
எனக்கு புகைப்படங்கள் எடுக்கப் பிடிக்குமே தவிர, என்னை புகைப்படம் எடுப்பதை நான் அதிகம் விரும்புவதில்லை! கல்லூரிக் காலத்திலேயே துளிர்விட்டது புகைப்படக் கலையின் மீதான ஆர்வம். கேனான் பிலிம் ரோல் கேமரா வாங்கினேன். அடுத்து மெடிக்கல் ரெப் பணி. தமிழகத்தின் பெரும்பாலான இடங்களுக்கு… ஊர் ஊராக சுற்றும்போதும், அந்த அந்த ஊர் கோயில்கள், சிறப்பான இடங்களை ‘சுட்டு’ வைத்தேன். ஆனால் அவற்றை பிரிண்ட் போட்டு பாதுகாத்து வைப்பது பெரும் பாடாக இருந்தது.
இருபது வருடங்களுக்கு முன் கேனான் டிஜிட்டல் கேமரா வாங்கினேன். ஆனாலும் என்னை அதிகம் அதில் விழ வைத்துக் கொண்டதில்லை!~
இதைச் சொல்லக் காரணம்… என் ஆசான்களில் ஒருவரான மஞ்சரி முன்னாள் ஆசிரியர் லெமன் என்ற லெட்சுமணன் சார் ஒரு சிறு அனுபவக் கட்டுரை அனுப்பினார். சீராம்.. படிச்சுப் பாருங்கோ என்று! அதை கதிருக்குக் கொடுத்தேன்., தினமணி கதிரில் அது இடம்பெறத் தேர்வாகி பக்க வடிவமைப்பின் போதுதான் லெமன் படமும் இருந்தால் நன்றாக இருக்குமே ஸ்ரீராம் என்றார் அதன் பொறுப்பாசிரியர் பாவை சந்திரன்.
சரி என்று தேடு தேடு என்று லெமன் சார் படத்தைத் தேடினால்.. ம்ஹும்..! வேறு வழியின்றி சில மணி நேர தாமதத்தில் அவரது சகோதரர் எழுத்தாளர் சாருகேசியிடம் கேட்டு சிறிய அளவில் அவர் எங்கோ சேமித்து வைத்திருந்த படத்தை அனுப்பி வைத்தார்.
காரணம்.. எத்தனையோ பேரை நான் என் கேமரா ஃப்ரேமில் க்ளிக்கி வைத்துள்ளேன். ஆனால், லெமன் சார் மட்டும் கறாராக மறுத்துவிட்டார்.
கூச்ச சுபாவம் கொண்டவர். வெளியில் எங்கும் செல்ல மாட்டார். பார்வைக் குறை அவருக்கு உண்டு என்பதால் பல நாட்கள் கைத்தாங்கலாக நிகழ்ச்சிகளுக்கு அழைத்து வந்து ஓரத்தில் அமர வைத்து, என் பைக்கில் ஏற்றி வீட்டில் பத்திரமாகக் கொண்டு போய் விட்டிருக்கிறேன்.
சார்.. ஒரே ஒரு ஃபோட்டோ… உங்களை.. – என்றால், வேண்டாமே! என்று விடுவார்.
இந்த நிலையில்தான் அப்படி ஒரு நெருக்கடி.
இருப்பினும், அவர் அறியாமல் ஒரு நிகழ்ச்சியில் க்ளிக்கி வைத்தேன். ஆனாலும் நேராக அவர் முகம் காட்டவேயில்லை. கீழே குனிந்து, பக்கவாட்டில் பார்த்து.. என்றவாறு!
இப்படி எல்லாம் போட்டோ எடுத்துப் போட்டு… நம்மை நாமே வெளிப்படுத்திக் கொள்வதில் எனக்கும் உடன்பாடு இருந்ததில்லை! இருந்தாலும், ஒரு முக்கியமான கட்டத்தில் வாசகருக்கு அடையாளப் படுத்த தேவைப்படுகிறதே!
லெமன் சார் எழுதிய அந்த அனுபவக் கட்டுரை….
+++
நம்பினோரைக் கைவிடார் நடைமேடைப் பிள்ளையார்!
“மஞ்சரி’ மாத இதழின் முன்னாள் ஆசிரியர் “லெமன்’ கூறும் அனுபவங்கள் :
இந்த 2014 ஜூலையில் மாமன்னன் ராஜேந்திர சோழன் முடிசூடிய ஆயிரமாம் ஆண்டு கங்கை கொண்ட சோழபுரத்தில் கொண்டாடப்பட்டது; இதே ராஜராஜ சோழன் முடி சூடிய ஆயிரமாம் ஆண்டு தஞ்சாவூரில் கொண்டாடப்பட்டது.
அன்றைய தமிழக முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர் தலைமையிலான அரசு விழா எடுத்தது. பத்திரிகையாளர்களையும் அரசு செலவிலேயே சென்னையிலிருந்து தஞ்சைக்கு அழைத்துச் சென்றார்கள்.
அப்போது நான் தி-நகர் பேருந்து நிலையம் அருகே தாமோதர ரெட்டி தெருவில் குடியிருந்தேன். பத்திரிகையாளன் என்ற முறையில் நானும் தஞ்சை விழாவுக்குப் புறப்பட்டேன். அண்ணாசாலை அரசினர் தோட்டத்தில் பத்திரிகையாளருக்கான பேருந்துகள் காத்திருந்தன.
குறிப்பிட்ட நாளில் காலை 10 மணி அளவில் தி-நகர் பேருந்து நிலையம் சென்றேன். தடம் எண் 11-பஸ்ஸில் ஏறி ராஜாஜிஹால் நிறுத்தத்தில் இறங்க வேண்டும். நிலையத்தின் உள்ளே 11-ஆம் எண் பஸ் நின்றிருந்தது. ஒரு சிலர் ஏறி அமர்ந்திருந்தனர்.
வழக்கம்போல் நான் பேருந்து நிலைய வெளிகேட் அருகே நடைமேடைப் பிள்ளையார் கோயில் முன் நின்றேன். கைப்பெட்டியைக் கீழே வைத்துவிட்டுச் சாமி கும்பிட்டேன். உண்டியலில் காசு போட்டேன்; விபூதியை எடுத்து இட்டுக் கொண்டேன். சரசரவென்று தோள் பையுடன் போய் 11-ஆம் எண் பஸ்ஸில் ஏறிக் கொண்டேன். பஸ் ஏறத்தாழப் பயணிகளால் நிரம்பியிருந்தது. கண்டக்டர் டிக்கெட் – மீதம் சில்லறை கொடுத்தபடியே வந்தார். எனக்குப் பகீர் என்றது. கைப் பெட்டியைப் பிள்ளையார் கோயில் நடைமேடையில் வைத்தது நினைவு வந்தது. தடதடவென்று இறங்கி வெளியே வந்தேன். பிள்ளையார் கோவில் நடைமேடையில் என் கறுப்புக் கைப் பெட்டியைக் கண்டதும்தான் எனக்குச் சரியாக மூச்சுவந்தது.
பெட்டி நான் வைத்த இடத்திலிருந்து சற்றுத் தள்ளியிருந்தது; அவ்வளவுதான். பிள்ளையாரப்பன் என்னைக் கைவிடவில்லை. உடனே ஆட்டோ பிடித்து அரசினர் தோட்டத்தை அடைந்தேன். மற்ற பத்திரிகையாளர்களுடன் தஞ்சைப் பயணத்தில் கலந்து கொண்டேன்.
நெடுநாள் முன்பு வேறோர் நிகழ்ச்சி –
அப்போதும் நான் அதே தெருவில் – வேறு ஜாகையில் வசித்தேன். அலுவலகம் மயிலாப்பூரில்; தடம் எண் 12 – பஸ்ஸில்தான் தினமும் போய்வருவேன். வழக்கம் போல் காலை 10 மணி அளவில் அலுவலகம் செல்லப் புறப்பட்டேன். போக்குவரத்து நெரிசல் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை.
நான் இந்தச் சிறகிலிருந்து எதிர்ச் சிறகு நடைமேடையை எட்ட வேண்டும். 213 பேர் சாலையைக் கடக்க இருந்தார்கள். நான் அவர்களோடு சேர்ந்து கொண்டேன். அவர்கள் விறுவிறு வென்று நடத்து முன்னே சென்றுவிட்டார்கள். அப்போது வேகமாய் வந்த ஸ்கூட்டர் என் மீது மோதி நடுச்சாலையில் விழுந்தேன்; கண்ணை இருட்டியது; சில நிமிடங்களில் யாரோ என்னை எழுப்பிவிட்டார். சுற்று முற்றும் பார்த்தேன். மந்திரம் போட்டாற்போல் அத்தனை வண்டி வாகனங்களும் அப்படி அப்படியே நின்றன.
எதிரே நடைமேடைப் பிள்ளையார் தென்பட்டார்.
அந்த மனிதர் என் கைப்பையை எடுத்துதர சுதாரித்துக் கொண்டேன். நேரே நடைமேடைப் பிள்ளையார் முன் நின்று விபூதியை இட்டுக் கொண்டேன். நலிந்த வேட்டி சட்டையோடுதான் அன்று அலுவலகம் சென்றேன்.
தி- நகர் பஸ் நிலைய நடைமேடைப் பிள்ளையார் இன்று அளவும் அதே குச்சுக் கோயிலில்தான் குடியிருக்கிறார்; அருள் பாலிக்கிறார். அனைத்தையும் கண்காணிக்கிறார்.