செப்.11- தேசியக்கவி சுப்ரமணிய பாரதியின் தினம்…! நாம் தினந்தோறும் ஒவ்வொரு கணமும் அவரது நினைவுகளில் தோய்ந்து போகிறோம் என்றாலும், இன்றைய தினத்தில் சிறப்பாக நினைவில் நிறுத்துவது தேசியத் தமிழர்களின் முதற்கடமை.
செங்கோட்டையில் கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி, பாரத சுதந்திரத்தின் அம்ருத மஹோத்ஸவத்தை ஒட்டி- அமரர் செங்கோட்டை கங்காதரன் கிட்டப்பா என்ற எஸ் ஜி கிட்டப்பா சமுதாயத்துக்காக அளித்த – ஸ்ரீமூலம் ரீடிங் க்ளப் என்ற நம் நூலகத்தில் கொடி ஏற்றி வைத்து ஒரு நிகழ்ச்சியை நடத்தினோம். அப்போது, செங்கோட்டை மண்ணின் மைந்தர்களான வாஞ்சிநாதன், எஸ் ஜி கிட்டப்பா, சாவடி அருணாச்சலம் பிள்ளை ஆகியோரின் உருவப் படங்களுடன், மகாகவி பாரதியின் படத்தையும் திறந்து வைத்து அவருக்கு புஷ்பங்களை அர்ப்பித்து மரியாதை செலுத்தினோம்.
அப்போது பாரதிக்கும் செங்கோட்டை ஊருக்கும் உள்ள தொடர்புகளை பெரியவர்கள் சிலர் பேசினார்கள். மேட்டுத்தெரு வெங்கடேஸ்வரன் மாமா, 2008 அக்டோபர் 17ம் தேதியிட்ட தி ஹிந்து மதுரைப் பதிப்பில் வந்த லெட்டர் டு தி எடிட்டர் பகுதியில் வெளியான ஒரு கடிதத்தை அனைவருக்கும் எடுத்துக் காண்பித்தார்.
அந்தக் கடிதம் கோவையைச் சேர்ந்த என்.ஹரிஹரன் என்பவர் எழுதியது. அந்தக் கடிதத்தில், செங்கோட்டைக்கும் மகாகவி பாரதிக்கும் இடையே உள்ள உறவு வெளித் தெரிந்தது.
ஏற்கனவே செங்கோட்டையில் இயங்கிவந்த பாரதமாதா சங்கத்தில் வாஞ்சிநாதன் நீலகண்ட பிரம்மச்சாரி உள்ளிட்ட உறுப்பினர்கள் உடன் சுப்பையா என்ற சுப்பிரமணிய பாரதியும் சேர்ந்தே இருந்துள்ளார். அவர்களுக்குள் நெருங்கிய நட்புறவு இருந்தது. சுப்பிரமணிய பாரதியை விட வாஞ்சிநாதன் நான்கு வயது இளையவன்தான்.
செங்கோட்டையில் அத்வைத ஞானியாக திகழ்ந்த ஆவுடையக்காள் பாடல்களை அடிக்கடி காதாரக் கேட்டு, அதில் மயங்கிய மகாகவி பாரதி, ஆவுடையக்காள் பாடலின் சாயலில் சில பாடல்களை எழுதினார். காரணம் பாரதியின் உறவினர் பெண்மணி மூலம் ஆவுடையக்காள் பாடல்கள் அவரை அதிகம் பாதித்தது என்று குறிப்பு உள்ளது.
பாரதி கடையத்தில் வாழ்ந்துவந்த காலத்தில், சிறிது காலம் அருகே இருக்கும் செங்கோட்டையில் மலையான்ஸ்கூல் எனப்படும் இந்தப் பள்ளியில் பணி செய்திருக்கலாம் என்று தெரிகிறது. எங்கள் சிறுவயதில் இதனை மலையான் ஸ்கூல் என்போம். அதாவது மலையாளம் கற்றுத் தந்த பள்ளி. செங்கோட்டை 1956க்கு முன் வரை திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்தது. திருவாங்கூர் சமஸ்தானத்தைச் சேர்ந்த இந்த அரசுப் பள்ளியில் மகாகவி பாரதி சிறிது காலம் பணி செய்ததாகவும், அவர் இங்கே அருகிலுள்ள தெருவில் வசித்து வந்ததாகவும் தெரிகிறது. ஆனால் பள்ளியின் பதிவேடுகளில் இது குறித்த உறுதியான தகவல்களை தேடிக் கண்டுபிடிக்க இயலவில்லை. அனேகமாக பாரதி கடையத்தில் வாழ்ந்து வந்த பிற்காலத்தில் 1917-19 காலகட்டத்தில் அவர் இங்கே சில மாதங்கள் பணியில் இருந்திருக்கலாம். கடையத்தில் அவருக்கு மனம் இருப்புக் கொள்ளாமல் திருவனந்தபுரத்துக்கும் பின்னர் எட்டயபுரத்துக்கும் சென்று சில காலம் வசித்துள்ளார். அந்தக் காலத்தில் அவர் இங்கே திருவிதாங்கூரைச் சேர்ந்த செங்கோட்டையில் வசித்து இருக்கக் கூடும்.
இந்த தகவலின்படி, அன்றைய மலையாளப் பள்ளியான இன்றைய வாஞ்சிநாதன் நடுநிலைப் பள்ளியில், வரும் ஆண்டில் மிகப்பெரிய பாரதியின் திருவுருவப் படத்தை அல்லது உருவச் சிலையைத் திறந்துவைக்க வேண்டும் என்றும், அதில் மதுரை சேதுபதி பள்ளியில் இருப்பதுபோல் பாரதியார் பணி செய்த பள்ளி என்று ஒரு பெயர்ப் பலகை வைக்கவேண்டும் என்றும், ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று நடந்த கூட்டத்தில் பெரியவர்கள் சிலர் தங்கள் ஆசைகளை தெரிவித்தார்கள். அனேகமாக இந்த வருட டிசம்பர் மாதத்தில் மகாகவியின் பிறந்தநாளில் அவ்வாறு அமைய, அதற்கான ஏற்பாடுகளைச் செய்வோம் என்று நம்பிக்கை இருக்கிறது!
***
பின்னிணைப்பு: கோவை என். ஹரிஹரன் எழுதிய கடிதத்தின் தமிழாக்கம்:
பாரதியின் நினைவுகள்
ஸ்ரீராம் வெங்கடகிருஷ்ணன் எழுதிய சுப்ரமணிய பாரதி, (‘Born poet, Sincere patriot – Friday Review, October 3) கட்டுரையை ஏக்கத்துடன் படித்தேன்.
1921 செப்.11 பாரதியின் மறைவுக்குப் பிறகு, 1922 ஆம் ஆண்டு ஜனவரி 20 ஆம் தேதி நான் பிறந்தேன். எனது தந்தை செங்கோட்டையிலுள்ள திருவிதாங்கூர் அரசுப் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்தபோது, பாரதியின் சக ஊழியராகவும் நெருங்கிய நண்பராகவும் இருந்தார். அவர்கள் ஒரே உரிமையாளரின் வீட்டில் வாடகைக்கு குடியிருந்தார்கள்.
கவிஞரின் அபிமானி:
பாரதி ரூ.17 சம்பளத்தில் தமிழ் முன்ஷியாக இருந்தார். எனது தந்தை இளங்கலை பட்டதாரியாக ஆங்கிலம் மற்றும் கணிதம் பயிற்றுவிப்பவராக, ரூ. 25 சம்பளத்தில் வேலையில் இருந்தார்.
எளிமையான தமிழில் பாடல் வரிகள் எழுதும் பாரதிக்கு என் அப்பாவிடம் ஓர் அபிமானம் இருந்தது. அவர் நீண்ட நேரம் விழித்திருப்பார். நள்ளிரவில் அவர் மொட்டை மாடிக்குச் சென்று, பகலில் அவர் எழுதிய பாடல்களை ஆர்வத்துடன் பாடுவார். அப்போது அவர் சுப்பையா என்று அழைக்கப்பட்டார்.
“இரவு நேரத்தில் அவர் சத்தமாகப் பாடுவதற்கு, வீட்டு உரிமையாளரின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தார்கள். அதற்கு அவர், இரவில் தான் பாடல் வரிகளை இயற்றும் உத்வேகத்தைப் பெறுவதாகவும், மொட்டை மாடியில் பாடுவதன் மூலம் அவற்றின் அதிர்வுகளையும் பாடலின் ஈர்ப்பையும் சோதித்தறிய முடிவதாகவும் கூறுவார். எனது தந்தை அவருக்காக அவர்களிடம் வாதாடுவார்.
ஒருமுறை பாரதியின் மனைவி தீபாவளிக்கு “பட்டுப் புடவை” வாங்கித் தரச் சொல்லி, தான் சேமித்து வைத்திருந்த பணத்தைக் கொடுத்தார். பாரதியோ, தனது படைப்புகளை வெளியிடுவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய சென்னைக்கு பயணித்தார்.
இரண்டு வாரங்களுக்குப் பிறகு அவர் திரும்பியபோது அவரிடம் ஒரு பெரிய மூட்டை இருந்தது. அவர் பட்டுப் புடவை இல்லை. அதற்கு பதிலாக “அழியாத செல்வம்” என புத்தகங்களின் ஒரு பெரிய தொகுப்பு இருந்தது.
வருடங்கள் பல கடந்து ஒரு போட்டியில் பாரதியின் பாடல்களைப் பாடி என் குழந்தைகள் பரிசு பெற்றபோது, என் அப்பா இதை என்னிடம் ஊணர்ச்சிகரமாகச் சொன்னார்.
– என்.ஹரிஹரன், கோவை