
முனைவர் கு. வை. பாலசுப்பிரமணியன்
பாரதியாரின் கண்ணன் பாட்டு – பகுதி – 34
கண்ணன் என் காதலன் 4 பாங்கியைத் தூது விடுத்தல் – விளக்கம்
நாயகி கூறுகிறாள் – ஏ தோழி கண்ணனின் மனநிலை என்னவென்று கேட்டு வா தோழி. அவன் நம்மிடம் மீண்டும் வருவானா? மணந்து கொள்வானா? என்ற தன்னுடைய எண்ணத்தை உரைத்துவிட்டால், அது நேர்மறையான எண்ணமாக இருந்தாலும் சரி அல்லது எதிர்மறை எண்ணமாக இருந்தாலும் சரி நாம் ஏதேனும் செய்துகொள்ளலாம். திருமணம் புரியாமல் கன்னியாகவே காலம் கழிப்போம் இல்லையெனில் நாட்டில் அவனைப் போல மன்னர் பலர் இருக்கிறார்கள்.
இதன் பின்னர் நாயகியின் குரல் ரௌத்திரமாக மாறுகிறது. – தோழி சொன்ன சொல் தவறுகின்ற மன்னவனுக்கு எங்கே மரியாதை கிடைக்கும்? யாரும் நட்பொடு அவனை நடத்தமாட்டார்கள். எனவே எல்லாவற்றையும் தெளிவாகக் கேட்டு வா தோழி, தெளிவாகக் கேட்டுவா – என்கிறாள் நாயகி. மேலும் – காதல் செய்துவிட்டு காணாமல் பொய்விட்டானே இது சரியா? ஒளிந்து வாழ்பவனுக்கு மானம் மரியாதை கிடைக்குமா? அன்றே அந்தக் கிழவி, பொன்னி சொன்னாள், இவன் பொய்யே உருவானவன் என்று நான் நம்பாமல் போனேனடீ – என்றும் புலம்புகிறாக் நாயகி.
ஆற்றங் கரையில் அன்றொரு நாள் என்னோடு தனியிடத்தில் தனியாகப் பேசியதை எல்லம் ஊரெல்லாம் சொல்லிவிடுவேன் என்று அவனிடத்தில் சொல்லிவிட்டு வா தோழி. திருட்டுத்தனமாக அந்த இடையர்குலப் பெண்களோடு கூடியாடியதெல்லாம் வேறு. நான் மறக்குலத்தைச் செர்ந்தவள். என்னிடத்தில் அவன் ஜம்பம் பலிக்காது எனச் சொல்லி வா தோழி- என்று கோபமாக உரைக்கிறாள் நாயகி.

ஆனால் என்ன செய்வது பெண்ணாகப் பிறந்து விட்டேன். அதனால் துன்பம் பல இருக்கிறது. அவன் தன்னுடைய குழலை எடுத்து வந்து ஊதினான்; அதனை இந்த பேதையுள்ளம் மறக்க முடியவில்லையே? நாள் முழுவது அந்தப் பாவி கண்ணனை நினைத்து மறுகுகிறேனேடீ. வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்பது போல அவனைக் கேட்டு வா தோழி. அவன் நமக்கு நண்மை செய்யவில்லை என்றால் நமக்கு தெய்வத்தைத் தவிர வேறு துணையில்லை தோழி – என நாயகி காதலில் உருகுகிறாள்.
ஆற்றங் கரையதனில் முன்னமொருநாள் – எனை
அழைத்துத் தனியிடத்தில் பேசிய தெல்லாம்
தூற்றி நகர்முரசு சாற்றுவ னென்றே
சொல்லி வருவையடி தங்கமே தங்கம்.
என்ற பகுதி தமிழ் மரபிற்கு ஒத்து வரவில்லை. சங்க கால அக இலக்கிய மரபை ஒட்டியும் இது அமையவில்லை. காதலன் காதலியிடம் பேசிய அந்தரங்கப் பேச்சை நகரில் முரசு அடித்து அறிவிப்பேன் என்று சொல்வது மரபுக்குப் புறம்பானது. ஒருவேளை பரகால நாயகியாக திருமங்கையாழ்வார் பாடிய பெண்மடலேறும் வழக்கத்தை ஒட்டி பாரதியாரின் நாயகியும் பாடியிருப்பாளோ என எண்ணத் தோன்றுகிறது.
‘மான் நோக்கின் அன்ன நடையார் அலர்ஏச ஆடவர்மேல்
மண்ணும் மடலூரார்’ என்பது ஓர் வாசகமும்
என்ற பாசுரப் பகுதி பாரதியாருக்கு இந்தத் துணிவைத் தந்திருக்கவேண்டும். இனி ஐந்தாம் பாடலைக் காணலாம்.
பிரிவாற்றாமையில் நாயகி இப்பாடலைப் பாடுவதாக பாரதியார் இதனை அமைத்துள்ளார். இராகம் – பிலஹரி.
ஆசை முகமறந்து போச்சே – இதை
ஆரிடம் செல்வேனடி தோழி?
நேச மறக்கவில்லை நெஞ்சம் – எனில்
நினைவு முகமறக்க லாமோ? … 1
கண்ணில் தெரியுதொரு தோற்றம் – அதில்
கண்ண னழகுமுழு தில்லை
நண்ணு முகவடிவு காணில் – அந்த
நல்ல மலர்ச்சிரிப்பைக் காணோம். … 2
ஓய்வு மொழிதலுமில் லாமல் – அவன்
உறவை நினைத்திருக்கும் உள்ளம்;
வாயு முரைப்ப துண்டு கண்டாய் – அந்த
மாயன் புகழினையெப் போதும். … 3
கண்கள் புரிந்துவிட்ட பாவம் – உயிர்க்
கண்ண னுருமறக்க லாச்சு;
பெண்க ளினிடத்திலிது போலே – ஒரு
பேதையை முன்புகண்ட துண்டோ ? … 4
தேனை மறந்திருக்கும் வண்டும் – ஒளிச்
சிறப்பை மறந்துவிட்ட பூவும்
வானை மறந்திருக்கும் பயிரும் – இந்த
வைய முழுதுமில்லை தோழி! . … 5
கண்ணன் முகம்மறந்து போனால் – இந்தக்
கண்க ளிருந்து பயனுண்டோ ?
வண்ணப் படமுமில்லை கண்டாய் – இனி
வாழும் வழியென்னடி தோழி? … 6
பாடலின் விளக்கத்தை நாளை காணலாம்.