
பாரதியாரின் கண்ணன் பாட்டு பகுதி – 45
கண்ணன் – என் ஆண்டான் – விளக்கம்
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –
நாயகன் அடிமையாகவும், கண்ணன் ஆண்டானாகவும் கொண்டு இப்பாடல் எழுதப்பட்டுள்ளது. நிலவுடமைச் சமுதாயத்தில் நிலவி வந்த சாதிமுறையினை பாரதியார் இப்பாடலில் பயன்படுத்தியுள்ளார். நாயகன் சொல்கிறான் – இந்த உலகில் எனக்குத் தஞ்சமளிப்பவர் யாருமில்லாமல் தவித்து, தடுமாறி உன்னைச் சரணடைந்தேன் ஆண்டே, நான் உனக்குப் பாரம் என வந்திருக்கிறேன். என்னுடைய துன்பத்தையும், பசிப்பிணியையும் மிடிமையும் தீர்த்துச் சுகம் அளிக்க வேண்டும். உன்மீது அன்புடன் பாடிக் குதித்து மகிழ்வேன்; உன் ஆணை வழி நடப்பேன்.
“நீ என்னை ஆதரித்தால் சேரி முழுதும் பறையடித்து உன்னுடைய அருட் கீர்த்திகள் பாடிடுவேன். பேரிகை கொட்டித் திசைகள் அதிர உன் பெயர் முழக்கிடுவேன். பண்ணையிலே உள்ள பிற அடிமைகள் இவன் பெரிய அதிட்டக்காரன் என என்னைப் பற்றிக் கூறுகின்றனர். நானும் கண்ணா உன் அடிமையாகிய நானும், உன்மீது காதலுற்று இங்கு வந்தேன். வயலில் வேலை செய்து பயிரைக் காத்திடுவேன்; கண்ணா, என் ஆண்டே உன் மாடு கன்றுகளை மேய்த்திடுவேன். என் வேலையைப் பார்த்துவிட்டு எனக்குப் பக்குவம் சொல்லு ஆண்டே” என்று நாயகன் கூறுகிறார்.
“கண்ணா என் ஆண்டவரே உங்களுக்கு சந்தேகம் இருந்தால் எனக்குச் சோதனைகள் வைத்துப் பாருங்கள். தோட்டங்களைக் கொத்திக் காட்டஸ் சொல்; காட்டுகிறேன். இன்று மழை பெய்யும்; வயலில் இந்த வேலையைச் செய்யலாம் என்று நானே கூறுகிறேன். தவறானால் என்னைக் கட்டி வைத்து அடியுங்கள் ஆண்டவரே”.
“கண்ணா என்னுடைய ஆண்டவரே நீ எதற்காக என்னைப் பராமரிக்க வேண்டும் தெரியுமா? என்னுடைய வீட்டில் உள்ள பெண்டு குழந்தைகள் கஞ்சி குடித்துப் பிழைத்திட வேண்டும் ஐயனே. என்னைச் சுற்றியிருப்பவர்களுக்கு நான் சில உதவிகள் செய்ய வேண்டும் ஐயனே. எங்கள் மானத்தைக் காக்க உடைகள் வேண்டும். நான் பிறருக்குத் தர சில வேட்டிகள் வாங்கித் தரவும் வேண்டும் ஆண்டவரே.
என்னுடைய உடலாகிய ஒன்பது வாயிற் குடிலினைச் சுற்றி ஒரு சில பேய்கள் வந்தே துன்பப் படுத்துது. அதாவது புலனடக்கமில்லாமல் நான் துன்பப்படுகிறேன். அதனை ஒரு மந்திரஞ் செய்து தொலைத்திட வேண்டும் ஐயனே. பேயும் பிசாசும் திருடரும் என்னுடைய பெயரினைக் கேட்ட அளவில், வாயுங் கையுங்கட்டி அஞ்சி நடக்க கண்ணா என் ஆண்டவரே ஒரு வழி செய்ய வேண்டும் ஐயனே. – என்று ஆண்டையாகிய கண்ணனைப் பார்த்துப் பாடுவதாக பாரதியார் இந்தப் பாடலை இயற்றியிருக்கிறார்.