December 3, 2021, 12:40 pm
More

  பாரதி-100: கண்ணன் என் காந்தன்!

  இந்தப் பாடலில் கண்ணன் என்ற காந்தன் தன் காதலில்க்குப் பல பரிசுப் பொருட்களை அதாவது கையுறைகளைத் தருகிறான்.

  subramania bharati 100 1

  முனைவர் கு. வை. பாலசுப்பிரமணியன்

  பாரதியாரின் கண்ணன் பாட்டு – பகுதி – 36,
  கண்ணன் என் காந்தன்
  கனிகள் கொண்டுதரும் – விளக்கம்

  தலைவனும் தலைவியும் ஒருவர் மேல் மற்றொருவர் கொண்டிருக்கும் அன்பு அலல்து ஆராக் காதல் எவ்வளவு பெரியது என எடுத்துக்கூறவியலாது. இந்தக் காதல் காலத்தில் தலைவன் ‘கையுறை’ கொண்டு தலைவியை சந்திப்பான் என முன்னரே பார்த்தோம். கையுறை பற்றிய செய்திகளை ‘இறயனார் களவியல்’, ‘திருக்கோவையார்’, தஞ்சைவாணன் கோவை ஆகிய நூல்களில் காணலாம். எடுத்துக்காட்டாக திருக்கோவையாரிலிருந்து ஒரு பாடலைக் காணலாம்.

  தேமென் கிளவிதன் பங்கத்
  திறையுறை தில்லையன்னீர்
  பூமென் தழையுமப் போதுங்கொள்
  ளீர்தமி யேன்பு லம்ப
  ஆமென் றருங்கொடும் பாடுகள்
  செய்துநுங் கண்மலராங்
  காமன் கணைகொண் டலைகொள்ள
  வோமுற்றக் கற்றதுவே.
  (திருக்கோவையார், மாணிக்கவாசகர், பாடல் 90)

  கொய்ம்மலர்க்குழலி குறைநயந்தபின் 
  கையுறையோடு காளை சென்றது.
  krishnar
  krishnar

  இங்கு ‘காந்தன்’ என்ற பெயரை நாயகனுக்கு களவுக் காலத்தில் பாரதியார் சூட்டிய பெயராகும். இது போலவே அத்தினாபுரத்துப் பெண்களை, பாரதியார் ‘பாஞ்சாலி சபதத்தில்’ மலர்விழிக்காந்தங்கள் என்று சுட்டுவதை நாம் காணலாம். ஆண்மகனை காந்தன் என்றும் பெண்மகலைக் காந்தம் என்றும் சுட்டுவது எத்துணை பொருத்தம். கண்ணனாகிய காந்தன் காதலிக்கு என்னென்ன பொருள்களைக் கையுறையாகக் கொண்டுவந்து தருகின்றான்? கற்கண்டு போல இனிதாய் கனிகள்; குளிர்ச்சியான சந்தனம்; பல்வகை வாசனைப்பொருட்கள்; நெற்றியிலே பொட்டிட சவ்வாது; அதுவும் சாதாரண சவ்வாது அல்ல, வண்ணம் இயன்ற சவ்வாது.

  கொண்டை முடிப்பதற்கே வாசனை மிகுந்த் தைலங்கள்; வண்டு விழிக்கு மை; தண்டணிந்த கால்களுக்கு செம்பஞ்சுக் குழம்பு; இதனையெல்லாம் கொண்டுவந்து தருகின்ற கண்ணன் பெண்களுக்கெல்லாம் அவனது புகழை நாவால் சொல்ல முடியாத ஒரு பெருந்தெய்வம். மேலும் மார்பில் தொய்யில் எழுத குங்குமம்; குறைவில்லாமல் பணத்தைக் கொட்டி பொருட்கள் வாங்கித் தருவான் கண்ணன். கண்ணன் முகத்தைப் பார்த்திருந்தாலே போதும், பின்னர் வருத்தமுற காரணம் ஏது இருக்காது என்கிறாள் நாயகி. இதனைப் படிக்கும்போது குலசேகர ஆழ்வாரின் திருவேங்கடமுடையான் பாசுரத்தில் வருகின்ற பாடலான

  செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே!
  நெடியானே! வேங்கடவா! நின்கோயி லின்வாசல்
  அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்தியங்கும்
  படியாய்க் கிடந்துன் பவளவாய் காண்பேனே.
  என்ற பாடலின் தாக்கத்தால் பாரதியார்

  பங்கமொன் றில்லாமல் – முகம்
  பார்த்திருந் தாற்போதும்;

  என்று எழுதியிருப்பாரோ எனத் தோன்றலாம். இந்தப் பாடலில் கண்ணன் என்ற காந்தன் தன் காதலில்க்குப் பல பரிசுப் பொருட்களை அதாவது கையுறைகளைத் தருகிறான். காதலன் பரிழுகளைத் தருவதாலும், நாயகி அதனை ஏற்றுக் கொள்வதும் மட்டும் இன்பமன்று. காதலனின் முகத்தியப் பார்த்துக்கொண்டிருத்தலே பேரின்பம் என நாயகி, தோழிக்கு மேசொன்ன வரிகளால் சொல்லுகிறாள். இன்பத்துப் பாலில் திருவள்ளுவர் குறிப்பறிதல் அதிகாரத்தில்

  கண்களவு கொள்ளும் சிறுநோக்கம் காமத்தில்
  செம்பாகம் அன்று பெரிது. (குறள் 1092)

  என்ற குறளில் காதலன் மொழியாகக் கூறுவதை, பாரதியார் இங்கே நாயகியின் கூற்றாக அமைத்திருக்கிறார். முகம் மறத்த காதலியின் முகத்திரை பற்றி பின்னால் பாரதியார் “முகச் சோதி மறைத்துமொரு காதலுங்குண்டோ” எனப் பாடுவார்.

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,105FansLike
  370FollowersFollow
  47FollowersFollow
  74FollowersFollow
  1,779FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-