October 29, 2021, 1:46 am
More

  ARTICLE - SECTIONS

  கலைமகள் – 90 ஆவது ஆண்டு சிறப்பு மலர் வெளியீடு!

  உ.வே.சா, கி.வா.ஜ. தமிழறிஞர்கள் வழியில் கடந்த இருபத்தைந்து வருடங்களாகக் கலைமகளைத் தன் குணம், மணம், நிறம் மாறாமல் நடத்தி வரும் கீழாம்பூர்

  kalaimagal 90th year special
  kalaimagal 90th year special

  சினிமா, அரசியல் தவிர்த்து, ஒரு பத்திரிகை கலை, இலக்கியங்களுக்காக மட்டும் நடத்த முடியுமா? ’முடியும்’ என்று சாதனை படைத்திருக்கிறது ‘கலைமகள்’ இதழ்!

  தனது 90 ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் கலைமகள் இதழ், ஒரு வருடத்துக்கு இந்த மகிழ்ச்சியை வாசகர்களுடன் கொண்டாட இருக்கிறது என்பதற்கு அடையாளமாக, இன்று மயிலை ‘தளிகை’ உணவகத்தின் மாடியிலிருக்கும் அரங்கில் தனது 90 ஆவது ஆண்டு சிறப்பு மலர் வெளியீட்டு விழா நடந்தது.

  உ.வே.சா, கி.வா.ஜ. தமிழறிஞர்கள் வழியில் கடந்த இருபத்தைந்து வருடங்களாகக் கலைமகளைத் தன் குணம், மணம், நிறம் மாறாமல் நடத்தி வரும் கீழாம்பூர் பாராட்டுக்குரியவர். இன்றைய பதிப்பாளர் திரு பி.டி.திருவேங்கடராஜன், தன் முந்தைய பதிப்பாளர்கள் வழியிலேயே நின்று, மேலும் பல ஆக்கபூர்வமான மாற்றங்களுடன் கலைமகளை வெளியிடுகிறார் – ‘தமிழ் இலக்கியம் வளர்ப்போம்! பாரத தேசத்தின் பண்பாடு காப்போம்!! தமிழ் மொழியின் சிறப்பை உலகறியச் செய்வோம்!!! என்ற அவரது குரல் உலகெங்கும் ஒலிக்கும் நாள் மிக அருகில் இருப்பதாகவே தோன்றுகிறது.

  சாவித்திரி ஃபவுண்டேஷனின் அறங்காவலரும், என் மூத்த சகோதரரும் ஆன திரு. ஜெ. பாலசுப்பிரமணியன் அவர்கள் தலைமையில் இயங்கும் விழாக் குழு, சிறப்பான முறையில் விழாவினைத் திட்டமிட்டுக்கொண்டிருக்கிறார்கள் என்பதற்கான முன்மாதிரியாக இன்றைய மலர் வெளியீட்டு விழா நிகழ்ந்தது என்றால் அது சற்றும் மிகையல்ல.

  வேதாவின் கைவண்ணத்தில் சிறப்பான அட்டைப் படம் – ஒரு கையில் வீணை, மறு கையில் ஏட்டுச்சுவடி கல்வி, கலைகளை அருளும் கலைவாணியின் வித்தியாசமான அழகோவியம்! – அட்டைப்படத்திற்குக் கவிதை எழுதியிருப்பவர் கவிஞர் முருகதாசன்!

  kalaimagal 90 3
  kalaimagal 90 3

  மேதகு குடியரசு துணைத் தலைவர் அவர்கள் தாய்மொழியில் தொடக்கக் கல்வி பற்றியும், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ‘தாய் மண்ணே! உன்னைக் காப்பேன்!’ என்ற கவிதையையும், மாண்புமிகு தமிழக முதல்வர் திரு. மு.க ஸ்டாலின் அவர்கள் ‘முதலீட்டார்களின் முதல் முகவரி’ என்ற கட்டுரையையும் எழுதிப் பெருமை சேர்த்திருக்கிறார்கள்.

  காஞ்சி காமகோடி பீட மஹாஸ்வாமிகளின் அருளுரை, உ.வே.சா., கி.வா.ஜ., கீழாம்பூர், உமா பாலசுப்பிரமனியன், மாத்தளை சோமு, செங்கோட்டை ஶ்ரீராம், ஆர்.நடராஜன், இசைக்கவி ரமணன், உதயம்ராம், சுந்தரதாஸ் (ஆஸ்திரேலியா), சி.ரவீந்திரன், பூசை ச.ஆட்சிலிங்கம் ஆகியோரின் பல்சுவைக் கட்டுரைகளும், பதினோரு சிறுகதைகளும் (மூத்த எழுத்தாளர்களுடன், இன்றைய எழுத்தாளர்களின் கதைகளும் இதில் அடக்கம்!), பன்னீர் தெளித்தாற்போன்ற கவிதைகளையும் தாங்கி வெளிவந்திருக்கிற இந்த மலர் மிகவும் சுவாரஸ்யமான தொகுப்பு – மலர்க் குழுவினருக்கும், ஆசிரியர் கீழாம்பூர் அவர்களுக்கும் வாழ்த்துகள்!

  kalaimagal 90 5.
  kalaimagal 90 5.

  நான்கு மணிக்கு தளிகையில் சிற்றுண்டியுடன் தொடங்கியது விழா. பி.பி.சம்பத் (ஓய்வு, ஈ.டி. டாஃபே) மலரினை வெளியிட, சிஏ ஆர் சிவக்குமார், ஆடிட்டர் ஜெபி, கீழாம்பூர், பிடிடி ராஜன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். கலைமகளின் பெருமைகளையும், இலக்கியப் பங்கினையும் சிறப்பு விருந்தினர்கள் பேச, கீழாம்பூரின் உரையுடன் (விழாவிற்கு வந்திருந்த அனைத்துப் பிரமுகர்களையும் பெயர் சொல்லி, வாழ்த்தி, அறிமுகம் செய்தது வியப்பு!) விழா இனிதே முடிந்தது.

  kalaimagal 90 4
  kalaimagal 90 4

  வந்திருந்த அனைவருக்கும் ஒரு பிரதி, மலர் வழங்கப்பட்டது. வாழிய செந்தமிழ் நமது சந்திரமோகன் – அவருடைய இணைப்புரை எப்போதும்போல் கச்சிதம் – பாடிட, விழா நிறைவடைந்தது! கொரோனா காலச் சிறிய விழா ஆன போதிலும், காத்தாடி ராமமூர்த்தி, காலச்சக்கரம் நரசிம்மா, இசைக்கவி ரமணன், வித்யா சுப்ரமணியன், ஆர் வி ராஜன், இந்திரநீல் சுரேஷ், உதயம் ராம், போன்ற பிரபலங்களும் வந்திருந்தது சிறப்பு.

  ஓர் இணைப்பு நிகழ்வாக, ஜெ.பாஸ்கரனின் ‘தேடல்’ சிறுகதைத் தொகுப்பிலிருந்து 15 கதைகளை, ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து (மொழிபெயர்ப்பு திரு. ஆர்.வி.ராஜன்) ’The Search and other stories’ என்ற தலைப்பில் வந்துள்ள புத்தகத்தைத் திரு கீழாம்பூர் வெளியிட, வந்திருந்த சிறப்பு விருந்தினர்கள் பெற்றுக் கொண்டனர்.

  நீண்ட நாட்களுக்குப் பிறகு நண்பர்களைச் சந்திக்கும் வாய்ப்பாகவும் அமைந்திருந்தது ‘கலைமகள்’ மலர் வெளியீட்டு விழா. இன்னும் நூறாண்டுகள் வாழ்ந்து, கலைப் பணியாற்றிடும் கலைமகள் என்பது நிச்சயம்! வாழ்த்துகள்!

  • ஜெ.பாஸ்கரன்.

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,138FansLike
  368FollowersFollow
  39FollowersFollow
  74FollowersFollow
  1,593FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-