அந்நிய மதங்கள்
இந்து மதம் கடந்த ஆயிரம் ஆண்டுகளாக அதன் மீது நடந்த தாக்குதல்களைத் தாக்குப் பிடித்து நிற்பதற்கு இன்னொரு முக்கிய காரணம் என்னவென்றால் அந்தக் காலகட்டத்து இஸ்லாமிய கிறிஸ்தவ ஆட்சிகள் முழுக்க முழுக்க அந்நிய, வந்தேறிகளின் ஆட்சிகளாகவே இருந்தன. பாபரும் அக்பரும் ஔரங்கஸீப் போல் கொடுங்கோலனாக இல்லாதபோதிலும் அவர்களும் அந்நியராகவே இருந்தனர். இந்தியாவை தமது அடிமை தேசம் என்ற அளவில் மட்டுமே பார்த்தனர். எனவே, மொகலாயர்களையும் அவர்களுடைய மதத்தையும் இந்திய நிலப்பரப்பில் இருந்தவர்கள் அந்நியமாகவே பார்த்து விலகி நின்றனர்.
வலுக்கட்டாயமாக மதம் மாற்றப்பட்டவர்கள், ஆதாயங்களை எதிர்பார்த்து மாறியவர்கள் ஆகியோர் நீங்கலாகப் பெரும்பான்மையான பலர் (இவர்களில் ஜாதி வாழ்க்கையின் கொடுமைகளை அனுபவித்தாகச் சொல்லப்படும் இடை, கடைநிலை ஜாதியினரின் எண்ணிக்கை மிக மிக அதிகம்) அந்த இஸ்லாமிய கிறிஸ்தவ சக்திகளை அந்நிய சக்திகளாகவே பார்த்து விலகியே நின்றனர். அதிலும் மதம் மாற்றுவதற்குக் கொடூர வழிகளைப் பின்பற்றிய இஸ்லாமிய அரசியல் சக்திகள் இந்திய சமூகத்தில் ஊடுருவிய அளவுக்கு வரலாற்றுத் திரிபெழுத்துகள், மருத்துவமனை, பள்ளிகள் நடத்துதல் என தந்திர வழிகளைக் கைக்கொள்ளும் கிறிஸ்தவ சக்திகளால் வேரூன்ற முடிந்திருக்கவில்லை. அதற்கான முக்கிய காரணம் அவையும் அந்நிய சக்திகள் என்பதுதான் (ஐரோப்பிய மேட்டிமைவாதம் இந்தியக் கறுப்பர்களுடனும் நெருங்கிப் பழக இடம் கொடுக்கவில்லை என்பதும் ஒரு காரணமே).
ஆனால், இந்தியா சுதந்தரம் அடைந்த பிறகு நிலைமை முற்றாக மாறிவிட்டது. இன்று இந்தியாவில் இஸ்லாமிய கிறிஸ்தவ வல்லாதிக்கத்தை முன்னெடுப்பவர்கள் அந்நியர்கள் அல்ல; இந்து மதத்தில் இருந்து பிரிக்கப்பட்டவர்களே. இவர்களை அந்நியர்கள் என்று சொல்லி நாம் எதிர்க்க முடியாது. அவர்களும் இஸ்லாத்தையும் கிறிஸ்தவத்தையும் தம் மீது திணிக்கப்பட்ட அந்நிய மதமாக அல்லாமல் தமது இயல்பான மதமாகப் பார்க்கும் இழிநிலைக்குப் போய்விட்டிருக்கிறார்கள்.
முதல் தலைமுறை வேண்டுமானால் தாய் மதத்தை விட்டுப் பிரிந்த வேதனையில் உள்ளுக்குள் குமுறியிருக்கலாம். பின் வரும் தலைமுறைகள் வேர் அறுபட்டு புதிய அடையாளத்தையே புனித அடையாளமாக வரிந்துகொள்வது உலகெங்கும் நடக்கும் அவலம்தான். எனவே, அந்தச் செயல்திட்டத்தின் அடிப்படையிலேயே தமிழர்கள் இந்துக்கள் அல்ல என்ற கோஷம் மீண்டும் தமிழக கிறிஸ்தவ, இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் முன்னிலைப்படுத்தப்படத் தொடங்கியிருக்கிறது.
இந்த அரசியல் சதித் திட்டத்தின் பின்னணியைப் புரிந்துகொள்ள முடிந்த ஒருவருக்கு தமிழர்கள் இந்துக்களா என்ற கேள்விக்கு எந்தவித விளக்கமும் தரவேண்டிய அவசியமே இருக்காது. அது புரியாமல் இருப்பவர்களுக்குச் சில உண்மைகளை எடுத்துச் சொல்லியாக வேண்டியிருக்கும்.
*
தமிழர்கள் இந்துக்கள் அல்ல என்று சொல்பவர்கள் சொல்லும் குற்றச்சாட்டுகளில் முதலாவது :
1. இந்து மதம் என்று ஒன்று கிடையவே கிடையாது. தமிழகத்தில் (இந்தியாவில்) ஜாதியே ஒருவருடைய அடையாளமாக இருக்கிறது. அந்தவகையில் தமிழர்கள் (இந்தியர்கள்) இந்துக்கள் அல்ல.
இந்து மதம் பொதுவாக மதம் என்று சொல்லப்படும் வகையானது அல்ல; அதாவது, கடந்த காலப் பாரம்பரியங்களை முற்றாக அழித்த ஒற்றைத் தோற்றுநர், அவர் அருளீய ஒற்றைப் புனித நூல், இறுக்கமான விதிமுறைகள் ஆகியவற்றைக் கொண்ட மதம் அல்ல; ஆதிகால மரபுகளை அனுசரித்து, தொகுத்து உருவாக்கப்பட்ட வித்தியாசமான மதம். எனவே, சர்வதேசப் பொதுப் புத்தியின் அடிப்படையில், குறிப்பாக, காலனிய அடிமை மனப்போக்கின்படிச் சிந்திக்கும் ஒருவருக்கு இந்து மதம் ஒரு மதமே அல்லதான். ஆனால், இந்திய மரபின் அடிப்படையில் சிந்திப்பவர்களுக்கு ஜாதிய, மொழிசார் பன்முக அடையாளங்களை மதித்து உருவான நெகிழ்வான, உண்மையான மதம் அது.
இது ஒருபக்கம் இருக்க, தமிழர்கள் ஜாதி உணர்வுடன் இருப்பவர்களே… எனவே அவர்கள் இந்துக்கள் அல்ல என்று ஒருவர் சொல்லக்கூடுமென்றால், அதே தர்க்கத்தின்படி தமிழகத்தில் தமிழர்கள் என்றும் யாருமே கிடையாது என்றும் சொல்ல முடியும். நீயும் இந்து நானும் இந்து என்று பிராமணர் – பிராமணரல்லாதவர்கள், தேவர் – பள்ளர், வன்னியர் – பறையர், பறையர் – அருந்ததியினர் போன்ற ஜாதியினர் ஒற்றுமை பாராட்டுவதில்லை என்று விமர்சிக்கும் அதே நேரம் நீயும் தமிழர் நானும் தமிழர் என்ற உணர்வும் அவர்களிடம் இல்லை என்பதால் அவர்கள் தமிழர்களாகவும் தம்மை உணரவில்லை என்ற முடிவுக்கே ஒருவர் வரவேண்டியிருக்கும்.
பரஸ்பரம் சண்டையிடும் நிலையிலும் மொழியால் அவர்கள் இரு தரப்பனரும் தமிழர்களே என்று சொல்லமுடியுமென்றால் மதத்தால் அவர்கள் இந்து என்று சொல்லவும் முடியும்.
இந்து மதத்துக்கும் தமிழர்களுக்கும் இடையிலான வித்தியாசங்களாகச் சொல்லப்படும் அனைத்து வாதங்களுக்கும் பதிலாக ஒரே ஒரு கேள்வியைத்தான் வைக்கமுடியும். தமிழர் இந்து இல்லையென்றால் வேறு யார்தான் இந்து..?
தமிழர்கள் வணங்கும் சிவன், முருகன், விநாயகர், விஷ்ணு, தாய்த் தெய்வங்கள், பரிவார தெய்வங்கள் அனைவருமே இந்துத் தெய்வங்களே… தமிழர்களின் ஆதார வழிபாடான உருவ வழிபாடு இந்துக்களின் வழிபாட்டு முறையே. தமிழர்களுடைய பாரம்பரிய உடையான வேட்டி, புடவை, தாவணி இந்து உடைகளே… தமிழர்கள் நெற்றியில் தரிக்கும் விபூதி, குங்குமம், சந்தனம், திருமண், புற்றுமண் என அனைத்துமே இந்து அம்சங்களே…
தமிழர்கள் திருமணங்களில் அணியும் தாலி, மலர் மாலை, தீ வளர்த்துச் செய்யும் சடங்குகள் அனைத்தும் இந்துச் சடங்குகளே… திருமண விழாவிலும் பிற மங்கல நிகழ்வுகளிலும் இசைக்கும் நாகஸ்வர இசையில் தொடங்கி இறப்புச் சடங்கில் ஒலிக்கும் பறை வரை அனைத்தும் இந்து இசைக் கருவிகளே… விழாக்களில் கட்டும் மாவிலைத் தோரணம், பந்தல் கால் நடுதல், காப்பு கட்டுதல் என அனைத்தும் இந்துச் சடங்குகளே… வீடு பெருக்கி, சாணியிட்டு மெழுகி கோலமிடுதல், மாடத்தில் விளக்கு ஏற்றுதல் என தமிழர் வீடுகளில் செய்யப்படும் செயல்கள் இந்து சடங்குகளே…
தமிழர்கள் மேற்கொள்ளும் நீத்தார் நினைவுச் சடங்குகள், ஜோதிடம் போன்றவை இந்துச் சடங்குகளே. தமிழர்களின் முக்கிய பண்டிகைகளான பொங்கல், சல்லிக்கட்டு, சித்திரைப் புத்தாண்டு, ஆடி மாதக் கொண்டாட்டங்கள், கார்த்திகைத் திருவிழா, தீபாவளி அனைத்தும் இந்துப் பண்டிகைகளே… தமிழர்களின் பண்பாட்டுப் பெருமிதமான கோவில்கள் இந்து வழிபாட்டு மையங்களே… தேரோட்டம், தெப்பம், கொடியேற்றம், ஸ்வாமி வீதியுலா, சாமியாட்டம் என தமிழர்களின் கொண்டாட்டங்கள் அனைத்தும் இந்து மரபானவையே…
முடி காணிக்கை, மரத்தில் வெள்ளியில் உடல் உறுப்புகள் செய்து அர்ப்பணித்தல், கோவில்களில் அன்றாட பிரசாதம், கூழ் வார்த்தல், அன்னதானம் என அனைத்தும் இந்து அம்சங்களே.
தமிழர்களின் இலக்கியப் பொக்கிஷங்களான கம்பிராமாயணம், வில்லிபுத்தூரார் பாரதம், தேவாரம், திருவாசகம், திருப்பாவை, திருவெம்பாவை, திருமுருகாற்றுப்படை உள்ளிட்ட அனைத்தும் இந்து தெய்வங்களைப் போற்றிப் புகழ்ந்து எழுதப்பட்டவையே… இன்ன மதத்தினர் என தெளிவாகச் சுட்ட முடியாததாகச் சொல்லப்படும் வள்ளுவரும் அவருடைய குறளும் குறிப்படும் கடவுள் இந்துக் கடவுளே…
தமிழர்களின் பெருமைமிகு நாயகர்களான சத்ரிய, சூத்திர – தலித் ஜாதிகளைச் சேர்ந்த மன்னர்கள் அனைவருமே இந்துக்களே… தமிழர்களின் புலவர் மரபும் பண்டிதர் மரபும் முழுக்க முழுக்க இந்துக்களே… தமிழர்களின் வணிக ஜாதிகள் அனைத்தும் இந்துக்களே… தமிழ் என்றால் இந்து… இந்து என்றால் தமிழர் என்று ஒன்றின் மாற்றுச் சொல்லாகக் கருதும் அளவுக்கு இருந்திருக்கின்றன.
இவ்வளவு ஏன்… தமிழர் இந்து அல்ல என்ற பிரசாரத்தை முன்னெடுக்கும் இன்றைய தமிழ்ப் பிரிவினைவாதிகளின் மூல கர்த்தாக்களான மறைமலை அடிகளில் தொடங்கி அனைவருமே தமிழ் தேசியத்தைவிட இந்து சைவ மரபையே தம் வாழ்நாள் முழுவதும் பேசி எழுதி வாழ்ந்திருக்கிறார்கள்.
தமிழ் கிறிஸ்தவர்களும் தமிழ் முஸ்லிம்களும் தமிழர்கள் அல்ல என்று சொல்வதில் நூறு சதவிகிதம் நியாயம் இருக்கிறது. ஏனென்றால், கிறிஸ்தவராகவும் இஸ்லாமியராகவும் மாறியதும் இந்து அடையாளங்கள் என்று சொல்லி அவர்கள் துறக்கும் அனைத்துமே தமிழ் அடையாளங்களே. ஆனால், தமிழ் கிறிஸ்தவர்களும் தமிழ் இஸ்லாமியர்களும் தமிழர்களே அல்ல என்று எந்த இந்துத்துவரும் இதுவரை சொன்னதில்லை. ஆக, இந்து அடிப்படைவாதிகளை விமர்சிக்கும்போது அவர்களை மட்டும் தனியாகவும் மிகையாகவும், இஸ்லாமிய கிறிஸ்தவ அடிப்படைவாதத்தை விமர்சிக்கும்போதும் இந்து அடிப்படைவாதியையும் இணைத்தே விமர்சிக்கும் “அறிவுஜீவிக் கும்பல்’ இந்து அடிப்படைவாதிகள் எவ்வளவு பலவீனமாக இருக்கிறார்கள் என்பதை இதில் இருந்தாவது புரிந்துகொள்ளவேண்டும்.
உண்மையில் ஓர் இந்து அடிப்படைவாதி தமிழ் கிறிஸ்தவரையும் தமிழ் முஸ்லீமையும் மட்டுமல்ல ஆந்திர முஸ்லீமையும் ஆந்திர கிறிஸ்தவரையும்கூட இந்தியன் என்ற அடையாளத்தின் கீழ் ஒன்றிணைக்கவே விரும்புகிறார். நீங்கள் தாய் மதத்தை விட்டுப் பிரிந்து சென்றிருக்கும் நிலையிலும் தாய் கலாசாரத்தையும் தாய் நாட்டையும் எதிர்த்து எதுவும் செய்யாதீர்கள் என்றுதான் கேட்கிறார்கள். ஆனால், இஸ்லாமிய கிறிஸ்தவ அடிப்படைவாதிகளோ இந்தியன் என்ற இணைப்பை மட்டுமல்ல; இந்து என்ற ஆதார அடிப்படையையே சிதைக்கும் அபாயகரமானவர்களாகவே இருக்கிறார்கள். இது மிக மோசமான கலாசாரத் தாக்குதல்… கருத்தியல் அராஜகம். எனவே, தமிழர்கள் இந்துக்கள் இல்லையென்றால் இந்த உலகில் யாருமே இந்து இல்லை என்றே அர்த்தமாகும். தமிழர்கள் இந்துக்கள் இல்லையென்று சொல்வது போப்பாண்டவன் கிறிஸ்தவன் அல்ல; இத்தாலி மொழி பேசுபவன் மட்டுமே என்று சொல்வதைப் போன்றது.
(தொடரும்)



