பாரதி… யாராம்?!

நான் மயிலாப்பூரில் இருந்த நேரம்… 
வீட்டுக்கு வந்த விருந்தினர் குழாமில் ஒரு பெண்மணி… சற்றே வித்தியாசமாகப் பேசியபடி தொணதொணவென்று இருந்தார். திடீரென்று சுவரில் மேலே பார்த்தவர், பாரதியின் இந்தப் படத்தைப் பார்த்து ஒரு கேள்வி கேட்டார். பாரதியின் இந்தப் படத்துக்கு ஒரு சந்தன மாலையை அணிவித்திருந்தேன். மாலையின் நுனியில் இருந்த குண்டலங்கள் மணிகள் காற்றில் அசைந்து கவனத்தை ஈர்த்துக் கொண்டிருக்கும்.
திடீரென அவர் கேட்ட கேள்வியால் நான் நிலைகுலைந்து போனேன். முதலில் இது யார் படம் என்றார் அவர்… அதற்கு எம் அம்மை ’இது பாரதியார் படம்’ என்று பதிலளித்தார்.
உடனே அவர், ‘பாரதியார் உங்க சொந்தக்காரரா?” என்று கேட்டார். என் அம்மைக்கு பதில் ஏதும் சொல்லத் தோன்றவில்லை. உதட்டளவில் சிரித்தபடி என்னைப் பார்த்தார். விட்டுத் தள்ளுங்கள் என்று நான் ஜாடை காட்டினேன்… பேச்சு வேறு புறம் திரும்பியது…
இப்போது எனக்குள் ஒரு எண்ணம் எழுகிறது. நேரு மாமாவாம். காந்தி தாத்தாவாம். இது தேசிய அளவில். இங்கும் ஒரு சிலர் தந்தை, அண்ணா என்றெல்லாம் ஒரு சிலரை சொந்தம் கொண்டாடும்போது, பாரதியை மட்டும் நாம் ஏன் சொந்தம் கொண்டாடாது போனோம் என்று!
சின்னஞ்சிறு வயதில் மரித்து விட்ட பாரதியை சமூகம் எந்த சொந்தத்தில் பார்க்க விரும்பும்?!