குறுநாவல்களை எழுதியவர் இனியவன். தமிழக அரசின் ‘கலைமாமணி’ விருதும் பெற்றவர்.
வயது மூப்பு காரணத்தால், ஜூலை 2 ஞாயிறு இரவு, பெருங்களத்துார், விஷ்ணு நகரில் உள்ள இல்லத்தில் அவர் காலமானார். இலக்கியவீதி இனியவனின் உடலை அவர் மகள் வாசுகி பத்ரிநாராயணன் சென்னை மருத்துவக் கல்லுாரிக்கு தானமாக வழங்கினார்.
இவையெல்லாம் இலக்கியவீதி இனியவன் குறித்த செய்திகள். எனக்கும் அன்னாருடன் ஆழ்ந்த அனுபவங்கள் உண்டு. எழுத்தில் விவரிக்க முடியாதவை பல என்றாலும், சொல்லப்பட வேண்டியதும் சில உண்டு.
2002. மஞ்சரி டைஜஸ்ட் மாத இதழுக்கு இதழாசிரியராகப் பொறுப்பேற்றிருந்த புதிது. அப்போது எனக்கு வயது 27. இதழின் கடைசிப் பக்கங்களில் என் எண்ணங்களை, கருத்துகளை எழுதத் தொடங்கினேன். “உங்களோடு ஒரு வார்த்தை” என்ற தலைப்பில் பல வார்த்தைகளை எழுதிக் கொண்டிருந்தேன். இலக்கிய உலகில் பெரியவர்கள் சிலர் அவற்றைப் படித்துவிட்டு, ஊக்கமும் உற்சாகமும் அளித்தார்கள். இதழின் திடீர் மாற்றத்தை வரவேற்று தொலைபேசியிலும் அஞ்சல் அட்டையிலும் கருத்துகளைப் பகிர்ந்தார்கள். அவர்களில் முக்கியமானவர்கள் நம் நெல்லை மண்ணின் ஆளுமைகள். வல்லிக்கண்ணன், தி.க.சி., தீப நடராஜன் இப்படி… இவர்களின் கடிதங்களைப் பாதுகாத்து வைத்திருக்கிறேன்.
ஒரு நாள் காலை. அலுவலகத்துக்கு ஒரு தொலைபேசி அழைப்பு. அழைத்தவர், இலக்கியவீதி இனியவன் என்றார். இதழின் உள்ளடக்க கட்டுரைகளைப் பாராட்டி விட்டு, “உங்க கடைசிப் பக்கக் கட்டுரையைப் படித்தேன். அதில் ஒரு திருத்தம் சொல்லவேண்டும்” என்றார். “சொல்லுங்கள்” என்றேன். சொன்னார். என் அந்த அனுபவப் பக்கக் கட்டுரையில் ஒரு வார்த்தை. ‘சுவற்றில்’ என்று அந்நாளைய வழக்குச் சொல்லில் எழுதியிருந்தேன். “அங்கே ‘ற்’ வராது. சுவர்+இல்=சுவரில். கயிறு+இல்=கயிற்றில். இந்த வேறுபாட்டைப் புரிந்து கொண்டால், மீண்டும் சுவற்றில் எழுத மாட்டீர்கள்” என்றார். அவன் சொன்னபடியே, அதன் பின் நான் சுவரிலேயே எழுதத் தொடங்கிவிட்டேன். சுவர் இல்லாமல் சித்திரம் வரைய முடியுமா என்பதை பேச்சினூடே பலர் சொல்வார்கள். இலக்கியவீதி இனியவன் அன்று முதல் எனக்கு சுவராகிப் போனார்.
திராவிட இலக்கிய அரசியல் தோற்றங்கள், வழக்காடுகள், சூழல்கள் அவரின் பிம்பத்தை ஒரு மாதிரி வெளிக்காட்டியிருந்தாலும், அவர் உள்ளமெல்லாம் வைணவத் தமிழும் பக்தியும் உட்புகுந்திருந்ததை விரைவிலேயே உணர்ந்து கொண்டேன். அந்த ஒன்றேகூட அவர் என்னை தன் சொந்தப் பிள்ளையாய் பாவிப்பதற்கு ஒரு காரணமாகவும் இருந்திருக்கக் கூடும்! அதை நன்றாய் உணர ஒரு வாய்ப்பையும் அவரே ஏற்படுத்தித் தந்தார்.
20 வருடங்கள் ஆகிவிட்டது. ஆனாலும் உள்ளத்தில் அந்த உத்திரமேரூர் கூட்டம் அவர் குறித்த பிம்பத்தை வலுவாய்ப் பதிய வைத்துவிட்டது. அது இலக்கியவீதியின் வெள்ளிவிழா ஆண்டுக் கூட்டம் என்று நினைவு. அந்தக் கூட்டத்தின் அழைப்பிதழைக் கூட பத்திரமாய் வைத்திருக்கிறேன்.
ஒரு அம்பாஸிடர் கார் ஏற்பாடு செய்திருந்தார். மயிலாப்பூரில் நான் ஏறிக் கொண்டேன். தென்கச்சி கோ. சுவாமிநாதன் அவர்களையும் ஏற்றிக் கொண்டு, வழியில் தாம்பரம் அருகே மெழுகுவத்தி தொழில் செய்து வந்த இலக்கிய ஆர்வலர் வீட்டுக்கும் சென்று, ஒரு சிற்றுண்டி முடித்து விட்டு தொடர்ந்தோம்.

அப்போது மஞ்சரியில் ‘தென்கச்சி பதில்கள்’ எழுதிக் கொண்டிருந்தார் தென்கச்சி சுவாமிநாதன். அத்துடன் நானும் வானொலியில் பகுதி நேர அறிவிப்பாளராக சென்று வந்ததால், வானொலி, மஞ்சரி, இதழியல் என வெகுநேரம் பேசிக் கொண்டு வந்தோம். வண்டி மதுராந்தகம் சென்றது. அங்கே ஒரு கூட்டம். மதுராந்தகத்தில் ஒரு பள்ளிக்கூடத்தில்! அங்கே சில இடங்களைச் சுட்டிக் காட்டி, வேறு சில இடங்களின் பெயர் சொல்லி, தனது இளமைக் கால அனுபவங்களை விவரித்தார் இனியவன். அங்கே வைத்துதான் இலக்கிய ஆளுமையான மதுராந்தகம் ரகுவீர பட்டாச்சார்யரையும் அறிமுகம் செய்து வைத்தார்.
தொடர்ந்து உத்திரமேரூர் சென்றது வண்டி. அங்கே தமிழ் இலக்கிய மன்றக் கூட்டம். வெறும் வரலாற்றுப் பாடங்களில் குடவோலை முறையைப் படித்துவிட்டு உத்திரமேரூரை பல்லவர் கால பழைய ஊராக உருவகப் படுத்தி வைத்திருந்த எனக்கு, ஊரின் பன்முகத்தன்மை அன்று தான் தெரிந்தது. மாலும் மருகனும் அருகருகே ஆலயம் கொண்ட கதையும் அவற்றின் கம்பீரமும் புலப்பட்டது. அதை விட, இனியவன் அவர்களிடம் கொண்ட அவ்வூர் அன்பர்களின் அளவற்ற நேசமும், விரல் சொடுக்கில் விரைந்து பணி செய்யும் அந்நியோன்யமும் அழகாய்த் தெரிந்தது. அதன் பின்னர் எத்தனையோ முறை ஆன்மிகப் பயணமாக உத்திரமேரூர் சென்றிருக்கிறேன் என்றாலும், அந்த முதல் பயணம், அதுவும் இலக்கிய வீதியுடனான இலக்கியப் பயணம் இன்றளவும் நெஞ்சில் நிறைந்திருக்கிறது. அந்த நிகழ்ச்சியில் எடுத்த புகைப்படத்தை ஒரு பொக்கிஷமாக இன்றளவும் என் தொகுப்பில் சேகரித்து வைத்திருக்கிறேன். (அந்தப் படம் தான் நான் இங்கே பதிவு செய்திருப்பது!)

நான் தினமணியில் இணையதள செய்தி ஆசிரியர் பொறுப்பில் இருந்த போது, சில காலம் மயிலாப்பூரில் இருந்தும், பின் வில்லிவாக்கத்தில் இருந்தும் அம்பத்தூர் எஸ்டேட்க்கு பயணிக்கும் போது, அண்ணாநகர் பக்கமும் எட்டிப் பார்ப்பதுண்டு.அப்படி சில முறை அவர் வீட்டுக்கும் சென்றுள்ளேன். இலக்கிய உலகம், தினமணி கட்டுரைகள், அலுவலக விவகாரங்கள் என மனம் விட்டுப் பேசுவதுண்டு. அவரின் வாரிசு வாசுகி பத்ரி Vasuki Badri என்னையும் ஒரு சகோதரனாக நினைத்துப் பழகினார். குடும்ப நிகழ்ச்சிகள் ஓரிரண்டில் கலந்து கொள்ளும் வாய்ப்பும் அமைந்தது. ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் அழைப்பு அனுப்புவார்.
அவரது ‘கம்பன் காதல்’ அலாதியானது. சென்னைக் கம்பன் கழகத்துக்கு பொறுப்பில் வந்தார். சிறப்பாக நிகழ்ச்சிகளை நடத்திக் காட்டினார். இலக்கிய, அரசியல் ஆளுமைகள் பலருடன் நல்ல தொடர்புகளைக் கொண்டிருந்தார். இதெல்லாம் ஊரறிந்த கதைதான்!
ஆனால், உள்ளார்ந்த நட்புடன் தனிப்பட்ட வகையில் நெருக்கம் பேணியதும் துவண்ட போது ஆறுதல் அளித்ததும் நிமிர்ந்த போது தட்டிக் கொடுத்து தலை கோதியதும் அவரின் தனிச்சிறப்பு. முக்கியமாக நான் குறிப்பிட வேண்டிய விஷயம் இது.
தினமணி-யில் இணையம் மட்டுமல்லாது, வெள்ளிமணி, தமிழ்மணி, தினமணி ஆசிரியர் குழு விவகாரங்கள் என என் முழு நேரத்தையும் அதிலேயே செலவழித்து, தினமணியை விட்டால் வேறு உலகம் இல்லை என்ற ரீதியில், ஒரு பைத்தியம் போல் வேலை செய்து வந்த நேரம்… திடீரென அதில் இருந்து வெளியேறும் நெருக்குதல் வந்தபோது, முதல் ஆளாய் ஆறுதல் அளித்தது இனியவன் அவர்களே! 2015ல் இரு பக்க கடிதம் எழுதி அனுப்பியிருந்தார். அதில் வாழ்க்கையின் போக்கு, எப்படி நம்பிக்கையுடன் உலகை எதிர்கொள்ள வேண்டும், கடந்த காலக் கசப்புகளை மறந்து விட்டு இனிப்புகளை அசைபோடும் உள்ளத்தை வளர்ப்பதெப்படி என, இனியவனாய் எழுதிய ஒரு தெம்பூட்டும் ஆறுதல் கடிதம் அது! (சென்னையில் என் வீட்டில் பத்திரமாய் உள்ளது. நிச்சயம் அதை ஒருநாள் பொதுவெளியில் பகிருவேன்.)
கடந்த ஏழெட்டு வருடங்களாக நேரில் சந்திக்கும் வாய்ப்பு அருகிப் போனதால் பார்க்க இயலாமல் போனது. ஆனாலும் அவரின் மகளார் வாசுகி அவர்கள் எங்களின் இணைப்புப் பாலமாய் கைபேசியைப் பயன்படுத்திக் கொண்டிருந்தார். அவர் நேற்றிரவு அமரரானார் என்று இன்று தகவல் கண்ணில் பட்டது… அதுமுதல் அவரது ஆன்ம சம்பந்தமான மனம் மட்டும் என்னுடன் பேசிக் கொண்டிருக்கிறது!
- செங்கோட்டை ஸ்ரீராம்