
— குச்சனூர் கோவிந்தராஜன் —
வேதாந்த விலாசம் எனும் ஸ்ரீஎதிராஜ விஜயம் – உலகம் இன்றும் போற்றிப் புகழும் படியான பெருமை பெற்ற நிறைவான வாழ்க்கையை பூமியில் வாழ்ந்தவர், என்றும் மனித வாழ்விற்கு ஏற்ற பல தத்துவங்களை தந்தவர் என்றும் போற்றப்பட்ட ராமானுஜர் பிறந்த ஆயிரம் ஆண்டுகளை கடந்து விட்டோம்.
இந்நாளில் அவரது கருத்துகள் பலராலும் பேசப்படுகிறது, போற்றப்படுகிறது. ஸ்ரீ ராமானுஜரின் பெருமைகளையும் தத்துவ உண்மைகளையும் நன்கு உணர்ந்து அவர் நெறி வந்த ஸ்ரீ வச்ச வரதராச்சாரியார் சுமார் 700 ஆண்டுகளுக்கு முன் எழுதிய நாடகம் இது.
ஸ்ரீ ராமானுஜரின் கொள்கைகளை பிரதிபலிக்கும் படியும் ஸ்ரீ ராமானுஜரையே ஒரு பாத்திரமாகவும் கொண்டு எழுதப்பட்டது இந்நாடகம். ராமானுஜருக்கு பெருமை சேர்ப்பதாக அமைந்துள்ளது. இந்நாடக ஆசிரியர் குலப் பெருமை மிகக் கொண்டவர், ராமானுஜரால் பெரிதும் போற்றப்பட்ட ஸ்ரீ நாடாதூராழ்வானது பரம்பரையில் வந்தவர். இவர் தந்தை ஒரு நாழிகையில் 100 ஸ்லோகம் எழுதும் திறன் பெற்றவர்.
ராமானுஜ விஜயம் எனும் இந்த நாடகம் 6 அங்கங்கள் கொண்டுள்ளது. உருவக (allegorical dramas) வகையைச் சார்ந்த நாடகமாக எழுதப்பட்டுள்ளது. சொல்ல வந்த கருத்தையே பாத்திரப் பெயர்கள் ஆக்கி நடிக்க வைத்தல் எனும் யுத்தியில் அமைந்துள்ள நாடகம்.
உதாரணமாக சத்வித்யா, கீதா சுமதி, ஸ்ரீநிதி இதிஹாசன், ப்ரியரங்கன், ரங்கப் பிரியன் போன்ற பாத்திரங்களை சொல்லலாம். வேத மௌலி எனும் அரசனை மாயாவாதகன் (அதாவது உலகமே பொய் காண்பது நிஜம் என்று கூறும் இயல்பினன்) என்பவன் பலவாறு கூறி மன்னனை வேத நெறியில் இருந்து விலகச் செய்து தனிமைப்படுத்துகிறான். மித்யா திருஷ்டி எனும் அழியும் அழகுடைய பெண்ணையும் துணையாக் கொண்டு அரசனை தன் விருப்பப்படி ஆட்டுவிக்கிறான். இதனால் அரசனைச் சார்ந்த ஸுநிதி, ஸுமதி, வேத விசாரன், ஸதூஷன், தர்மம் போன்றவை (பெயர் கொண்ட பாத்திரங்கள்) விலகுகின்றன.
இந்நிலையில் இறைவனின் விருப்பப்படி மந்திரியாக மன்னனிடம் சேரும் ராமானுஜர் மன்னனுக்கு நல்வழி காட்டுகிறார். பிற மதத்தாரிடம் வாதப்போர் நிகழ்த்தி வெற்றி பெற்று வேத நெறியில் நிலைக்கச் செய்கிறார். நாடக நிறைவில் மன்னரிடமிருந்து விலகிய விஷயங்கள் அனைத்தும் மன்னனையே அடைகின்றன.
இந்நாடகத்தில் நிறைய சுலோகங்கள் உள்ளன. ஒவ்வொரு ஸ்லோகமும் ஒவ்வொரு வகையில் சிறப்பு பெற்று விளங்குகின்றன. நாடகம் தத்துவம் பற்றியே வந்தது என்றாலும் வாழ்வியலுக்கு தேவையான செய்திகளும் சிறப்பான வர்ணனைகள் பலவும் இடம் பெற்றுள்ளன.
நாடக ஆசிரியரின் புலமையையும் நன்கு வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளன. கதை நிகழ்விற்கு ஏற்ற வகையில் அமைந்துள்ள ஸ்லோகங்கள் ரசனையை தூண்டுவனவாக உள்ளன. இறை வணக்கமாக மூன்று சுலோகங்கள் அமைந்துள்ளன, இந்த ஸ்லோகங்கள் மகாவிஷ்ணுவின் பெருமையையும் பத்து அவதாரங்களையும் சுருக்கமாகச் செல்கிறது. கண்ணனின் லீலா வினோதங்களையும் அழகாகச் சொல்கிறது.
இறைவனின் ஒரே கரம் துஷ்டர்களை அழிக்கும் போது வஜ்ராயுதமாக வலிமையும் கடினமும் கொண்டதாய் இருப்பது, பக்தர்களைக் காக்கும் போது பூந்தளிர் போல் மென்மையாக மாறும் என்பதை அழகான உவமையின் மூலம் மனதில் பதிய வைக்கிறார்.
மனிதன் வாழும்போது தன்னலமற்று பிறருக்கு உதவி செய்து வாழ வேண்டும் என்பதை எளிமையான உதாரணங்கள் மூலம் சொல்கிறார். சூரியன் சந்திரன் போன்றவர்கள் மக்கள் மகிழ்வதற்காகவே உலவுகிறார்கள். மரங்கள் எல்லாம் மனிதருக்கு பழங்கள் தந்து உதவுகின்றன. இப்படி எல்லா பொருள்களும் உதவுவதை அறிந்தும் மனிதர்கள் மட்டும் தன்னலம் கொண்டு உயர் இலக்கு இல்லாமல் வாழ்ந்தால் அவர்கள் எதற்கும் உதாரணம் ஆக மாட்டார்கள் என்கிறார்.
பாஸ்வரேஷ நமோ நிஹந்தி ஸகல பிரஹ்லாத காரீ சசி:
கிம் தாவேவ பலாதிபிச்ச தரவ : கிம் நோப குர்வந்திந: |
ஏவம் வஸ்து பரோபகாரி ஸகலம் த்ருஷ்டவாமி நஷ்டாசய:
யஸ்ஸர்வாதைக பரோ பவத்யயமஹோ த்ருஷ்டாந்த சூன்யோஜனா: ||
ஶ்ரீ ராமானுஜரை குறிப்பிடும் போது நாடகாசிரியர் பலவாறு புகழ்கிறார். விஷ்ணுவே இவர் என்றும் கூறுபவர் ஓரிடத்தில் சூரியன் எப்படி வளர்ச்சியைத் தருகிறதோ அதுபோல் உள்ள ராமானுஜம் இருள் எனும் மாயா வித்தைகளைப் போக்கி வேத மௌலியை அரச பதவியில் நிலைக்கச் செய்வார் என்கிறார்.
இந்த பூமி மட்டும் தான் உலகம் என்று எண்ணாதீர், இந்த பூமியானது அண்ட சராசரங்களோடு ஒப்பிடும் போது ஒரு துளிதான் என்றும், அரசர்கள் பூமியில் ஒரு பகுதிக்குத் தான் அரசராவர். பூமி போன்ற பல்லாயிரக்கணக்கான உலகங்கள் பிரம்மாண்டத்தில் உள்ளன என்கிறார். இதன் மூலம் ஓர் அறிவியல் கோட்பாட்டை மறைமுகமாக தெரிவிக்கிறார்.
அதாவது வேதமே எங்கும் ஆட்சி செய்கிறது என்றும் பொருள் கொள்ளலாம்.
ரஜன் ஸப்த மஹாந்தி ஸந்தி
புவ நாத் ஷேவேவ கிம் சிந்மஹீ
ஸப்ராஜோபி ததேகதே சபதய: பூர்வேச பூர்வோதய:
தாக்ருக் லோக பரஸ் ஸஹஸ்ர பாரித ப்ரஹ்மாண்ட கோட்யத்ருதம் |
மூர்க்னாசாசனமேவ யஸ்ய ஸ பவான் வர்ண்யேத கிம்தைஸ்ஸம: ||
அரசனுக்கு நன்மை சொல்பவர்கள் மிகக் குறைவு என்பதையும் போகிற போக்கில் சொல்லி ஶ்ரீராமானுஜரை அரசன் தக்க வைத்துக் கொள்வதையும் சொல்கிறார். ஶ்ரீராமானுஜரிடம் ஸுநிதி கேட்கும் கேள்விகளுக்கு ஶ்ரீராமானுஜர் சொல்லும் பதில் மிக சிறப்பாகவும் மனிதர்கள் பின்பற்ற வேண்டிய நெறியையும் சொல்கிறது.
பரம்பொருளை மட்டுமே நினைத்து உருகி எங்கும் விளங்கும் இறைவனின் பேரானந்த நிலையில் நிலைத்து மகிழ்ந்து ஞானமயமான நிலையை உடையவனாய் இருப்பவனுக்கு இந்திர பதவியோ பெருஞ்செல்வமும் பிரம்ம பதவியும் பெரிதாகத் தெரியாது அவை யாவையும் பிரம்மாண்டத்தின் சிறு துளியாகவே எண்ணுர் என்கிறார்.
ப்ரஹ்மாஸ்வாத் ப்ரஸுமர மஹாநந்தலஹரீ விஹாரி
முக்தோயம் விமலரஸ ஸம்வித்மய வபு: பதம்|
தந்மாஹேந்ரம் பசுபதி விபூதிம் ச மஹதீம் ப்ரபுத்வம்
வைதாத்ரம் ப்ரஸுக்ரு பரிமேயம் கல்யதி||
ஸ்ரீ ராமானுஜரின் தத்துவங்களையும் மகாவிஷ்ணுவின் பெருமைகளையும் மிக சிறப்பாக விளக்கும் இந்நாடகத்தை எல்லாரும் முழுவதும் படித்து இன்புற வேண்டும் என்ற நோக்கில் அறிமுகம் மட்டுமே செய்யப்பட்டுள்ளது என்பதை படிப்பவர்கள் நினைவில் கொள்ளுதல் வேண்டும் என்று வேண்டுகிறேன்.
ஸ்ரீ ராமானுஜரின் பெருமைகளையும் சிறப்புகளையும் அவரின் கொள்கைகளையும் அறிந்து கொள்ள மிகவும் உதவும் நூல்.