காளி மகாசக்தி பற்றி கீழாம்பூர் பேச்சு!

யாதுமாகி நின்றாய் – காளி! எங்கும் நீ நிறைந்தாய்,
தீது நன்மை யெல்லாம் – காளி! -தெய்வ லீலை யன்றோ?…
பூத மைந்தும் ஆனாய் – காளி! – பொறிக ளைந்தும் ஆனாய்,
போத மாகி நின்றாய் – காளி – பொறியை விஞ்சி நின்றாய் .

சக்தியின் வடிவத்தை-ஒளியை கட்டுக் கடங்காத தமிழ் ஓட்டத்தில் சொன்னவர் மகாகவி பாரதியார்!

காளியின் தோற்றத்தை- மாட்சியை – பரிபாலனத்தைப் பாட்டு வடிவத்தில் பொரிந்து கொட்டியவர் எட்டயபுரக் கவிஞன் பாரதி.

இன்று இரவு டெப்போ ரோடு ருத்ர காளியம்மன் கோயில் வளாகத்தில் நடந்த கீழாம்பூர் சங்கர சுப்ரமணியனின் பேச்சு, மகா காளியையும், மகாகவி பாரதியையும் சுற்றிச் சுழன்ற பேச்சு! வழக்கமான பாரதி இன்று அங்கு வரவில்லை. ஆன்மீக பாரதியாக வந்தான். ஆனால், பாரதியின் கவிதைகளில் ஆன்மிக உணர்வு இல்லாதது எங்கிருக்கின்றன!

ஆலய நிர்வாகக் குழுவின் தலைவர் திரு.ராமச்சந்திரன் கீழாம்பூருக்கு பொன்னாடை அணிவித்து மரியாதை செய்ய, நிர்வாகக் குழுவைச் சேர்ந்த வெண்பாக் கவிஞர் வரதராஜன், அனைவரையும் வரவேற்று சங்கரசுப்ரமணினின் இலக்கிய ஆற்றல் பற்றியும், மறைந்த பத்திரிகையாளர் ஏ.என்.சிவராமனின் பேரன் அவர் எனவும் அறிமுகப் படுத்தினார்.

காளியின் சிறப்புகளை சுவையாகச் சொன்ன கீழாம்பூர், தன் தொடக்க உரையில், திருநெல்வேலிக்காரர்களில் பெரும்பலர் பத்திரிக்கையாளர்கள் எனவும், கும்பகோணத்துகாரர்கள் எழுத்தாளர்கள் எனவும் குறிப்பிட்டார். கீழாம்பூர் கிராமம், திருநெல்வேலிக்குப் புகழ் சேர்ப்பதை எண்ணிப் பார்க்கிறோம்.

நின்றாய் காளி’ என்று மகாகவி பாரதியார் அவளது சக்தியைப் போற்றினார். மூடனாக இருந்த காளிதாசரின் நாவில் சரஸ்வதி நர்த்தனமிடச் செய்து மகாகவியாக உலகம் உள்ளவரை நிலைத்த புகழ்பெற துணை புரிந்தாள்.இந்து சாம்ராஜ்ஜியம் கண்ட சத்ரபதி சிவாஜிக்கு வீரமும் தீரமும் தந்தவள் அவள்.

ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சருக்கு பிரத்தியட்சமாகக் காட்சி தந்து அற்புதம் செய்தவள் அவள்…இப்படியெல்லாம் உலக மாந்தர்களுக்கு அருள் பாலித்தவள் காளி என்ற கலைமகள் ஆசிரியர் கீழாம்பூர், காளியின் பிறப்பிடம் சிவபெருமானின் கழுத்து எனக் கூறி, அதற்கான புராண வரலாற்றையும் சொன்னார்.

சரளமான தமிழில் பேசிய கீழாம்பூர், இறைவனுக்குப் படைக்கப்படும் நைவேத்தியங்கள் அனைத்துமே இறைவனால் ஏற்கப்படுகின்றது என்பதை விளக்கியவிதம், காளியைப் பற்றிய கல்வெட்டுகள் பல்லவர் காலத்திலேயே இருந்த சான்று, கங்கை இரு கரையுடையான் குகனின் ஏற்ற தாழ்வில்லாத பக்தியைப் போல் (மீனையும் தேனையும் ராமனிடம் அன்போடு நீட்டிய பக்தி) தெய்வங்களில் உயர்வு தாழ்வு காட்டாத பாரதி காட்டிய காளி – மாரி -அம்மன் மீ தான அபரிமிதமான பக்தி, சிவபெருமானின் தலையில் கங்கையின் குடி இருப்பு ஏனென்ற விளக்கம், உ.வே.சா-கிவாஜவின் காஞ்சி முனிவருடனான தொடர்பு…என பல விஷயங்களை, முக்கால் மணி நேரத்தில் நன்றாகவே பிழிந்து தந்தார் கீழாம்பூர்.

கோபக்கார மனைவியை பத்ரகாளி எனக் கூப்பிடுவதை ஏற்காத அவர், கணவனைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்பவள், பத்ரகாளி மனைவி என்று கிவாஜவின் வார்த்தைகளை நினைவுபடுத்தினார்.

நாளை இலக்கிய வட்டத்தின் சார்பில், ‘கம்பன் ஒரு பத்திரிகையாளன்’ என்ற தலைப்பில் பூன் கெங் எம்.ஆர்.டி. ரயில் நிலையத்தை ஒட்டி அமைந்துள்ள கலாங் சமூக மன்ற கிளப்பின் முதல் மாடி அறையில் மாலை 3 மணிக்கு பேசுகிறார்.

செய்தி – ஏ.பி.ராமன் (சிங்கப்பூர்)