திருவரங்கம் வைகுண்ட ஏகாதசித் திருவிழா – அனுபவம் பகுதி-1

இந்த வருட வைகுண்ட ஏகாதசி தரிசனம்… மேலும் சில அனுபவங்களைத் தந்தது. 

முன்பெல்லாம்…. நள்ளிரவு நேரத்தில் ஆலயத்தின் உள்ளே செல்வோம். அமர்ந்து கொள்வோம். அதிகாலை பெருமாள் எழுந்தருளச் செய்யும் போது… சற்று அனுபவித்து… பரமபத வாசல் திறந்த பின்னர் காத்திருந்து… பின்னர் வெளிவருவோம். ஆயிரங்கால் மண்டபத்தில் பெருமாள் வீற்றிருப்பார். தரிசிப்போம்… நம்பெருமாள் திருமேனி அழகை அனுபவித்தபடி! திருப்பவள செவ்வாயின் இரு புறமும் பள்ளம் விழ, பெருமாள் உதடு குவித்து சிரிப்பது போலே வாவென்று அழைப்பார். பேசும் பெருமாள்தான்!
எதிரே மற்றும் அடுத்து உள்ள மணல் வெளியில் பக்தர்கள் இரவு நேரத்தில் ஆற அமர ஓய்வு எடுத்து பின்னர் செல்வார்கள். எல்லாம் சுற்று வட்டார கிராமங்களில் இருந்து வரும் அரங்கனின் அசையாத பக்தர் குழாங்கள். இப்போது அந்த அப்பாவி முகங்களை அதிகம் பார்க்க முடியவில்லை! பேசும் பெருமாள் முன்னும் சற்றும் நிற்க முடிவதில்லை!
***
வைகையில் இருந்து இறங்கி, ஞாயிறு நேற்று மாலை திருவரங்க நகருக்குள் நுழையும்போதே… போலீஸ் கெடுபிடி இருப்பதை உணர்ந்தேன்! நண்பர் விஜயராகவன் கிருஷ்ணனை அழைத்தேன். தெற்கு கோபுரம் வந்து வண்டியில் அழைத்துச் சென்றார். பஜ்ஜி காபி உபசாரம் வேறு! பேசிக் கொண்டிருந்துவிட்டு, இருவரும் அரங்கன் ஆலயத்துக்குள் சென்றோம். வெளியில் இருந்த கெடுபிடியும் கூட்டமும் உள்ளே இல்லை என்பதை உணர வெகு நேரம் பிடிக்கவில்லை! மோஹினி அலங்கார தரிசனத்தை கண்குளிரக் கண்டு, ஆசார்ய சுவாமிகளுக்கு பரிவட்டம், மாலை சாற்றியும், ஆழ்வார்களுக்கு அரங்கன் கொடுக்கும் மரியாதையும் கண்டு திருப்தியுற்றவனாய் வெளியில் வந்தேன்.
***
உள்ளே கூட்டம்… பயங்கர கூட்டம்… போகாதீங்க! இருங்க ! காலைல வாங்க! இப்போ ரூ. 3 ஆயிரம் டிக்கெட் வாங்கினவங்க மட்டுமே உள்ளே போலாம்.. இலவச தரிசனம்லாம் காலை 6 மணிக்கு மேல்தான். கோயிலில் கூட்டம் நிறைஞ்சாச்சு… இனிமே உள்ளே போக வழியில்லை என்றெல்லாம் போலீஸார் சொல்லிக் கொண்டும், மக்களை உள்ளேயே விடாமல் செய்து கொண்டும் இருந்தார்கள்.
இத்தனைக்கும் கோயில் பாதுகாப்பில் 4 ஆயிரம் போலீஸார். கோயிலுக்கு உள்ளேயே 2,500க்கும் மேற்பட்ட போலீஸார். ஆனால், உள்ளே பக்தர் கூட்டமே வழக்கமான கூட்டத்தில் 3ல் 2 பங்குதான்! ஏன் இவ்வளவு போலீசார் என்று விசாரித்தால்… ஏதோ வெடி குண்டு மிரட்டலாம்… 3 ஆயிரம் பேர் பாதுகாப்புக்கு என்று அனுமதித்து, மிரட்டல் காரணத்தால் கூடுதலாக ஆயிரம் பேர் பாதுகாப்புக்கு அமர்த்தப் பட்டார்களாம்…
எங்கு நோக்கினும் காக்கிச் சட்டைகளே தெரிந்தார்கள் – கோயில் என்பதால் இருக்க்க வேண்டிய காவித் துண்டுகளுக்கு பதிலாக! ‘
***
உள்ளூர் மக்கள் பெரும்பாலும் கோயிலுக்கு உள்ளே செல்வதைத் தவிர்த்து விட்டிருக்கிறார்கள். நாங்கள் நாளை அல்லது ராப்பத்து நாளில் போய் பார்த்துக் கொள்கிறோம் என்று ஒதுங்கியிருந்தார்கள். நண்பர்கள் ஓரிருவரை உடன் அழைத்தேன். மறுதலித்தார்கள். சரி என்று, இரவு தங்கிக் கொள்ள சிற்றப்பா வீட்டுக்குச் சென்றுவிட்டேன்!