
தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவும் வகை செய்தல் வேண்டும் என்று பாடிய தமிழ்க்கவிகளின் தலைமைக் கவி மகாகவி பாரதியாரின் கனவு இன்று நனவாகி வருவது எல்லையற்ற மகிழ்ச்சியைத் தருகிறது.
கடந்த இரண்டாண்டுகளாக தமிழ்நாட்டின் எல்லையைத் தாண்டி நம் எட்டயபுரத்து கவிஞனின் சிந்தனை உலகமெங்கும் பல்வேறு அமைப்புகளின் வழியாக இணைய வழியிலும் , சமூக வலைதளங்கள் ஊடாகவும் பரவி வருவது பரவசத்தை ஏற்படுத்துகிறது.
பாரதியின் நினைவு நூற்றாண்டையொட்டி ஆண்டு முழுவதும் பள்ளிகளில், கல்லூரிகளில் பல வகையான போட்டிகளை நடத்தி மாணவர்களிடையே மானுடம் தழைக்கப் பாடியவனின் கருத்துகளை பதிய வைப்பதற்கும் , சென்னை பாரதியார் இல்லத்தில் தொடர்ந்து பல நிகழ்வுகள் வழியே பாரதியின் புகழ் பாடுவதற்கும் வழி வகுத்த தமிழக அரசுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்வோம்.
பாரதப் பிரதமரும் பல மத்திய அமைச்சர்களும் அண்மைக் காலங்களில் தமிழ் மொழியின் மீது தனி கவனம் செலுத்தி வருவது நெஞ்சை நிமிர்த்தி பெருமை கொள்ள வைக்கிறது.
சமீபத்தில் நடந்து வரும் காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்வுகள் வடக்கில் தமிழுக்குத் தரப்பட்டிருக்கிற முதல் மரியாதை என்றே சொல்ல வேண்டும்.
கலை . இலக்கியம் , பத்திரிகை , மொழியாய்வு இப்படிப் பல்வேறு பிரிவுகளில் தமிழறிஞர்களும் , படைப்பாளர்களும் தகுதியின் அடிப்படையில் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து தேர்வு செய்யப்பட்டு மத்திய அரசின் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டு வருகின்றனர் .
கவியரங்கங்கள் , கருத்தரங்கங்கள் , திறனாய்வரங்கங்கள் என்று காசி நகர் மக்களின் காதுகளெல்லாம் தற்போது தமிழால் குளிர்ந்துள்ளன.
தமிழ்நாட்டில் கூட படைப்பாளிகளுக்கு இப்படியொரு சிறப்பும் அங்கீகாரமும் கிடைத்ததில்லை என்று வாரணாசி சென்று வந்தவர்கள் வலை தளங்களில் தருகிற செய்திகளெல்லாம்
செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே என்ற தேசம் போற்றிய நேச கவிஞனின் வார்த்தைகளுக்கு உயிர் தந்து உணர்ச்சிவயப்பட வைக்கின்றன.
சென்ற மாதம் அழுக்கு படிந்து.. பார்க்க எவருமே இல்லாத காசி அனுமன் காட் பகுதி பாரதி சிலை இன்று பளிச்சென்று இருக்கிறது, யார் இவர் என்று தெரியாத இந்தி காரனின் கண்களுக்கு பாரதியின் தரிசனம் கிடைத்திருப்பதும் ,, பாரதி தங்கி படித்த 200 ஆண்டுகால வீடு புதுப்பிக்கப்படும் திட்டம் மத்திய அரசின் பரிசீலனையில் இருப்பதும் , பாரதியின் சொந்த மருமகனார் மற்றும் உறவினர்களை அமைச்சர்கள் முதல் நம் தமிழக படைப்பாளிகள் வரை சென்று பார்த்து சிறப்பு செய்வதும் … பாரதிக்கு மட்டுமா சிறப்பு ? பாரதியை சுமந்த தமிழ் பூமிக்குமல்லவா சிறப்பு ?
வடக்குக்கு ஏன் தெற்கின் மீது திடீர் அக்கறை ?
பா.ஜ.க விற்கு ஏன் தமிழ் மீது திடீர் பாசம் ?
பிரதமருக்கு பாரதி மீது ஏன் திடீர் கவனம் ?
இப்படி வழக்கம் போலவே கேள்விகள் கேட்டு , மீம்ஸ் போட்டு குட்டையைக் குழப்புகிற கூட்டம் சில விஷயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும்
தமிழ் மட்டுமில்லை .. எல்லோருமே தங்கள் தாய் மொழிக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்றுதான் பிரதமர் , உள்துறை அமைச்சர் உட்பட பலரும் தொடர்ந்து பேசி வருவதையும் , மொழி வளர்ச்சிக்காக மத்திய அரசின் கல்வி கலாச்சாரத் துறையின் கீழ் பல்வேறு திட்டங்கள் , அதற்கான நிதி ஒதுக்கீடுகள் இருப்பதையும் இங்குள்ளவர்கள் தெரிந்து வைத்திருக்கிறார்களா என்று தெரிய வில்லை.
காரணம் தெலுங்கானாவிலும் , கர்நாடாகாவிலும் கடந்த ஒரு மாத காலமாக அரசு சார்பில் தொடர்ந்து நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றனவாம். நம் தமிழகத்திலும் ஏன் அப்படி மொழி வளர்ச்சி விழாக்களை, மத்திய அரசின் நிதி உதவி மற்றும் வழிகாட்டுதலோடு நடத்தக் கூடாது ?
வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது என்று முழக்கம் செய்த நமக்கு வடக்கு வாழ்த்துகிறது தெற்கு வளர்க்கிறது என்று முழக்கத்தை மாற்ற முடியாதா என்ன ?
தேமதுர தமிழோசை தேசமெங்கும் பரவ வடக்கு வழிகாட்டியிருக்கிறது.
உலகெமெல்லாம் பரவும் வழிகளைத் தெற்குத் தேட வேண்டும் , தேசக் கவியின் கனவை நனவாக்க வேண்டும் என்பதே உரத்த சிந்தனையுள்ள ஒவ்வொருவரின் எதிர்பார்ப்பாகும்
- கட்டுரை உதயம் ராம் (9444011105)